ஊடக வெளிகளும் பெண்களுடைய சவால்களும்

இன்றைய காலகட்டத்தில் ஊடகம் என்று அணுகுகின்ற போது வானொலி தொலைக்காட்சி உட்பட சமூக வலைத்தளங்களையும் கருத்தில் கொண்டு அணுக இயலும். இவ்வாறான சமூக முன்றலில் நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் ஊடகங்களுடன் பிணைக்கப்பட்டே இருக்கின்றோம். கடந்த காலங்களுடன் ஒப்பிட்டு நோக்குகின்ற போது பெண்கள் ஊடக வாயிலாக சமூகத்தை சந்திக்கும் வாய்ப்புக்கள் மென்மேலும் வசதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்கள் பாரம்பரிய ஊடகங்களை தாண்டியும் சமூக வலைத்தளங்களில் தத்தமது ஆளுமைகளையும் கருந்துப்பரிமாற்றங்களையும் மேற்கொண்டு வருகின்றமை அதிகரித்துள்ளமையானது வரவேற்கத்தக்கது. அனைத்து துறைகளிலும் தத்தமது இயலுமைகளை வெளிப்படுத்தும் பெண்கள், ஆண்மையக் கட்டமைப்புள்ள சமுதாயத்தில் தமக்கான இடத்தைத் தக்கவைப்பதற்கு சற்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கின்றதுடன் அவர்கள் தம் துறைசார்ந்த ஆளுமையை வளர்க்க வேண்டியதும் அவசியமாகின்றது.

அவ்வகையில் முதலாவதாக பத்திரிகை, வானொலி மற்றும் தொலைக்காட்சி முதலான ஊடகத்துறைகளில் பெண்களுடைய பங்குபற்றுதல்கள் தொடர்பில் அணுகுகின்ற போது உலகளாவிய ரீதியில் செய்தி ஊடக நிறுவனங்கள் தொடர்பான ஆய்வுக்குழுவொன்றின் புதிய புள்ளிவிபரங்களின்படி, ஆண்களை விட மிகவும் குறைவான பெண்களே ஊடகங்களின் வழியாக சமூக வெளியில் வெளிப்படுகின்றார்கள். உலக சனத்தொகையில் அரைவாசியாக உள்ள பெண்கள் ஏன் ஊடகத்துறையில் மட்டும் கால்பதிப்பது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருக்கின்றது என்று அணுகினால் அதற்கு எங்களுடைய சமூக கண்ணோட்டங்களும் எதிர்மறை விமர்சனங்களும் முக்கிய  காரணமாக இருக்கின்றது. 2011ஆம் ஆண்டு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் 31 அச்சு ஊடக நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 192 பெண் ஊடகவியலாளர்களும் 464 ஆண் ஊடகவியலாளர்களும் இருப்பதாகக் கூறுகின்றது. அதாவது, 29.5 வீதமான பெண்களே ஊடகவியலாளர்களாக  இருக்கிறார்கள்.

எவ்வாறாயினும் இன்றைய ஊடகங்களின் பெரும்பாலான வெற்றியில் பெண்கள் பாரிய பங்களிப்பை செலுத்தி வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளில் ஊடகங்களில் பெண்களின் வகிபங்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.  ஆயினும், ஒப்பீட்டளவில் ஆண்களை விட பெண்களுடைய பங்களிப்பு குறைவாகவே உள்ளது என்பதை ஆய்வுகள் அடையாளப்படுத்துகின்றன. இவ்வகையில் இலங்கையை எடுத்து நோக்கினால் பெண்கள் ஊடகத்துறையில் பங்பகளிப்புக்களைச் செலுத்தி வருகின்றமை அறியமுடிகிற போதிலும்  அத்தகைய பங்களிப்புக்கள் திருப்திகர அளவில் அமையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் ஆங்கில மற்றும் சிங்கள ஊடகத்துறையில் அதிக பெண்கள் ஊடகவியலாளர்களாக பணியாற்றுகின்ற அதேசமயம் குறிப்பாக தமிழ் முஸ்லிம் பெண்கள் பங்குபற்றுவது குறைவு என்பது களையப்படவேண்டும். தலைமைத்துவம் எனும்போது ஆண் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளும் சமூகம் பெண் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதில்லை. அதிகாரம் மிக்க பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளும் பெண்களை தவறானவளாகவும் அடாவடி மனப்பாங்கு மிக்கவளாகவும் அணுகின்ற நிலை இன்னும் மாறவில்லை. பெண் என்பவள் மென்மையானவள், கீழ்படிந்து நடக்கவேண்டியவள் என்றே இச் சமூக அணுகுதல்கள் அமைகின்றது. 

ஊடகத்துறையில் தத்தமது கால்தடங்களை பதித்துள்ள பெண்கள் மிகச்சிறந்த முறையில் தத்தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர் அதேவேளை அதே திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய ஏராளமான பெண்கள் திரைமறைவில் இருக்கின்றனர். இலத்திரனியல் ஊடகத்துறையில் பெண்களின் அடைவுகள் குறைந்தமட்டத்தில் காணப்படுவதில் ஆணாதிக்க கருத்தியல்கள், குடும்பம், மற்றும் பெண் தொடர்பான சமூகப் பார்வைகள், கலாச்சார எண்ணக்கருக்கள் ஆகிய காரணங்கள் பிரதானமாகச் செல்வாக்குச் செலுத்துகின்றன. எனவே பெண்கள் ஊடகத்துறையில் அடைவுகளைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான நடைமுறைச் சாத்தியக் கொள்கைகளை உருவாக்கவேண்டும் என்பது புலப்பட்டு நிற்கின்றது. சர்வதேச ரீதியில் ஊடகத்துறையில் பெண்கள் எப்படி தங்களது பங்களிப்பைச் செய்கின்றார்கள் என்று 2014இல் சர்வதேச பெண்கள் ஊடக அமைப்பு (IWMF), ஊடகத்தில் பணிபுரியும் 1000 பெண்களிடம் கருத்து கேட்ட போது, அதில் 350க்கு மேற்பட்ட ஊடகப் பெண்கள், “நாங்கள் எமது ஊடகப் பயணத்தில் நிறைய சாவல்களைச் சந்தித்திருக்கிறோம்” என்பதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் கடந்த 25 ஆண்டுகளில் ஊடகங்களில் பெண்களின் வகிபங்கு பாரியளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. தற்போது அதிகளவான பெண்கள் ஊடகத்துறையை தமது தொழிற்துறையாக தெரிவு செய்து கொள்வதுடன், ஊடகவியல் சார் கற்கைநெறிகளையும் தொடர்வதோடு பெண் செய்தி ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஆயினும் கடினமான மற்றும் சிக்கலான செய்தி அறிக்கையிடலுக்கு ஆண்களின் பங்களிப்பு அவசியமானது என்றும் ஆண்களால் மட்டுமே தரமான செய்திகளை சமர்ப்பிக்க முடியும் என்பதே இன்னமும் உலக நிலைப்பாடகக் காணப்படுகின்றது. பால்நிலை சமத்துவத்திற்காக ஊடகவியலாளர்கள் குரல்கொடுக்க வேண்டும். பால் நிலை சமத்துவம் என்பது பெண்களின் பிரச்சினையாக கருதுவதை விடுத்து ஒடுக்குமுறைகளை இல்லாதொழிப்பதன் மூலம் அனைவருமே நன்மை அடையமுடியும் என்ற கருத்து வலுப்பெற வேண்டும்.

உலகளாவிய ரீதியில் ஊடகங்களில் பணிபுரியும் ஏறத்தாழ 977 பெண்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் கொலை மிரட்டல் மற்றும் பாலியல் சீண்டல் களுக்கு உள்ளாவதாகவும், சர்வதேச ஊடகப் பெண்கள் அமைப்பு International Women’s Media Foundation தெரிவிக்கின்றது. இவ்வாறான அச்சுறுத்தல்களை ஊடக நிறுவனங்கள் கருத்திற் கொண்டு ஊடகத்துறை பெண்களுக்கான பாதுகாப்பு நிலைப்பாட்டை உறுதி செய்தல் அவசியமானது. அத்துடன் பெண் செய்தியாளர்கள் வெளியிடும் செய்திகளில்  யாருக்கேனும் உடன்பாடில்லை என்றால் உடனே அவர்களை தேச விரோதிகள் என்றும் மத விரோதிகள் என்று கூறுவதுடன் கொலை மிரட்டல்கள், பயமுறுத்தல்கள் விடுப்பதும், பணிநீக்கம் செய்ய தூண்டுவதும், பாலியல் சீண்டல்கள் மற்றும் நடத்தை சார்ந்த அவதூறுகளை (Character Assassination) சமூக வலைதளங்கள் மற்றும் பொதுவெளியில் பரப்பும் போக்கும் பெண்களுடைய ஊடக பங்குபற்றற் பின்னடைவுக்கான காரணியாக இருக்கக்கூடும். ஊடகத்துறைகளில் பரவலான ஒடுக்குமுறைகள், வளப்பற்றாக்குறை, பொருளாதார வாய்ப்புக்களை வழங்காமை, சம்பளம் சுரண்டல்கள், தீர்மானம் நிறைவேற்றும் பணிகளில் வரையறுக்கப்பட்ட வாய்ப்புக்களை மட்டும் வழங்குதல் போன்ற காரணிகளினால் பெண்கள் தொடர்ந்தும் மோசமாக பிற்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் 76 சதவீத மக்கள், ஆண்களின் செய்திகளைத்தான் படிக்கின்றனர் அல்லது கேட்கின்றனர். ஊடகங்கள் மூலம் சமூகத்தில் பாரிய மாற்றங்களையும் தாக்கங்களையும் ஏற்படுத்த இயலும் என்பது நிதர்சனமான உண்மை. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் பெண்கள் சார்ந்த பிரச்சனைகளையும் பெண்களுடைய உரிமைகளை பெறுவதற்கான தேவைகளையும் பெண்களே உரக்க எடுத்துக்கூற இயலும், அதற்கான ஊடக வெளிகளை தருமளவிற்கு சமூக ரீதியான மாற்றங்கள் அவசியமானதும் ஆரோக்கியமானதும் கூட. பெண்கள் ஊடகத்துறையில் செல்வாக்கு செலுத்துதலானது பாலின சமத்துவம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை ஊக்குவிப்பதற்கும் வாய்ப்பாக அமையும் என ஐநா சபை வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. ஊடகத்துறையில் பெண்கள் துணிச்சலுடன் தமது முழுமையான பங்களிப்பை வழங்குவதன் மூலமே அவர்களுடைய கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க முடியுமென்பது திண்ணம். பெண்கள் தமது சொந்த உரிமைகளின் அடிப்படையில் சுதந்திரமாக தனித்து இயங்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.

ஊடகத்துறையை தேர்ந்தெடுக்க பெண்கள் பின்னிப்பதற்கும் குடும்ப தடைகள் அதிகரிப்பதற்கும் பிரதான காரணத்தில் ஒன்றாக ஊடக நிறுவனங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் சிக்கல்களையும் குறிப்பிட முடியும். எந்தத் துறையாக இருந்தாலும், அதில் பெண்கள் சாதிக்க வேண்டும் என்றால், ஆண்களை காட்டிலும் சற்று விழிப்பாகவே இருக்க வேண்டியிருக்கும். பணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் சவால்களும் அதிகமே. பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் தாக்குதல்களை எல்லாம் தாண்டிதான் வேலை செய்ய வேண்டியுள்ளது. இதில் ஊடகத்துறையும் விதிவிலக்கல்லவே. உலக நடப்புகள் வன்முறைகளை ஊடகங்கள் உலகிற்கு வெளிப்படுத்தினாலும் ஊடகங்களுக்குள் பெண்கள் மீதான பிறழ்வான அணுகுமுறைகள் பொதுவெளியில் கொண்டுவரப்படுவது மிக அரிதே. ஆக அலுவலகங்களுக்கு உள்ளேயும் வெளியேவும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஊடக நிறுவனங்கள் உருவாக்க வேண்டும்.

ஊடகத்துறைகளில் பெண்களிற்கெதிரான உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகள் களையப்பட வேண்டும் எனில் குறித்த துறையில் பெண்களுடைய பங்குபற்றுதல்கள் உயர்வாக இருத்தல் அவசியம். அதற்கு பெண்கள் முன்வருதலும் இன்றியமையாதது. ஊடகத்துறையில் முடிவெடுக்கும் இடத்தில் பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்பட வேண்டும். பல ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் இன்றும் ஆண்கள்தான் பெரும்பாலும் ஆசிரியர் பதவி மற்றும் இறுதி முடிவு எடுக்கும் பதவிகளில் இருக்கின்றார்கள். ஊடகங்களில் பெரும்பாலும் பெண்களை சமையல் பகுதி, விளம்பரப்பகுதி, தலைப்பகுதி உள்ளிட்டவைகளிலேயே அதிகமாக காணக்கூடியதாக உள்ளது. நிகழ்ச்சி தொகுப்பு மட்டும் அல்லாமல் பெண்களுக்கான விசேட நிகழ்ச்சிகளில் அழக்குக் கலை மற்றும் ஆடை வடிவமைப்பு போன்ற கருப்பொருள்கள் தொடர்பிலேயே ஒளிபரப்புச் செய்யப்படுகின்றன. அநேகமான சஞ்சிகைகள் மற்றும் குறும் பத்திரிகைகளின் முன் அட்டைப் படத்தை பெண்களைக் கொண்டு அலங்கரித்துக் கொள்வதாகவே இன்னமும் அமைகின்றது.

அதிகளவு பெண் ஊடகவியலாளர்களை உள்ளடக்கிய ரஸ்யா, சுவீடன் போன்ற நாடுகளில் கூட செய்தி அறிக்கையிடும் பணிகளில் பெண்களுக்கு சம சந்தர்ப்பம் அளிக்கப்படுவதில்லை. வணிகம், விளையாட்டு மற்றும் அரசியல் பகுதிகளில் காணுதல் என்பது மிக அரிதே. தொழில்வாண்மையுள்ள பெண்களை, வர்த்தக முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பெண்களை, கிராமியப் பெண்களை ஊடகங்களில் காணமுடிவதில்லை. ஊடகங்களானது மக்களுடைய கருத்துருவாக்கத்தில் பாரிய செல்வாக்குச் செலுத்துகின்றன. இவை சமத்துவமின்மையைச் தொடரச் செய்கின்றன. பெரும்பாலான நாடுகளில் செய்தி சேகரிப்பு மற்றும் முகாமைத்துவ பொறுப்புக்களில் பெரும்பான்மையாக ஆண்களே வகித்து வருகின்றனர். அத்துடன் 73 வீதமான முக்கிய நிர்வாக மற்றும் முகாமைத்துவ பதவிகளை ஆண்கள் வகிப்பதுடன், 27 வீதமான பதவிகளை பெண்கள் வகித்து வருகின்றனர். ஆசிய பசுபிக் பிராந்திய வலயத்தில் 13 வீதமான பெண்களே ஊடகத்துறையில் சிரேஸ்ட முகாமைத்துவ பதவிகளை வகிக்கின்றனர் என ஆய்வறிக்கையில் குறிப்பிடுகின்றன. ஊடகங்கள் பால்நிலை சமத்துவத்தை மேம்படுத்த வேண்டியது மிகவும் இன்றியமையாதது. ஆக ஆண்கள் மட்டும் அன்றி பெண்களையும் உயர்பதவிகள் மற்றும் அனைத்து துறைசார் நிகழ்ச்சிகளிலும் உள்வாங்குதல் ஆரோக்கியமானது.

ஊடகங்கள் சமூகத்தின் விம்பங்கள். ஊடக நிறுவனங்களிலேயே பால்நிலைச் சமத்துவம் இல்லாத போது அவர்கள் எவ்வாறு பால்நிலைச் சமத்துவம் பற்றிய புரிதலை சமூகத்திற்கு வழங்க முடியும். இவ்வாறான சிக்கல்கள் களைந்தெறிவதற்காக வளம் மிக்க திறமையான பெண் ஊடகவியலாளர்கள் உருவாகுவதை ஊக்குவிக்க வேண்டும். ஆங்கில மொழிமூலம் ஊடகத்துறைப்பட்டத்தை வழங்கும் திருகோணமலை வளாகத்தில் தமிழ்பேசும் பெண் மாணவிகளுடைய தொகை மிகக் குறைவாகவே உள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தை எடுத்துக்கொண்டோமானால் அங்கும் குறைந்தளவிலான தமிழ்பேசும் பெண்களே ஊடகக் கல்வியைத் தொடர்கின்றனர். இவ்வாறு இத்துறையில் கல்விகற்றவர்கள் கூட அத்துறைசார் பணியில் ஈடுபடாது இருக்கின்றமை கவலைக்குரிய விடயமாகும். இவை மட்டும் அல்லாமல் ஊடக பயணத்தில் பாதியிலேயே தமக்கான துறையை மாற்றிக்கொள்ளும் நிலையும் மாற்றப்படுதல் அவசியமானது. பெண்கள் தொடர்பான எழுத்து மற்றும் செய்திகள் என்று வரும்போது, பெண்களின் உடலரசியலைத் தாண்டி சராசரி பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும் நாம் பேசியாக வேண்டும். பெண்கள் குடும்பங்களிலும் வேலைத்தளங்களிலும் சமூக அரங்குகளிலும் எதிர்கொள்ளும் இன்னல்கள் நெருடல்கள் பற்றி ஊடகங்கள் வாயிலாக உரக்க கூறுவதற்கு ஆண்களை காட்டிலும் பெண்கள் முன்வருதல் அவசியமானது. 

ஊடக உயர் பதவிகளில் காலம் காலமாய் ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் ஒரு இடத்தை வெறுமனே நிரப்புவதற்காக மட்டுமே பெண்கள் போய் அமர்தல் என்பது ஆரோக்கியமற்றது. மாறாக பெண்கள் அர்ப்பணிப்புடனும் இன்னும் பலரை ஊக்குவிக்கும் முகமாகவும் செயற்படுதல் வேண்டும். அத்துடன் பெரும்பாலான ஊடக நிறுவனங்களில் பெண்களை காட்டிலும் ஆண்களுக்கே உயர் சம்பளம் எனும் சமத்துவமற்ற தன்மையும் நெருடலாக உள்ளது. இந்நிலை மாற்றமடைந்து செய்யும் வேலைக்கு தகுந்த ஊதியமெனும் நிலை உருவாக்கப்படுதல் அவசியமானது. இவை மட்டும் அல்லாது, பத்திரிகையில் செய்திகளை வெளியிடும் போது கருத்துச் சுதந்திரம், பாரபட்சமின்றி செய்திகளை வெளியிடும் தன்மை, துணிச்சல் என்பன வேண்டும். எழுத்துத் திறமை இலகுவில் எவருக்கும் கிடைப்பதில்லை. ஆனால், அதை வைத்து தங்கள் பேனாக்களை உரியவாறு பயன்படுத்த வேண்டும். இதனை பெண்கள் சாதுரியமாக கையாளுவதற்கு முன்வருதல் நன்று.

அனைவருக்கான உரிமைகளுக்காகவும், அபிவிருத்திக்காகவும் போராடும் வேர்களை ஊடகவியல் தன்னகத்தே தாங்கி நிற்கின்றது. மரபு ரீதியான தவறுகளை நாம் அப்படியே சகித்துக் கொண்டால் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பே கிடையாது. அவை மேலும் அதிகரிக்குமே தவிர, குறைவடையாது. ஆக இச்சமூகத்தில் பாரிய அளவு மாற்றங்களை கொண்டுவர பிரதான அம்சமாக இருக்கும் ஊடகத்துறையில் மாற்றங்களை கொண்டுவருதல் அவசியமானது. சமூக பிரச்சனைகளின் ஜதார்த்த நிலையையும் அடிமட்ட பிரச்சனைகளுடைய விம்பங்களையும் வெளிக்கொணர ஊடக வாயிலாக பெண்களின் குரல் ஓங்குதல் வேண்டும். பெண்கள் பரந்துபட்ட தலைப்புகளில் நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளை தொகுத்து வழங்க முன்வருதல் அவசியமானது. அத்துடன் ஊடக நிறுவனங்களும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சம அளவிலான சம்பளம், சம அளவிலான தொழில் வாய்ப்பு, சம அளவில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் போன்றவற்றை உறுதிசெய்ய வேண்டும்.  ஆரோக்கியமான பால்நிலை வேறுபாடுகளற்ற நடுநிலையான ஒரு ஊடகமானது மாபெரும் சமூக விழிப்பை விதைக்க வல்லது. குடும்பங்கள் மற்றும் சமூக கண்ணோட்டங்களும் நம்பிக்கைகளும் மாறிய பின்னர் தான் பெண்கள் ஊடக வெளிக்கு வர இயலும் என்ற கருத்தினை களைந்தெறிய பெண்கள் தான் போராட வேண்டும். சவால்களை ஏற்றுக்கொண்டு தமக்கான நகர்தல்கள் மூலமே தத்தமது நிலைத்திருகைகளை நிலைபெறச் செய்தல் முடியும்.

டினோஜா நவரட்ணராஜா

The views expressed on this blog post are those of the author and do not reflect the official position of Hashtag Generation | இந்த வலைப்பதிவு இடுகையில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் அனைத்தும் உரிய ஆசிரியரின்/படைப்பாளியின் கருத்துக்களேயாகும். இவை ஹேஸ்டேக் தலைமுறையின் உத்தியோகபூர்வ நிலையை பிரதிபலிக்கவில்லை.

Share this post

Related Projects

Fact Check

FACT CHECK : நியூசிலாந்து தனது மக்களை இலங்கைக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லுமா?

இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பில் அந்நாட்டு மக்களுக்கு குறிப்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நியூசிலாந்து அரசாங்கம் புதுப்பித்துள்ளதை கடந்த சில நாட்களாக அவதானிக்க முடிந்தது. இலங்கைக்கு …

Fact Check

FACT CHECK : Did New Zealand tell its residents not to visit Sri Lanka?

During the past couple of days, it has been observed that posts are being circulated on social media platforms displaying …

Fact Check

FACT CHECK : නවසීලන්තය එරට වැසියන්ට ශ්‍රී ලංකාවට යන්න එපා කියයි ?

ශ්‍රී ලංකාවේ සංචාරය කිරීම සම්බන්ධයෙන් නවසීලන්ත රජය එරට වැසියන්ට, විශේෂයෙන්ම සංචාරකයන්ට ලබාදෙන උපදෙස් යාවත්කාලීන කර ඇතැයි කියැවෙන සටහන් සමාජ මාධ්‍ය තුළ …

Uncategorized

අන්තර්ජාලය වසා දැමීමක් (Internet Shutdown) යනු කුමක්ද?

(දකුණු සහ අග්නිදිග ආසියාතික සිවිල් සමාජයන් සඳහා මාර්ගෝපදේශයකි) URL: https://engagemedia.org/2022/internet-shutdowns-south-southeast-asia/  ඩිජිටල්කරණයට ලක් වී ඇති වත්මන් සමාජය තුළ, අන්තර්ජාලයට ප්‍රවේශ වීම …

Fact Check

FACT CHECK : විෂාදය කියන්නේ බොරුවක් ද?

විෂාදය සම්බන්ධයෙන් මෙලෙස අලුත් වටයකින් කතාබහක් ඇති වූයේ ඇන්ඩෘ ටේට් නැමැත්තා මීට පෙර අවස්ථා කිහිපයකදී විෂාදය සම්බන්ධයෙන් පළ කළ අදහස් …

Fact Check

FACT CHECK : උප්පැන්න සහතික වෙනුවට මරණ සහතික අයදුම්පත් නිකුත් කළා ද?

“උප්පැන්න සහතික අයදුම්පත් අවසන් වී ඇති බැවින් මරණ සහතික අයදුම්පතෙහි උප්පැන්න බව සඳහන් කොට අවශ්‍ය තොරතුරු පුරවන්න”  යනුවෙන් සඳහන් කළ …