கண் துடைப்பாகும் பெண்கள் பிரதிநிதித்துவம்
பெண்களின் அரசியல் பங்களிப்பு எனும் சொல் மிகப் பரந்துபட்டது.இச் சொல் வாக்களிப்பு உரிமையை மாத்திரம் குறிப்பதன்று. மாறாக முடிவெடுக்கும் நடவடிக்கைகள், அரசியல் செயல்பாடுகள், அரசியல் விழிப்புணர்வு ஆகியவற்றையும் தெளிவுபடுத்துவதாக அமைந்துள்ளது.
இலங்கை சர்வஜன வாக்குரிமையை அடைந்தது இன்றைக்கு எட்டு தசாப்தங்களுக்கு முன்னராகும்.இது நாட்டின் நீண்டகால ஜனநாயக ரீதியான ஆளுகை முறைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. இதன் மூலம் வழங்கப்பட்ட விசேடமான வரமாக இருப்பது 21 வயதுக்கு மேற்பட்ட ஆண்-பெண் இருபாலருக்கும் கிடைத்த வாக்குரிமைப் பலமாகும். இது ஒரு வகையில் ஆண் – பெண் இருபாலருக்கும் கிடைத்திருப்பினும், இந் நாட்டின் தேர்தல் அறிக்கையை பார்க்கும் போது பெண்களுக்கான பிரதிநிதித்துவ வீதத்தில் குறைபாடு நிலவுகின்றதென்பது தெளிவாக உள்ளது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் பெண்கள் அரசியலில் ஈடுபடுகின்ற வீதம் குறைவாகவே இருக்கின்றது.
இதன் அடிப்படையாக அமைகின்ற காரணங்களில் பல இந்நாட்டில் அமுலில் உள்ள தேர்தல் முறையானது பெண்களின் அரசியலை மேம்படுத்துகின்றவாறான அமைப்பை கொண்டதாக உருவாக்கப்படாமையாகும்.எனவே பெரும்பாலான பெண் அரசியல் ஆர்வலர்கள் இந் நாட்டின் அரசியலை அறிமுகம் செய்வதற்குப் பயன்படுத்துகின்ற ஒரு பதமாக இருப்பது எட்டு தசாப்தகால ஆண்களின் ஆளுகை என்பதாகும். புள்ளிவிபர ரீதியில் நோக்கும் போது இந் நாட்டில் ஆட்சி செய்து, சட்டவாக்கத்துக்கு பங்களிப்புச் செய்கின்ற பெண் பிரதிநிதிகளின் அரசியல் பிரதிநிதித்துவம் எந்தளவு பலவீனமானது என்பதை உணரமுடிகின்றது.
இவ்வாறான பலவீனமான பிரதிநிதித்துவத்தை உருவாக்குவதற்குக் காரணமாகின்ற பல விடயங்கள் உள்ளன.எனினும் அது தொடர்பில் நாம் ஓரங்கட்ட முடியாத ஒரு காரணியாக இருப்பது இந் நாட்டில் அமுலில் உள்ள தேர்தல் முறையின் தனித்துவமான தன்மையாகும்.
இது சுயமாகவே பெண்களின் அரசியல் பிரவேசத்தை பலவீனப்படுத்துவதாக உள்ளது என்பதை பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள் அவதானிப்புச் செய்துள்ளனர். இதன் பெறுபேறாக இருப்பது கலப்புத் தேர்தல் முறையைக் கொண்ட புதிய முறையொன்றை இந் நாட்டின் உள்ளூராட்சித் தேர்தலுக்கு அறிமுகம் செய்வதாகும்.அதாவது 2012 இன் 22ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமாகும்.மேற்படி சட்டம் இந் நாட்டின் தேர்தல் செயன்முறையில் புதியதொரு திசையில் பயணிக்கச் செய்வதை பதிவு செய்துள்ளது.இது இந் நாட்டு மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த கிராமத்திற்கு நெருக்கமான பிரதிநிதி ஒருவரை உருவாக்குவதற்கு வாய்ப்பை செய்து கொடுப்பதாக அமைந்துள்ளது.எனினும் மேற்படி செயன்முறை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விமர்சனங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இதில் முக்கியமானதொரு விமர்சனமாக இருப்பது இவை நாட்டின் இருகட்சி முறையை உறுதி செய்வதாக அமையும் என்பதாகும்.இந்த விடயங்கள் உள்ளடங்கலாக புள்ளிவிபர ரீதியீல் சிறிய பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ள கட்சிகளுக்கும் ஒரளவு இடவசதிகளை செய்து கொடுக்கும் நோக்கத்துடன் அவ்வாறு அறிமுகம் செய்யப்பட்ட முறையிலும் ஒரு சில திருத்தங்கள் செய்யப்பட்டன. இதன் பெறுபேறாக பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட 2017இன் 16ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் திருத்தச் சட்டம் உருவானது எனலாம்.
இலங்கை பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவ வீதம் குறைவாக இருப்பதற்கான காரணத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் உமா சந்திர பிரகாஷ் பின்வருமாறு கூறுகிறார்,
இலங்கையில் பெண்களுக்கான அரசியல் என்பது இன்னும் ஒரு தடுமாற்றமான, ஒரு நிலையற்ற ஒரு களமாக இருப்பது கவலைக்குரிய ஒரு விடயமாகும். உலகின் முதலாவது பெண் பிரதமரையும் ஒரே நேரத்தில் ஐனாதிபதி பிரதமர் என்று இரண்டு முக்கிய பொறுப்புகளை இரண்டு பெண்கள் தங்களுடைய வசம் வைத்திருந்த பெருமை கொண்ட ஒரு நாடாகவும் இலங்கை இருக்கிறது. ஆனாலும் இன்று வரை ஒரு மத்திய தர குடும்பப் பெண்ணுக்கோ அல்லது வருமானம் குறைந்த ஒரு பெண்ணுக்கு அரசியல் என்பது இன்று வரை எட்டாக்கனியாக இருக்கிறது. இதற்கு பல விடயங்கள் காரணமாக இருக்கிறது. மிகப்பெரிய பலம் பெறும் கட்சிகளாகட்டும் அல்லது அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட கட்சிகளாகட்டும் அனைத்து கட்சிகளும் தங்களுடைய பிரதிதிகள் குறிப்பாக ஆண் பிரதிதிகளின் வாக்குகளை சேகரிக்கின்ற ஒரு கட்டமைப்பாகத்தான் பெண்களை வைத்திருக்கிறார்கள். இலங்கையில் 50% அதிகமான சனத்தொகையில் பெண்களின் பிரதிநிதித்துவமே இருக்கின்றது. அதேபோல் வாக்களிப்பு வீதத்திலும் 50% அதிகமான சதவீதம் பெண்கள் மத்தியிலே இருக்கிறது. வாக்களிக்க கூடிய தகைமை கொண்ட பெண்களாக இருக்கிறார்கள் ஆனாலும் இவர்கள் துர்அதிஷ்டவசமாக வாக்கு சேகரிப்பாளராகவும் அல்லது அரசியலில் அடிமட்ட வேலைகளை பார்க்க கூடியவர்களாக மக்களோடு மக்களாக உரைடாடி மக்களுடைய வாக்குகளை கவர்ந்து தங்கள் சார்பாக தாங்கள் பெற்றுக் கொடுக்கின்ற வாக்குகள் சார்பாக ஒருவரை உள்ளூர் ஆட்சி சபைக்கோ அல்லது மாகாண சபைக்கோ அல்லது பாராளுமன்றத்திற்கு அனுப்பக் கூடியவர்களாக தான் பெரும்பாலான பெண்கள் இருக்கிறார்கள்.இதனை நான் ஒரு குற்றச்சாட்டாக கூறவில்லை. 2018 ஆம் ஆண்டு மிக அதிஷ்டவசமாக உள்ளூராட்சி சபை மட்டங்களில் பெண்களுக்கான வகிபாகம் 25 வீதம் என்ற ஒரு சட்டம் கொண்டு வரப்படும் போது பெரும்பாலான கட்சிகளிடம் வேட்பாளர்களின் பட்டியலை பூர்த்தி செய்வதற்கான ஆளுமைகளுடன் திறமையான பெண்கள் இல்லை என்பது ஒரு கவலைக்கிடமான விடயம். எனவே அவர்கள் வெளியிடங்களில் பல்துறை சார்ந்தவர்கள், ஆசிரியர்கள்,வங்கி தொழில் புரிபவர்கள்,ஊடகம், சட்டத்தரணிகள் என்று பல துறைகளில் இருக்கக் கூடிய பெண்களைதான் தேடி அந்த வேட்பாளர்கள் பட்டியலில் நிரப்பி இருந்தார்கள். இதற்கு மேலதிகமாக தங்களுடைய உறவினர்கள் அல்லது வெறுமனே பெயர் பட்டியலை நிரப்புவதற்காக பெயர் குறிப்பிடப்பட்ட பெண்களும் இருக்கிறார்கள். எனவே இவை எதனை எடுத்துக் காட்டுகிறது என்று சொன்னால் இதுவரை காலமும் எந்த ஒரு அரசியல் கட்சியும் பெண்களை அரசியலில் உள்வாங்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு அவர்களை வலுப்படுத்துவதற்கான நிகழ்ச்சிகளோ அல்லது அரசியல் சார்ந்த அறிவுகளை ஒரு சரியான விதத்தில் புகட்டுவதற்கு அவர்கள் இதுவரை எந்த ஒரு ஏற்பாடையும் செய்யவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. எனவே இந்த சட்டம் என்பது மத்தியதரக் குடும்பம் அல்லது வருமானம் குறைந்த குடும்பங்களில் இருந்து என்னைப்போன்று அரசியலுக்கு வர நினைக்கிற, குறிப்பாக சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு தமிழ் பேசுகின்ற மக்கள், அது தமிழர்களாக இருக்கலாம் அல்லது இஸ்லாமியர்களாக இருக்கலாம், எங்களுக்கு மொழி சார்ந்த சமயம் சார்ந்த கலாச்சாரம் சார்ந்த பல கட்டுப்பாடுகளுடனும் அரசியலில் பயணிப்பதற்கான ஒரு வாய்ப்பை கொடுப்பதற்கான ஒரு அங்கீகாரமாக நான் இந்த 25 வீத இட ஒதுக்கீட்டை பார்க்கின்றேன் என்கிறார்.
மனித உரிமை செயற்பாட்டாளர் நளினி ரட்னராஜா இவ்வாறு தெரிவித்திருந்தார்,
பாராளுமன்றத்தில் மட்டுமில்ல ஒட்டுமொத்த அரசியலிலும் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றது. அதில் முக்கிய காரணம் என்று பிரித்து சொல்ல முடியாது.முதலாவதாக இருப்பது பெண்ணின் வீட்டு சுமை.அதாவது வீட்டில் ஒரு பெண்ணானவள் எவ்வளவு படித்தவளாக இருந்தாலும், எந்த பணக்கார குடும்பமாக இருந்தாலும் ,எந்த நகரத்துல வாழ்ந்தாலும் எந்த கிராமத்தில் வாழ்ந்தாலும் பிள்ளைப் பராமரிப்பு, சமையல், வீட்டை பராமரிப்பது போன்ற பொறுப்புக்கள் பெண்களின் மீதே திணிக்கப்பட்டிருக்கிறது. இதற்குள் தான் எல்லோரும் இருக்கின்றோம். அது யாராக இருந்தாலும் சரி.நான் படிச்ச பொம்புல, படிக்காத பொம்புல, ஏழை, பணக்காரி, ஆங்கிலம் கதைக்கிறவ, ஆங்கிலம் கதைக்காதவங்க அதெல்லாம் இல்லை.விமானி தொடக்கம் நீதிபதி எல்லோரும் இந்த கட்டுபாட்டுக்குள் தான் இருக்கிறோம்.இது சமூகம் வகிக்கும் கட்டுப்பாடு.இதற்குள் இருக்குற பெண்ணுக்கு அரசியல் என்பது மிகவும் சவாலான பாதையாகவே உள்ளது. இலங்கை, இந்தியா நாடுகளில் இருக்கின்ற இந்த பாராளுமன்ற தேர்தல் முறையானது பணம் இருந்தால் தான் தேர்தலில் ஈடுபடலாம்.தேர்தல் பிரச்சாரம் செல்வதாயின் அதிகளவு பணம் வேண்டும். அனைத்திலும் பணம் தான்.ஆகவே இந்த பணத்தை மையப்படுத்திய பாராளுமன்ற தேர்தல் முறையும் பெண்களுக்கு ஏதுவானதாக இல்லை அத்தோடு வன்முறை செயல்கள் தேர்தல் காலத்திலும் தேர்தலுக்கு பின்னும் அல்லது தேர்தல் நடக்கும் போது இடம்பெறுகின்றது. இதுவும் பெண்களின் அரசியல் களத்திற்கு தடையாக இருக்கிறது.
இந்த அரசியல் என்பது ஆண்களின் தொழில் அல்லது ஆண்களால் தான் முடியும்.அவர்களுக்கு தான் உலக நடப்பு தெரியும்.பெண்களுக்கு ஒன்னும் தெரியாது என்ற ஒரு நிலைப்பாடும் சமூக மட்டத்தில் காணப்படுகிறது.1931 ம் ஆண்டு இலங்கையில் ஆணும் பெண்ணும் சமமாக வாக்கு அளிக்க உரிமை பெற்றிருந்தாலும் கிட்டத்தட்ட 90 வருடங்கள் கடந்த நிலையிலும் இன்றும் நாங்கள் 5.8 வீதத்தை கடக்கவில்லை என்பதே கவலையானது.
தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மன்ஜுல கஜநாயக்க இதுபற்றி கூறுகையில்,
விகிதாசார தேர்தல் முறையில் நாம் காணும் விடயமே, அனைத்து மாவட்டத்திலும் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும். அப்படியென்றால் பணம் இங்கு கட்டாயம் இருத்தல் வேண்டும். ஆள் பலம் இருத்தல் வேண்டும். இவர்கள் வன்முறைக்கு எதிரானவர்கள். பெரும் பிரதேசம் ஒன்றில் பெரும் பணத்தை செலவு செய்து செய்ய வேன்டிய முறையின் கீழ், உண்மையாகவே ஒரு பெண் முன் வருவது இலகுவான விடயம் அல்ல. பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவதற்கு இதுவும் ஒரு பிரதான காரணமாக இருக்கின்றது.
மற்ற விடயம் தான், சமூகத்தில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஆசிர்வாதம், அங்கீகாரம் அவர்களுக்கு கிடைப்பதா என்பது சந்தேகத்திற்கிடமானது. உதாரணமாக ஊடகங்கள் பெண்கள் மத்தியில் காணும் சிறிய குறைகளை பெரிதாக காட்டுவதேயன்றி ஒரு பெண் செய்யும் நல்லவற்றை சமூகத்திற்கு எடுத்து வைப்பதில்லை. இதை நாம் இன்று காண்கிறோம். இந்த தேர்தல் ஊடக அறிக்கைகள் மூலம், பெண்களை இச்சமூகம் வெறுப்பது மட்டுமில்லாமல், அவர்களுக்கு வாக்களிப்பதையும் தவிர்க்கிறார்கள் என்பது புலப்படுகிறது. நல்லெண்ணத்தோடு ஊடகங்கள் இதற்கு முன்வந்தால் பெண்களிற்கு முன் வருவது கடினமான விடயமாக இருக்காது. இதுவும் பெண்களின் பிரதிநிதித்துவத்தித்கு ஒரு பாரிய பாதிப்பாக இருப்பதை காணலாம்.
அடுத்தது, கட்சிகளினுள்ளே ஜனநாயக அரசியலை காணமுடியாது. அரசியலமைப்பில் முழு அதிகாரத்தையும் கொடுத்திருப்பது கட்சி தலைவருக்கு அல்லது கட்சி செயளாலருக்கு மாத்திரமே. அரசியல் கட்சிகளில் ஜனநாயகம் இல்லாததினால் பெண்களுக்கு முன்வருவதற்கு இருக்கும் அவகாசம் மிகவும் குறைவாகும். அப்படியே பெண்களுக்கு வாய்ப்பு வழங்கினாலும் அவள் தலைவர், செயளாலரின் சொந்தத்தில் இருப்பவளாகவோ அல்லது நன்கு தெரிந்தவளாகவோ தான் இருக்க வேண்டும். அரசியல் கட்சிகளிலே ஜனநாயகம் இல்லாதமை மற்றும் உயிரோட்டமாக செயல்படும் பெண்களின் அரசியல் கட்சி சம்மேளனங்கள் நடைபெறாததும் பெரிதாக பாதிக்கின்றது. சில பெண்கள் பல வருடங்களாக அரசியலில் இருப்பதும் இளம் பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்காமலிருப்பதற்கு ஒரு காரணமாகும். உதாரணமாக, பல்கலைக்கழக சோசலிச மாணவர் மன்றங்களிலே பெண்களின் பங்களிப்பு நன்றாகவே இருக்கின்றது. ஆனால், அரசியல் கட்சிகளிலே இவர்களை காண்பதற்கில்லை. இவர்களுக்கு என்ன நடக்கின்றது? நாம் அதை அவதானிக்க வேண்டும். கட்சிகள் அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில்லை. தீர்வுகள் எடுக்கும் முறைகளுக்கு அக்கட்சிகள் பெண்களை சம்பந்தப்படுத்துவதில்லை. அதனால், “அரசியல் கட்சிகளிலே குழு அங்கத்தவர்களுக்கு பெண்களின் பங்களிப்பு 1:4 விகிதம் இருக்க வேண்டும்” என்று தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிக்கை விடப்பட்டது. ஆனால், இலங்கையில் பதியப்பட்டிருக்கும் அரசியல் கட்சிகள் 76 இலும் இரண்டு அல்லது ஒரு கட்சியில் தான் பெண்களின் பங்களிப்பு இருக்கின்றது. நான் அறிந்த வரையில் அவர்களை தீர்மானம் மேற்கொள்ளும் பொறிமுறைக்கு சம்பந்தப்படாது மாவட்ட ரீதியாக நடாத்தும் சம்மேளனங்களுக்கு பெண்களை உபயோகித்து சமாளித்து விடுவார்கள். தேர்தல்கள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மீறி செயல்படுகின்றார்கள். பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்காமலிருப்பதற்கு இவைகளும் காரணங்களாகும்.
கப்கபே நிறுவனத்தின் தேசிய அமைப்பாளர் மனாஸ் மகீன் இது பற்றி கருத்துத் தெரிவிக்கையில்,
அரசியல் பிரச்சாரத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடிய காரணிகளில் பிரதானமாக சமூக வலைத்தளங்கள் இருக்கின்றது.கடந்த தேர்தல்களின் போது ஆண், பெண்களின் சமூக வலைத்தள பாவனையை ஒப்பிடுகின்ற போது பெண்களின் சமூக வலைத்தள பாவனை மிகக் குறைவாகவே இருக்கிறது.பெண் பிரதிநிதிகளை பார்க்கும் போது இன்னும் அவர்களுக்கென்று முகப்புத்தக கணக்கு கூட இல்லாது இருக்கின்றார்கள்.
வாக்காளர்களின் மனநிலையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் குறிப்பாக ஆண்களைப் போன்றே அரசியலில் பெண்களும் பிரதிநிதியாக உள்வாங்கப்படுகின்ற போது மக்களுக்கு தேவையான சட்டங்களை ஏற்றுக்கொள்வதற்குரிய தகுதியும்,திறமையும் மிக்கவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். பெண் அரசியல்வாதிகளாலும் முடியும் என்ற வாக்காளர்களின் மனநிலையில் ஒரு மாற்றத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
உள்ளூராட்சி மன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்துவதற்காக சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டதை போன்று பாராளுமன்றத்தில் தேர்தல் சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டு வந்து பெண்களுக்கென வீதாசார ரீதியாக ஒதுக்கப்படக்கூடிய பிரதிநிதிகளின் எண்ணிக்கையினை அதிகரிப்பிற்குரிய சட்ட ஏற்பாடுகள் முன்வைக்கப்பட்டு அதனை நடைமுறைப்படுத்துவதனூடாக பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க முடியும்.
அப்ரா அன்ஸார்
The views expressed on this blog post are those of the author and do not reflect the official position of Hashtag Generation | இந்த வலைப்பதிவு இடுகையில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் அனைத்தும் உரிய ஆசிரியரின்/படைப்பாளியின் கருத்துக்களேயாகும். இவை ஹேஸ்டேக் தலைமுறையின் உத்தியோகபூர்வ நிலையை பிரதிபலிக்கவில்லை.