கொவிட்- 19 வைரசின் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள இணையதளத்தில் உங்கள் பெயர் விபரங்களை பதிவு செய்ய வேண்டுமா?
கொவிட் – 19 தடுப்பூசி திட்டத்திற்காக தங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு குறிப்பிட்டு ஒரு (Link/லிங்க்) சமூக வலைத்தளங்களில் குறிப்பாக வாட்ஸ்அப் இல்(WhatsApp) பகிரப்பட்டு வந்தது.
மேலும் தெஹிவலையில் தடுப்பூசி வழங்கப்படுகின்றதாக தெரிவித்து மக்களின் தகவல்களை கோரி டிவிட்டரில்(Twitter) இவ்வாறான ஒரு பதிவும் காணப்பட்டது.
நாம் இதன் உண்மைத்தன்மை பற்றி ஆராய்வதற்காக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவலர்கள் ராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே, தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர மற்றும் மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் தம்மிகா ஜெயலத் ஆகியோரை தொடர்பு கொண்டோம்.
சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம்(ICTA) ஆகியன இணைந்து தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்காக ஒரு செயலியினை (App) உருவாக்கி வருவதாக ராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். மேலும் கொழும்பு மாநகர சபை எல்லை பகுதிக்குள் தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதற்கான கால நேரத்தை முன்கூட்டியே பதிவு செய்து கொள்வதற்கான ஒரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். கொழும்பு மாநகர சபையின் இணையத்தளத்தின் ஊடாக தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதற்காக முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக் கொள்ளலாம். இலங்கை டெலிகொம்/மொபிடல் நிறுவனம் கொழும்பு மாநகர சபையுடன் இணைந்து இந்த வேலைத் திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது. இந்த தரவு சேகரிக்கும் வேலைத் திட்டமானது, களனிய சுகாதார வைத்திய அதிகார எல்லைக்கு உட்பட்ட தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தினை மையமாக வைத்து நடைமுறைப்படுத்தப்பட்ட முன்னோடி செயற்திட்டமொன்றென மேல் மாகான சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் தம்மிகா ஜெயலத் தெரிவித்திருந்தார். அத்துடன் குறிப்பிட்ட சுகாதார வைத்திய அதிகாரியின் எல்லை பிரிவுக்கு உட்பட்டு, உரிய அதிகாரிகளுக்கு இது பற்றி தெரிவித்து மேற்கொள்ளப்பட்டதொன்று எனவும் இவ்வாறு தரவுகளை சேகரிக்கும் போது அவை மூன்றாம் தரப்பினருக்கு செல்லக்கூடிய அபாயம் உள்ளது. எனவே இதுபற்றி அவதானமாக செயற்படுமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன” என அவர் மேலும் தெரிவித்தார்.
அதற்கான இணைப்பு – https://www.echannelling.com/Echannelling/covid-vaccine
கொழும்பு மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் –
https://www.colombo.mc.gov.lk/news-more.php?id=153
இந்த வேலைத் திட்டம் பற்றி வெளியான செய்திகள் –
இலங்கை டெலிகொம்/மொபிடல் நிறுவனம் கொழும்பு மாநகர சபையுடன் இணைந்து இந்த வேலைத் திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது –
https://www.mobitel.lk/press-releases/slt-mobitel-cmc-facilitate-registrations-covid-vaccination
இதுபற்றி நாம் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ரொஹான் சமரஜீவவிடம் வினவினோம்.
“நடைமுறையில் எமக்கு இரு பிரச்சினைகள் உள்ளன. முதலாவது மக்களுக்கு தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதற்காக நேரத்தை ஒதுக்குதல். அதாவது முன்கூட்டியே பெயர்களை பதிவு செய்யும் செயல்முறை. மக்களை அலைய விடாது அதனை செய்ய வேண்டும். நான் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள சென்றபோது மூன்று மணி நேரம் காத்திருந்தேன். எனவே இவ்வாறு இன்றி மக்களுக்கு இலகுவான முறையில் தடுப்பூசிகளை வழங்குவதே முதலாவது பிரச்சினை. இரண்டாவது பிரச்சினை, முதல் தொகுதி டோஸ் (தடுப்பூசியினை) எடுத்தவர்களுக்கு இரண்டாவது டோஸ் கொடுப்பது எவ்வாறு. அவற்றை எங்கே எப்படி கொடுப்பது, போன்ற அறிவித்தல்களை உரியவர்களுக்கு கூறுதல். பிரதான இரு பிரச்சினைகளாக இருக்கும் இவற்றை தீர்ப்பது மிகவும் கட்டாயமானது. அத்துடன் மிகத்தெளிவாக இதற்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும்.
மேலும் இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மாதிரிகள் எமது நாட்டிலே உள்ளன. குறிப்பாக 90 களில் இருந்தே E-channeling முறையினை இலங்கையர்கள் ஏதோ ஒரு மூலையிலிருந்து பயன்படுத்துகின்றார்கள். முன்பு நாம் விசேட வைத்திய நிபுணர்களை சந்திக்க வேண்டி இருந்தால் இருமுறை வைத்தியசாலைக்கு செல்லவேண்டும். முதலாவது முறை சென்று நேரத்தை ஒதுக்கிய பின் இரண்டாவது முறை வைத்தியரை சந்திக்கச் செல்வோம். எனினும் தற்போது வீட்டிலிருந்தவாறே வைத்தியரை சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கலாம். எனினும் சில வேளை வைத்தியருக்காக 45 நிமிடம் முதல் ஓர் இரு மணித்தியாலங்கள் வரை காத்திருக்க வேண்டி ஏற்படலாம். இருப்பினும் முன்பிருந்ததைவிட தற்போது ஒரு முறை மாத்திரம் செல்ல வேண்டி உள்ளமை மிகவும் எளிமையானது. எனவே இந்தப் பிரச்சினைக்கான ஒரு அணுகுமுறை எம்மிடம் உள்ளது. இவற்றுக்குத் தேவையான குறைந்தபட்ச தரவுகள் என்ன?
குறைந்தளவு தரவுகளை சேகரிப்பது எவ்வாறு என்பது பற்றி நாங்கள் ஆலோசிக்க வேண்டும். E-Channeling காக நாம் கொடுக்கின்ற நோயாளியின் பெயர், தொலைபேசி இலக்கம் போன்ற சரளமான முறையொன்றே இங்கு தேவை. இதற்கு மேலதிகமாக வைத்திய பரிசோதனைகளுக்காக தகவல்களை பெற்றுக் கொள்ளும்போது குறித்த தனிநபர்களின் பாதுகாப்பினையும் அடையாளத்தையும் கருத்தில் கொண்டு மக்களின் விருப்பத்தை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும்.” என அவர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம்(ICTA) ஆகியன இணைந்து தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்காக அமைத்துள்ள மென்பொருள் குறித்து இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி ஹிரன்யா சமரசேகரவிடம் வினவினோம்.
குறித்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும் ஒரு சில சுகாதார வைத்திய அதிகார எல்லை பிரிவுகளில் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் கூறினார். மேலும் அவர் தெரிவிக்கையில் இந்த மென்பொருள் எமது நாட்டின் தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ள ஒன்றாகும். இதனை ஒரு முன்னோடி திட்டமாக ஒரு சில பிரதேசங்களில் ஆராய்ந்து பார்த்தோம். எனினும் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சின் அனுமதி தேவைப்படுகின்றது எனவே அதற்கான வேலைத்திட்டங்களை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். டயலொக், எயாடெல், மற்றும் ஹட்ச் ஆகிய தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களும் இத்திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் ஒரு கையடக்க தொலைபேசி மென்பொருளாக, இணையதளத்தை அணுகுவதன் மூலம் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இதனை அமைத்துள்ளோம். கையடக்கத்தொலைபேசி இல்லாத ஒருவர் கூட பிரிதொருவரின் தொலைபேசி மூலம் இதிலே பதிவுகளை மேற்கொள்ளலாம், என அவர் விளக்கினார்.
எனவே தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்காக ஒருசில தெரிவுசெய்த பிரதேசங்களிலே மேற்கொள்ளப்பட்ட முன்னோடி செயற்திட்டங்களை தவிர (pilot project) அரச தலையீடுகளுடன் கூடிய எந்தவிதமான தனிநபர் தகவல் சேகரிப்பபோ அல்லது அவ்வாறான செயற்பாடுகளோ இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என்ற விடயம் ஊர்ஜிதப்படுத்தப் பட்டது.
எனவே சமூக ஊடகங்களில் தகவல் கோரி வலம் வருகின்ற இணைய இணைப்புகளில் (link) உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை பதிவிடுவது மிகவும் ஆபத்தானது. அத்துடன் இலங்கையில் இதுவரை தரவு பாதுகாப்பு சட்டம் ஒன்றில்லை. இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம்(ICTA) தரவு பாதுகாப்பு பற்றிய ஒரு சட்டத்தினை வரைந்துள்ளார்கள். எனினும் இச் சட்டத்திற்கு இதுவரை பாராளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைக்கவில்லை.
சட்ட வரைவு திணைக்களம் வெளியிட்டிருக்கின்றது தரவு பாதுகாப்பு பற்றி வரைவு படுத்தப்பட்ட சட்டம் –
இலங்கையில் தற்போது காணப்படுகின்ற தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் பற்றிய சட்ட கட்டமைப்பு – https://www.icta.lk/elaws/?lang=si
கடந்த காலங்களில் மக்களுடைய தகவல்களை பல்வேறுபட்ட நோக்கங்களுக்காக சட்டவிரோதமான முறையில் சேகரிக்கின்றமை பற்றிய பல தகவல்களையும் நாங்கள் கண்டோம்.
கொவிட் -19 நெருக்கடி காரணமாக கொடுக்கல் வாங்கல்கள், பொருட்கள் வாங்குதல் மற்றும் போக்குவரத்து செயற்பாடுகள் என அனேகமானவை இணையதளம் வாயிலாகவே நடைபெறுகின்றது. அவ்வாறான சூழ்நிலையில் உங்களைப் பற்றிய ஒரு சில முக்கிய தகவல்களுக்கு மேலதிகமான தகவல் தரவுகளை வினவுவதாயில் அது பற்றி நீங்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். மேலும் உங்களுடைய தகவல்களை பெற்றுக் கொள்ளக் கூடியவர்கள் யார்? எதற்காக தகவல்களைப் பெற்றுக் கொள்கின்றார்கள்? மற்றும் அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனங்களில் முகவர்களா? என்பது பற்றியும் பலமுறை ஆராய்தல் கட்டாயமானது.