பண்பாடு என்றால் என்னவென்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர், சிலர் பண்பாட்டை சமூக எழுச்சியின் தூண் என கூறுகின்றனர்.ஒவ்வொருவரும் வெவ்வேறு விதத்தில் விளக்க முற்படும் போது அதனை சீர்குலைக்க இன்னுமொரு சாரர் சமூகத்தில் தயாராகி இருப்பதை கடந்த கால சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றது.பிரச்சினைகள் என்ற வார்த்தையை உபயோகிக்காத யாரும் இருக்க முடியாது.இப் பிரச்சினையை பல்வேறு கோணங்களில் , வடிவங்களில் அவதானிக்க முடிகின்றது.இன்று சமூகத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகளும், பாலியல் துஷ்பிரயோகங்களும் அதிகரித்து அவை எல்லைகளை கடந்துள்ளது என்று கூற முடிகின்றது.
பெண்கள் பொதுப்போக்குவரத்தில் எதிர்கொள்ளும் பிரதான சவாலாக பாலியல் ரீதியிலான சிக்கல்களும்,சீண்டல்களும் பிரதானமானதாகும்.நவ நாகரீகத்தில் திழைத்திருக்கும் மனித குலத்தில் இவ்வாறான செயற்பாடுகளால் இன்னும் நாகரீகமற்ற சமூகம் உயிர்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. ஆணாதிக்கம் மேலோங்கியுள்ள சமூகத்தில் பெண்களை போகப் பண்டமாக பார்க்கும் பார்வையில் இருந்து அவர்கள் இன்னும் மாறவில்லை.இவ்வாறான சம்பவங்கள் மனிதாபிமானம் மறைந்துவிட்டதற்கு உதாரணங்களாகும்.பிரயாணங்களின் போதான பெண்களின் நாளந்த அனுபவங்கள் மிகவும் துன்பமான வையே இது பற்றி துறைசார்ந்த வர்கள் தங்களுடைய அனுபவப் பகிர்வுகளை தெரிவித்தனர்.
ஊடகவியலாளரான தர்ஷிகா செல்வச்சந்திரன் இது பற்றி கூறுகையில்,
பொதுப் போக்குவரத்தில் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் என்னும் போது அதிகமாக என்னைப்
பொறுத்த வரையில் மாணவிகள் அதிகமாக எதிர்கொள்ளும் பிரச்சினையாக இது உள்ளது.
அதுமட்டுமில்லாமல் பேருந்து போக்குவரத்தில் குறுந்தூரப் பயணங்களின் போதும் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் இருக்கின்றது.எவ்வளவுதான் தெளிவான பெண்ணாக இருந்தாலும் பாலியல் ரீதியான சீண்டல்களைக் கடந்து செல்தல் என்பது கடினமான விடயமாகும்.
அது மட்டுமல்லாமல் பயணங்களின் போது யார் அருகில் இருக்கிறார்கள் என்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்க முடியாது.
ஆனால், பயணங்களின் போது அருவருப்பான செய்கைகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்படுகின்றது. இவ்வாறான சொல் மற்றும் செயல் மூலமான வன்முறைகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு இவ்விடயத்தை எவ்வாறு கையாள்வது என்பது தெரியவில்லை.
நீண்டதூரப் பயணங்களின் போது உடல் பகுதிகளைத் தொட முயற்சித்தல், இடித்தல், உரசுதல், மோசமான பார்வை, தவறான சொற்பிரயோகங்கள் போன்ற பல்வேறுபட்ட துஷ்பிரயோகங்களை அடிக்கடி பெண்கள் எதிர்கொண்டிருக்கின்றனர்.
பொலிஸ் நிலையத்தில் முறையிடுவது தொடர்பிலும் பல குழப்பங்களுடன் பெரும்பாலான பெண்கள் இவ்வாறான அத்துமீறல்களை இயலாமையுடன் கடந்துவிடுகின்றனர்.
இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல்களை வெளியில் சொல்ல அஞ்சுபவர்களாகவும் பெரும்பாலான பெண்கள் இருக்கிறார்கள்.
முதிர்ச்சியுடைய முற்போக்கான பெண்கள் கூட இவ்வாறான விடயங்களைச் சகித்துக் கொண்டு கடந்து சென்றுவிடுகின்றார்கள் என்பதே உண்மை.
மாணவி ,சமூக சேவையாளர் மற்றும் சுயாதீன ஊடகவியலாளரான நயனதரா ஜயதிலக்க இது குறித்து தெரிவிக்கையில்,
புள்ளிவிவரங்களின்படி, பொது போக்குவரத்தில் சுமார் 90% பெண்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர்.
கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக இது குறைந்துள்ளது. ஆனால் பொது போக்குவரத்து மீண்டும் தொடங்கும் போதும் மற்றும் பெண்கள் தொழிலுக்காக செல்லத் தொடங்கும் போதும், பொதுப் போக்குவரத்தில் தொல்லைகள் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. பொதுப் போக்குவரத்தில் இடைவிடாத தொல்லைகளின் முக்கிய பிரச்சனை என்னவென்றால், பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் இதை பற்றி வெளிப்படையாக பேசுவதில்லை. இது தவிர, நமது சமூகம் பொது போக்குவரத்தில் தொல்லைகளை “மிகவும் சாதாரணமானது” என்று வரையறுக்கின்றனர்.
சாலை துன்புறுத்தல் பற்றி நான் பதிவிட்ட ட்வீட் காரணமாக சமீபத்தில் எனக்கு சில செய்திகள் வந்தன, நானும் எனது சிறந்த நண்பரும் இதனை எதிர்கொள்ள வேண்டியிருந்தது, “நீங்கள் என்ன அணிந்திருந்தீர்கள்?” “உங்கள் கால்கள் வெளியே தெரிந்ததா?” நீங்கள் ஒப்பனை போட்டீர்களா?
நம் சமூகத்தில் பலர் துன்புறுத்தல்களை முகம்கொடுப்பது நாம் அணியும் ஆடை முறையால் ஏற்படுகிறது என்று நினைக்கிறார்கள், இதுபோன்ற அணுகுமுறைகளை நாம் முதலில் மாற்ற வேண்டும்.
ஊடகவியலாளரான அஹ்சன் அப்தர் இது பற்றி தெரிவிக்கையில்,
பொதுப் போக்குவரத்து சேவைகளில் பெண்கள் மற்றும் சிறுமிகள் காலாகாலமாக பல துன்புறுத்தல்களை எதிர்கொள்கிறார்கள். பயணம் போகும்போது இப்படி நடப்பது சகஜம்தானே என்று சொல்லுமளவிற்கு இந்த விடயம் சர்வசாதாரணமாகி விட்டது. அன்றாடம் கல்வி அல்லது தொழிலுக்காக வெளியில் செல்லும் பெண்கள் வாழ்நாளில் குறைந்தபட்சம் ஒரு தடவையாவது பொதுப்போக்குவரத்து சேவைகளில் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) ஆய்வுகளின்படி இலங்கையில் 90 வீதமான பெண்கள் பொதுப் போக்குவரத்து சேவையில் பாலியல் துன்புறுத்தல்களை அனுபவிக்கிறார்கள். இது உண்மையில் மோசமான நிலைமையாகும்.
மேற்குறிப்பிட்ட ஆய்வின்படி பொதுப்போக்குவரத்தில் பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்பவர்களில் 97 வீதமானவர்கள் ஆண்கள் என்று கூறப்படுகின்றது. பெண்கள் மற்றும் சிறுமிகளை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் இவ்வாறான செயல்களை செய்வோரை நினைத்து வருந்துவதோ அல்லது அவர்களைப் பார்த்து ‘உனது வீட்டில் பெண்கள் இல்லையா’ என்று கேள்வி கேட்பதோ பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைத் தராது. நாட்டில் இதற்கு எதிராக கடுமையான சட்டங்களைக் கொண்டு வருவதுடன் பொதுப்போக்குவரத்து சேவைகளை கண்காணிக்க அதிகாரிகளையும் நியமிக்க வேண்டும். பேருந்து சாரதிகள் மற்றும் வழநடத்துனர்களுக்கு பால்நிலை சமத்துவம் தொடர்பாக செயலமர்வுகள் மற்றும் ஊடாக விளக்கங்கள் வழங்குவதுடன் இந்த விடயங்களை கண்காணிப்பதற்கான பயிற்சிகளையும் வழங்க வேண்டும். இவ்வாறான விடயங்கள் மூலம் பொதுப்போக்குவரத்தில் பெண்களுக்குள்ள அசௌகரியங்களை ஓரளவு குறைக்கலாம்.
சட்ட மாணவி(இலங்கை சட்டக் கல்லூரி)மர்ஷதா மக்கீ இது பற்றி தெரிவிக்கையில்,
பெண்களின் சமூக பங்களிப்பு மேலோங்கியுள்ள இக் காலத்தில் கல்வி, தொழில் மற்றும் ஏனைய அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பெண்கள் பொதுப் போக்குவரத்து சாதனங்களை நாடுவது தவிர்க்க இயலாததொன்றாக காணப்படுகின்றது. எனினும் பொதுப் போக்குவரத்து சாதனங்களை உபயோகிக்கின்ற சந்தர்ப்பங்களில், பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். போதியளவு ஆசனங்கள் இன்மை, தூய்மையான கழிவறைகளை பயன்படுத்த இயலாமை, பாலியல் துஷ்பிரயோகங்கள் என்பன அவற்றுள் சிலவாகும்.
பாலியல் துஷ்பிரயோகங்கள் (Sexual Harassment) எனப்படுபவை தண்டனை சட்டக் கோவை பிரிவு 345 இன் கீழ் வேலைத்தளத்திலோ அல்லது வேறு இடங்களிலோ, வார்த்தை ரீதியாக அல்லது செயல் ரீதியாக செய்யப்படக் கூடிய குற்றமொன்றாக காணப்படுகின்றது. எனவே பாலியல் ரீதியில் நெருக்கடியை ஏற்படுத்தக் கூடிய வார்த்தைகள், தொடுகை, சமிக்ஞைகள் என்பவை பொதுப் போக்குவரத்து சாதனங்களில் மேற்கொள்ளப்படுமிடத்து அவை குற்றவியல் குற்றமாகவே கொள்ளப்படும். மேலும் பொதுப் போக்குவரத்து சாதனங்களை சுதந்திரமாக அனுபவிப்பதற்குள்ள மனித உரிமைகளை மீறும் செயலாகவும் இது நோக்கப்படுகின்றது.
பொதுப் போக்குவரத்து சாதனங்களில் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படும் பெண்களில் அரைவாசிக்கு மேற்பட்டவர்களுக்கு இது வழக்கமானதொன்றாக மாறிவிட்டிருக்கிறது என 2017 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு கூறுகிறது. மேலும் 8% பெண்கள் மாத்திரமே சட்ட முன்னெடுப்புகளை மேற்கொள்கின்றனர். பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்பட்டமையை களங்கமாக நினைத்தல், போதியளவு சக பயணிகளது ஆதரவு கிடைக்காமை, பின்னாட்களில் பழிவாங்கல்களுக்கு உட்படுவோமோ என்ற பயம், சட்ட ஏற்பாடுகள் பற்றிய தெளிவின்மை, இவற்றை வெளியே பேசத் தகுந்த விடயமாக சமூகம் கொள்ளாமை, கல்வி/ தொழிலை தக்கவைக்க சகிப்புணர்வோடு பயணிப்பதே சிறந்ததென எண்ணுதல் போன்ற பல்வேறு காரணங்களே மேற்படி ஆய்வு முடிவுகளில் தாக்கம் செலுத்தும் காரணிகளாக காணப்படுகின்றன.
பாரதூரமான துஷ்பிரயோகங்களை சமூகம் எதிர்த்தாலும் கூட சமிஞ்சை ரீதியான/ சில வார்த்தை ரீதியான துஷ்பிரயோகங்களை ஆண்மையின் இயல்புகளில் ஒன்றாகவும், இளமையின் குறும்புத்தனங்களில் ஒன்றாகவும் சமூகம் நோக்கிவருவது கவலைக்கிடமானது. அத்தோடு பாதிக்கப்படும் பெண்களின் உடையினை காரணம் காட்டி துஷ்பிரயோகங்களை நியாயப்படுத்த எத்தனிக்கும் போக்கும் சமூகத்தின் மத்தியில் காணப்படுகின்றது. மரியாதைக்குரிய ஆடைநெறிகளைப் பின்பற்றுவது மத, தார்மீக ரீதியில் எந்தளவு வலியுறுத்தப்படுகின்றதோ, அதேயளவு ஒருவரது நிர்வாணத்தைக் கூட அவரது அனுமதியின்றி முறையற்ற தொடுகைக்கு உட்படுத்துவதை தவிர்ந்து கொள்வதும் மத, தார்மீக ரீதியான பேணுதலாகவே கொள்ளப்படுகின்றது.
பல்வேறு துறைகளிலும் பெண்களது பங்களிப்பு வேண்டப்பட்டு நிற்கின்ற இக்காலத்தில் பெண்களை உடலியல்,உளவியல், சமூக ரீதியில் பின்னடைவை நோக்கி தள்ளுகின்ற அனைத்து துஷ்பிரயோகங்களையும் இல்லாதொழித்து, பாதுகாப்பான சமூகக் கட்டமைப்பை உருவாக்குவது சமூகக் கடமையாகும்.
பிரயாணங்களின் போது ஏன் இந்த நபர்கள் பெண்களுக்கெதிராக இவ்வாறான துஷ்பிரயோகங்களை பிரயோகிக்கின்றனர்? நெரிசல்களை அவர்களுக்கு சாதகமாக ஏற்படுத்திக் கொள்கின்றனர் ?
பெண் என்பவள் அடங்கிக் கிடக்க வேண்டும் என்பது அவர்களுடைய கொள்கையா?
21 ஆம் நூற்றாண்டில் அனைத்தும் நவீனமாகியுள்ள போதும் இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சட்டங்கள் கடுமையாக்கப்படும் போது தவறுகள் இடம்பெறுவது குறையும்.எனவே நாட்டின் சட்டங்களை கடுமையாக்கும் போது நடமாடும் குற்றவாளிகள் தங்கள் நடமாட்டத்தை நிறுத்திக் கொள்வார்கள்.எனினும் இது எப்போது நிறைவேறும் என்பது தான் கேள்விக்குறியாகும்.
கட்டுரை – அப்ரா அன்ஸார்
The views expressed on this blog post are those of the author and do not reflect the official position of Hashtag Generation | இந்த வலைப்பதிவு இடுகையில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் அனைத்தும் உரிய ஆசிரியரின்/படைப்பாளியின் கருத்துக்களேயாகும். இவை ஹேஸ்டேக் தலைமுறையின் உத்தியோகபூர்வ நிலையை பிரதிபலிக்கவில்லை.