வெளிநாட்டு பணிப்பெண் வேலைவாய்ப்புக்களும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும்

அதிகரிக்கும் சனத்தொகைக்கு தகுந்த வேலைவாய்ப்பு இன்மை அனைத்து நாடுகளிலும் நிலவும் பாரிய பிரச்சினையாக இருக்கும் அதேவேளை உள்நாட்டு வருமானங்கள் தாழ் நிலையில் இருப்பதால் இலங்கை முதலிய மனிதவளம் நிறைந்த நாடுகளில் வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தம் செல்வோரின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக காணப்படுகிறது. புலம்பெயர் தொழிலாளர்களின் முக்கியமான மூலாதாரமொன்றாக இலங்கை அமைந்துள்ளது. கடந்த சில தசாப்தங்களாக தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போக்கு கணிசமான அளவு அதிகரித்து வருகின்றது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் வெளிநாடுகளில் தொழில் புரிகின்றனர் என்று அண்மைக்கால மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன.  இன்று மத்தியக்கிழக்கு நாடுகளில் சுமார் ஏழு இலட்சம் இலங்கை பெண்கள் பணிப்பெண்களாக இருக்கின்றனர். இவர்களில் குறிப்பாக பதினெட்டு வயதுக்கும் முப்பது வயதுக்கும் இடைப்பட்டவர்களின் தொகையே அதிகமாக காணப்படுகின்றன. 

இலங்கையின் பொருளாதாரத்தில் பெரும் பங்கானது வெளிநாடுகளில் உழைக்கும் இலங்கையர்களின் மூலம் ஈட்டப்படுவது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இலங்கையின் மொத்த தேசிய வருமானத்தில், வெளிநாட்டு வருவாயின் மூலம் 54% கிடைக்கப்பெறுகிறது என்று இலங்கையின் வெளிநாட்டு பணியக தூதரக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. சுருங்கக்கூறினால் 2016 ஆம் ஆண்டில் மட்டுமே, வெளிநாட்டு தொழிலாளர்களினால்  வருமானம் சுமார் 566,260 மில்லியன் இலங்கை ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் ஆண்களும் பெண்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்வதற்கு பொருளாதாரமே பிரதான காரணமாகும். 

இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், வறுமையும் தாழ் வருமானமும் உள்ளதாக ஒரு குடும்பம் காணப்படுவதாக இருக்கின்ற போது அக்குடும்பத்தில் உள்ள பெண்கள் குடும்ப பொருளாதாரத்தினை பொறுப்பேற்க வேண்டிய தேவையில் அவர்களிற்கான தொழிலாவாய்ப்பாக வெளிநாட்டில் வேலைவாய்ப்பு எனும் சந்தர்ப்பம் அமையும் போது குடும்பத்தினை நீங்கி வெளிநாட்டு பணிக்காக தொலைதூரம் செல்கின்றனர். அல்லது செல்வதற்காக நிர்பந்திக்கப்படுகின்றனர். நாட்டில் இதுவரை நிலவி வந்த போர்ச்சூழல், அதில் தமது பிள்ளைகளை இழக்க நேரிடும் என்ற அச்சமும், உயிரை காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டும், வேறு நாடுகளுக்கு சென்று தமது அத்தியாவசிய தேவைகளையாவது பூர்த்தி செய்து கொள்ள வேண்டுமென்ற நோக்கம் அவர்களை இச்சூழ்நிலையை ஏற்க ஏதுவாக அமைகிறது. மேலும் கடன் தொல்லைகளை தீர்த்துக் கொள்வதற்காகவும் கடன் தொல்லைகளில் இருந்து விடுபட்டு கொள்வதற்காகவும் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அதாவது தனது கணவன்பட்ட கடனை தீர்த்து கொள்ளவும், பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலை, பயம், அவர்கள் மேல் கொண்ட அதீத அக்கறை காரணமாகவும் தொழில் வாய்ப்பினை பெறும் பொருட்டு வெளிநாடுகளை நோக்கி புலம்பெயர்கின்றனர்.

பணிப்பெண்களாக செல்பவர்கள் மட்டும் அல்லாமல் இன்னும் பலர் சுற்றுலா பயணிகளாக சென்று அங்கு பணிப்பெண்களாக பணிபுரிதலும் அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல்வேறான நெருக்கடிகள் சட்டசிக்கல்கள் போன்றவற்றையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தற்கால சமூகத்தில் காணப்படும் பல்வேறு வகையான பிரச்சினைகளுள் மிக முக்கியமான ஒரு பிரச்சினையாக காணப்படுவது வெளிநாட்டு வேலை வாய்ப்பினைத் தேடிச் செல்வதால் ஏற்படும் சமூக ரீதியான பிரச்சினைகளும் அதனால் ஏற்படும் தாக்கங்களும் ஆகும். 

கீழைத்தேய நாடுகளை சேர்ந்த பெரும்பாலான பெண்களால் பணிப்பெண்களாக செல்லுதல் எனும் சுமை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்ளப்படுகிறது.  இவை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பணிக்காக வெளிநாடு செல்லும் பெண்களது தொகை சுமார் அண்ணளவாக 2 இலட்சம் பேர் என இலங்கை புள்ளி விபரவியல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் பெரும்பாலான பெண்கள் முறையாக தேர்ச்சியற்ற பயிற்சியளிக்கப்படாத வீட்டு பணியாளர்களாக செல்லும் பெண்களாகவே இருக்கின்றனர். ஆயினும் 2017ஆம் ஆண்டின் முதல் 8 மாத தகவல்களின்படி, 37, 002 பெண்கள் பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இவ்வாறு பயணமாகும் பெண்களில்  திருமணமான பெண்கள் மட்டும் அல்லாமல், திருமணமாகாத இளவயதிலிருப்போர் வரை பல்வேறு நிர்ப்பந்தங்கள் காரணமாக இந்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். குடும்பத்தை விட்டு பிறநாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்லுதல் என்பது பல்வேறு கோணங்களில் நெருடலுக்குரிய அம்சமே. ஆயினும் இச்  சவால்களை ஏற்றுக்கொள்வதாகவும் அடிமைத்தளைகளை விலக்கிவிட முடியாத சூழலாகவும் பெண்களுடைய சூழ்நிலைகள் இருக்கிறமை கவலைக்குரியது. இந்நிலையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் சிக்கல்களும் ஏராளம். குறித்த பெண் வேலைக்காக செல்லுமிடத்தில் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் பிரச்சனைகள் ஒருபுறம், பணி நிமித்தம் பிற நாடுகளிற்கு தனியே புறப்படும் பெண் குறித்த சமுதாய கண்ணோட்ட பிரச்சினைகள் ஒருபுறம், இவற்றையும் தாண்டி குடும்ப தலைவியான பெண் குடும்பத்தை நீங்கி செல்லும் போது அவருடைய பிள்ளைகள் குடும்ப உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஒருபுறம் என பல்வேறு கோணங்களில் இவற்றை அணுக இயலும். இலங்கைக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கூற்றுப்படி இலங்கையின் வடபகுதியிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களில் பலரும் குடும்பத்தலைவர்களாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களே. இக் குடும்பங்களில் பெரும்பாலான பெண்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளை பிரிந்து செல்ல வேண்டி இருக்கின்றது. இதிலும் குறிப்பாக வீட்டுப் பணி தொடர்பில் அமர்த்தப்படும் பெண்கள் மீதான உரிமை மீறல்கள் ஏராளம். வீ‌ட்டு வேலை‌க்காக செ‌ல்லு‌ம் பெ‌ண்களிற்கு குறித்த மணித்தியாலங்கள் தான் வேலை எ‌ன்‌றி‌ல்லாம‌ல் நா‌ள் முழுவது‌ம் வேலை அ‌ளி‌க்க‌ப்படுவதுடன் அவர்கள் தாழ்வானவர்களாகவே நடத்தப்படுதல் கண்டிக்கத்தக்கது. ‌இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள் என்னவென்றால் அவர்களிற்கு போ‌திய உணவும் அ‌ளி‌க்க‌ப்படாம‌ல், வெளியுலக தொடர்பும் துண்டிக்கப்பட்டு, நிச்சயிக்கப்பட்ட சம்பளமும் அ‌ளி‌க்காம‌ல் பணிச்சுமைகளை திணிப்பதே.  ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படுமாறே ஊதியம் வழங்கப்படுகின்றதா என்றால் அதுவும் நிச்சயமற்றதாகவே காணப்படுகிறது. அத்துடன் பெரும்பாலானோர் தொலைபேசி பாவிப்பதையும் வெளி இடங்களிற்கு செல்லுவதற்தான வாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்றன. இவற்றில் ஒரு சில வழக்குகள் மட்டுமே பொதுவெளியில் தலைப்புச் செய்திகளாக ஆகின்றன. அண்மைக்காலங்களில் வெளிநாடுகளில் இறக்கும் இலங்கை தொழிலாளர்களது எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அண்ணளவாக ஆண்டொன்றிற்கு 200 தொடக்கம் 300 மரணங்கள் இவ்வாறு நிகழ்கின்றன.

வேலைத்தள சலுகை புறக்கணிப்புக்கள், சம்பள உரிமை மீறல்கள் முதலியவை மட்டும் அல்லாமல் அடித்தல், உதைத்தல், காயங்களை ஏற்படுத்தல், சூடு வைத்தல் முதலான உடல் சார்ந்த துன்புறுத்தல்களோடு திட்டுதல், தகாத வார்த்தைகளை பயன்படுத்தல், முதலான உள வன்முறைகளும் இடம்பெறுகின்றன. இவற்றிலும் மேலாக பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள், பாலியல் உறவுக்காக வற்புறுத்தப்படல் போன்றவற்றையும் பெரும்பாலூம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. வெளிநாட்டில் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டு வேலை செய்யும் இலங்கை பெண்களில் ஏறத்தாழ 1,650 பெண்கள் உடல் ரீதியாகவும் பாலியல் ரீயதாகவும் முதலாளிகள் தங்களிடம் தவறாக நடந்து கொள்கிறார்கள் என்று புகார் அளித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திலிருந்து சமீபத்திய ஆய்வுத் தரவு காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜோ‌ர்டா‌ன், குவை‌த், லெபனா‌ன் சவூதி அரேபியா, கட்டார், பஹ்ரைன், ஓமான் போன்ற மத்தியக் கிழக்கு நாடுகளில் ஆசிய, ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்கள் மிக மோசமாக நடத்தப்படுகின்றனர் என்ற செய்தி பொதுவாகவே தெரிவிக்கப்பட்டு வருவதாகும். இவை மட்டும் அல்லாமல் 2013 ஆம் ஆண்டில், சவுதி அரேபியாவில், இலங்கையை சேர்ந்த ஒரு இளம் வீட்டுப் பணிப்பெண்ணின் மரண தண்டனையை இரத்து செய்யக்கோரி இலங்கையின் தொடர்ச்சியான முறையீடுகளையும் புறக்கணித்ததோடு, அவரது பராமரிப்பில் இருந்த குழந்தை இறந்தமை குறித்த பெண்ணுடைய குற்றம் எனக்கூறி தலையை வெட்டி மரண தண்டனை அளிக்கப்பட்டது. 

அது மட்டும் அல்லாது 2010 ஆம் ஆண்டில், இலங்கையை சேர்ந்த பெண் பணிப்பெண் ஒருவரால், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட வேலைகளிற்கு அதிகமாக பணிச்சுமை நிர்பந்திக்கப்படுவதாக முறைப்பாடு அளித்த பின், தொடர்புடைய சவுதி தம்பதியினர் அந்தப் பணிப்பெண்ணின் கைகள், கால்கள் மற்றும் நெற்றியில் 24 ஆணிகளைச் சம்மட்டியால் அடித்துச் சித்திரவதை செய்தனர். அதன் பின்னரே அந்தப் பணிப்பெண் வீடு திரும்பினார். அத்துடன் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டார் என கூறி ஒரு இலங்கை பணிப்பெண்ணிற்கு மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டு, பின் பல முறையீடுகளின் விளைவாக மூன்று ஆண்டு சிறைத் தண்டனையாக மாற்றப்பட்டது. 

இலங்கையை சேர்ந்த பெண்கள் என்றெல்லாமல் பல்வேறுபட்ட நாட்டு பெண்களும் பலதரப்பட்ட வகைகளில் வளைகுடா நாடுகளில் மட்டும் அல்லாமல் பிற நாடுகளிலும்அநீதிகளை எதிர்கொண்ட வண்ணமே உள்ளனர். உதாரணமாக அண்மையில் சிங்கப்பூரில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தை எடுத்துக்கொண்டால்,  24 வயதுடைய மியான்மாரை சேர்ந்த பெண்(பியாங்),  வீட்டு உரிமையாளர்களால் தொடர்ச்சியாக  வெளி­நாட்டு ஊழியர்கள் நமது நாட்டின் பொருளியலுக்கு உதவும் வகையில் அயராது பணியாற்றுகிறார்கள். ஆனால் அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினைகள் சமூகத்தின் காதுகளுக்கு எட்டுவதில்லை. சித்ரவதைக்கு உள்ளாகி கொல்லப்பட்டுள்ளார். பணி நாட்களில் கைபேசி பயன்படுத்தவோ விடுப்பு எடுக்கவோ அனுமதி வழங்கப்படவில்லை. அத்துடன் சரியாக வேலை செய்வதில்லை, சுத்தமாக இல்லை, அதிகமாக சாப்பிடுகிறார், மெதுவாக வேலை செய்கிறார் என பல குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டதுடன் பழுதடைந்து வீசப்படும் உணவுகளை கூட அவர் உண்பதற்கு மறுக்கப்பட்டது. உடல் ரீதியான துன்புறுத்தல்களின் உச்சக்கட்டமாக 31 காயங்களும் உடலின் மேல்பரப்பில் 47 காயங்களும் ஏற்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இவ்வாறான தொடர்ச்சியான சம்பவங்களின் பின்னராக கு‌றி‌ப்பாக சவு‌தி அரே‌பியா‌வி‌ற்கு ‌வீ‌ட்டு வேலை‌க்கு‌ச் செ‌ல்வதை நாடாதீர்கள் எ‌ன இ‌ந்‌தியா, இல‌ங்கை, நேபளா அரசுக‌ள் த‌ங்க‌ளது நா‌ட்டு ம‌க்களு‌க்கு அ‌றிவுறு‌த்‌தியு‌ள்ளன.  அத்துடன் குறித்த பணியாளர்கள்‌ பயணக் கடவுச்சிட்டை  த‌ங்க‌ள் வசமே வை‌த்துக் கொ‌ள்ளவு‌ம், ‌விரும்புகின்ற நேர‌த்‌தி‌ல் நா‌ட்டை ‌வி‌ட்டு சொந்த நாடு திரு‌ம்ப உ‌ரிமை அ‌ளி‌க்கு‌ம் வகை‌யி‌ல் ஐக்கிய அரபு நாடுகள் ச‌ட்ட ‌திரு‌‌த்த‌ம் கொ‌ண்டு வரவு‌ம் ம‌னித உ‌ரிமை அமை‌ப்புகளு‌ம் வ‌லியுறு‌த்‌தி வரு‌கி‌ன்றமை குறிப்பிடத்தக்கது. வெ‌ளிநாடுகளு‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் பெ‌ண்க‌ளி‌ன் பாதுகா‌ப்பை உறு‌தி செ‌ய்வது ஒ‌வ்வொரு நா‌ட்டி‌ன் கடமையா‌கிறது. மேலு‌ம், வெ‌ளிநாடுக‌ளி‌ல் இரு‌ந்து த‌ங்க‌ள் நா‌ட்டு‌க்கு வரு‌ம் பாதிக்கப்பட்ட பெ‌ண்க‌ளை பாதுகா‌க்க கடுமையான ச‌ட்ட‌ங்களை‌க் கொ‌ண்டு வர வே‌ண்டியது‌ம் அவ‌சிய‌ம் ஆகும். 

இவை மட்டும் அல்லாமல் இவ்வாறு பணி நிமித்தம் வெளியே செல்லும் பெண்கள் பெரிதும் மனரீதியான பாதிப்புக்களிற்குள் உட்படுகின்றனர். தனிப்பட்ட ரீதியில் பிறழ்வான விளைவுகளை எதிர்கொள்ளுவதோடு மட்டும் அல்லாமல் நாடு திரும்பும் பெண்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் இடர்பாடுகளும் பல. குறித்த பெண்கள் குறித்த கண்ணோட்டங்கள், நடத்தை சார்ந்த எதிர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற சந்தர்பங்கள் அவர்களுடைய உளவியலை மேலும் தாக்குகின்றது. அத்துடன் குடும்பங்களை நீங்கி வெளிநாடு செல்லும் பெண்தலைமைத்துவ குடும்பங்களை சேர்ந்த ஏனைய பெண்கள் பல்வேறான சுரண்டல்களிற்கும் உள்ளாகுகின்றனர். குறிப்பாக பராயமடையாத பெண்/ஆண் சிறுவர்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றார்கள்.

இவ்வாறாக வெளிநாட்டுப் புலம் பெயர்தலானது சர்வதேச ரீதியில் அதிகமாக காணப்பட்டாலும் குறிப்பாக மத்தியக்கிழக்கு நாடுகளுக்கே மிக அதிகமாக மக்கள் செல்லும் நிலை காணப்படுகின்றமையை காணலாம். தொழில் நிமித்தம் வெளிநாடு செல்லுகின்ற போது பெற்றோர், பிள்ளைகள் என இரு தரப்பினருக்குமே பிரச்சினையாக அமைந்து வருகின்ற தன்மையை அநேகமாக காணலாம். அதாவது பிள்ளைகளை தனியே விட்டுவிட்டு பெற்றோர் வேலை வாய்ப்பினைத் தேடி செல்லும் போது பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டிய அன்பு, அரவணைப்பு, பாசம், பாதுகாப்பு என்பன கிடைக்காமல் போய் விடும். மேலும் அவர்களின் நெறிப்பிறழ்வான நடத்தைகளும் சமூகத்தில் பல்வேறு வகையான தாக்கங்களை ஏற்படுத்தி எதிர்கால சமூகத்தின் சிறந்த பிரஜைகளாக வர வேண்டிய பிள்ளைகளை சமூகம் இயல்பாகவே ஓரங்கட்டி விடும் நிலைமை ஏற்படும்.

வேலைவாய்ப்பு பெற்றுச் செல்பவர்கள் அந்நாடுகளில் தவறிழைத்தால் அவர்களுக்குக்காக குரல்கொடுக்க வேலை வாய்ப்பு முகவர்கள் பின்னிக்கின்றனர். முறையாக பணியகங்களில் பதிவு செய்யாது பணி நிமித்தம் பயணங்களை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்திலேயே பல்வேறான அவல நிலை உருவாகுகின்றது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் அண்மைக்காலங்களில் தொடர்ச்சியான வன்முறை சம்பவங்களின் எதிரொலி காரணமாக வெளிநாட்டு பணிப்பெண்களாக செல்லும் பெண்களது தொகை சடுதியாக குறைந்துள்ளது. ஆயினும் பணிப் பெண் அல்லாத பயிற்றப்பட்ட வேறு தொழில்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்ற பெண்களது தொகையில் அவ்வளவாக வீழ்ச்சிகள் ஏற்படவில்லை என தரவறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இலங்கையில் இருந்து எத்தனையோ பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு செல்ல ஆரம்பித்த காலத்திலிருந்தே எத்தனையோ பெண்கள் இறந்த நிலையிலும் கர்ப்பிணிகளாவும் நாடு திரும்பினர். இது தொடர்பாக நாட்டில் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட போதும் இலங்கையில் இருந்து பணிப்பெண்களாக அனுப்பி வைக்கப்படும் நிலை இன்னும் மாறவில்லை என்றே கூறவேண்டும். இவ்வாறான பிரச்சினைகளால் விரக்தியடைந்த பெண்கள் மன உலைச்சலுக்கு உள்ளாவதுடன் தற்கொலை போன்ற விடயங்களிலும் தம்மை மாய்த்துக் கொள்கின்ற தன்மையும் சமூகத்தில் பெரும்பாலாக காணப்படுகின்றது.

இலங்கையை சேர்ந்த பெண்கள் மட்டும் அன்றி பொதுவாக சவூதியில் அயல்நாட்டு பணிப்பெண்கள் 30ற்கும் அதிகமானோருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது அதிர்ச்சி தரும் விடயம் ஆகும். சவூதி அரேபியாவில் வெளிநாட்டு பணியாளர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதாக சர்வதேச அளவில் விமர்சனங்கள் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அதில் வீட்டு உரிமையாளர்களின் கற்பழிப்பு முயற்சியிலிருந்து தப்புவதற்காக அவர்கள் மீது தாக்குதல் நடத்திய பணிப்பெண்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைவைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இவ்வாறான அணுகுமுறைகள் என்றுமே ஆரோக்கியமானவையன்று. 

இவ்வாறான இன்னல்கள் மேலும் தொடராமலிருக்க அரச சட்டதிட்டங்களினால் மட்டுமே சாத்தியமாகாது. ஆக பணி நிமித்தம் வெளியே செல்லும் பெண்கள் அவர்களுடைய பாதுகாப்பு மற்றும் இதர அம்சங்களையும் உறுதி செய்தல் அவசியம். முதலாவதாக அரசு அங்கீகாரம் பெற்ற அயல்நாட்டு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் முகவர்களை மட்டுமே அணுகவேண்டும். அத்துடன் நாடுகின்ற முகவர்களுடைய இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் (Srilanka Bureau of foreign employment) அங்கீகாரச் சான்றிதழ் மற்றும் அனுமதிப்பத்திர இலக்கங்களோடு குறித்த முகவர் தொடர்பான பெயர், முகவரி, தொடர்பிலக்கம், அனுபவம் போன்றவற்றை உறுதிசெய்தல் நன்று.ஒருவர் வெளிநாட்டில் தொழில்புரிய செல்லும் முன்னர் அந்த தொழிற்துறை பற்றி ஆழமாக அறிந்திருத்தல் அவசியமாகும். முகவர்களோடு பணம் கொடுக்கல் வாங்கல் செய்கின்ற போது சட்ட ரீதியாக மேற்கொள்வது அவசியம்.

எந்தவித வேலையும் இல்லாமல், வாழ்க்கை நடத்துவதற்காக சம்பாதிப்பதற்கான மிகக் குறைவான வாய்ப்புகளே இலங்கையில் உள்ள நிலையிலேயே தான் பெண்கள் பிற நாடுகளினை நாடுகின்றனர். ஆக உள்நாட்டிலேயே அவர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் போதிய ஊதியம் போன்றன ஊக்குவிக்கப்படுதல் நன்று. சமூக வலுவூட்டும் செயற்பாடுகள், பெண்களுடைய சுய பொருளாதார முயற்சி, போதிய கல்வியறிவை பெற்றுக்கொள்ளல் போன்றவற்றில் பெண்கள் முன்வருதல் இன்றியமையாததே. இலங்கையில் மட்டும் அல்லாமல் உலகின் எந்தவொரு பெண்ணும் தனக்கான உரிமைகளை பெறுவதோடு தனக்கான வாழ்வியல் பாதைகளை அமைத்துக் கொள்ளவும் தற்துணிவை வளர்த்துக்கொள்ளுதல் அவசியமானதாகும்.

டினோஜா நவரட்ணராஜா

The views expressed on this blog post are those of the author and do not reflect the official position of Hashtag Generation | இந்த வலைப்பதிவு இடுகையில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் அனைத்தும் உரிய ஆசிரியரின்/படைப்பாளியின் கருத்துக்களேயாகும். இவை ஹேஸ்டேக் தலைமுறையின் உத்தியோகபூர்வ நிலையை பிரதிபலிக்கவில்லை.

Share this post

Related Projects

Fact Check

FACT CHECK : நியூசிலாந்து தனது மக்களை இலங்கைக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லுமா?

இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பில் அந்நாட்டு மக்களுக்கு குறிப்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நியூசிலாந்து அரசாங்கம் புதுப்பித்துள்ளதை கடந்த சில நாட்களாக அவதானிக்க முடிந்தது. இலங்கைக்கு …

Fact Check

FACT CHECK : Did New Zealand tell its residents not to visit Sri Lanka?

During the past couple of days, it has been observed that posts are being circulated on social media platforms displaying …

Fact Check

FACT CHECK : නවසීලන්තය එරට වැසියන්ට ශ්‍රී ලංකාවට යන්න එපා කියයි ?

ශ්‍රී ලංකාවේ සංචාරය කිරීම සම්බන්ධයෙන් නවසීලන්ත රජය එරට වැසියන්ට, විශේෂයෙන්ම සංචාරකයන්ට ලබාදෙන උපදෙස් යාවත්කාලීන කර ඇතැයි කියැවෙන සටහන් සමාජ මාධ්‍ය තුළ …

Uncategorized

අන්තර්ජාලය වසා දැමීමක් (Internet Shutdown) යනු කුමක්ද?

(දකුණු සහ අග්නිදිග ආසියාතික සිවිල් සමාජයන් සඳහා මාර්ගෝපදේශයකි) URL: https://engagemedia.org/2022/internet-shutdowns-south-southeast-asia/  ඩිජිටල්කරණයට ලක් වී ඇති වත්මන් සමාජය තුළ, අන්තර්ජාලයට ප්‍රවේශ වීම …

Fact Check

FACT CHECK : විෂාදය කියන්නේ බොරුවක් ද?

විෂාදය සම්බන්ධයෙන් මෙලෙස අලුත් වටයකින් කතාබහක් ඇති වූයේ ඇන්ඩෘ ටේට් නැමැත්තා මීට පෙර අවස්ථා කිහිපයකදී විෂාදය සම්බන්ධයෙන් පළ කළ අදහස් …

Fact Check

FACT CHECK : උප්පැන්න සහතික වෙනුවට මරණ සහතික අයදුම්පත් නිකුත් කළා ද?

“උප්පැන්න සහතික අයදුම්පත් අවසන් වී ඇති බැවින් මරණ සහතික අයදුම්පතෙහි උප්පැන්න බව සඳහන් කොට අවශ්‍ය තොරතුරු පුරවන්න”  යනුවෙන් සඳහන් කළ …