இலங்கை அரசியல் சூழலில் பெண்களுக்குள்ள தடைகள்
இலங்கை ஒரு ஜனநாயக நாடாகும். இங்கு 52 சதவீதமானவர்கள் பெண்கள். ஆனால் உள்ளூராட்சி மன்றங்கள் முதல் பாராளுமன்றம் வரை பெண்களின் பிரதிநிதித்துவம் மிகச் சொற்ப அளவிலேயே காணப்படுகிறது. இந்த நிலைக்கு காரணம் என்ன? பெண்கள் அரசியலிற்கு அருகதையற்றவர்கள் எனும் போலி விம்பத்தை இந்த சமூகசூழல் உருவாக்கி வைத்துள்ளது. ஆனால் சமூகத்தின் மிக அடிப்படை அலகான குடும்பத்தில் பெண்கள் ஆற்றும் சேவையே அவர்கள் சமூகத்திற்கும் சரியான முறையில் தேவையறிந்து பணியாற்ற முடியும் என்பதை தெளிவுபடுத்துகின்றது. காலம் காலமாக அடுப்படியே பெண்களுக்கு பொருத்தமான இடம் எனும் போர்வையை சமூகம் உருவாக்கி அதை பெண்களுக்கும் வழக்கப்படுத்திவிட்டது. ஏன் பெண்கள் சாதனை புரியவில்லையா? பெண்களுக்கு கல்வியை பெற்றுக் கொடுக்கவில்லையா? எனும் கேள்விகளை சமூகம் திருப்பி கேட்க முடியும். ஆனால் எத்தனை சாதனை புரிந்தாலும், உயர்கல்வியை கற்றுத் தேர்ந்தாலும் வீட்டிற்குள் வந்தவுடன் சமயலறையில் தனது பணியை தொடரும் பெண்களாக தான் பெரும்பாலும் இருக்கின்றார்கள் அல்லது இருக்க வேண்டும் என விரும்பப்படுகின்றார்கள்.
“அரசியல்” என்பது ஆட்சி செய்வது மட்டும்தானா? இல்லவே இல்லை. அரசியல் என்பது ஒரு பரந்த விடயப்பரப்பு. ஆட்சிமுறை,அரசு, கொள்கை, சட்ட உருவாக்கம், பிழையை சுட்டிக்காட்டும் துணிச்சல், அபிவிருத்தி நோக்கு என பல உள்ளடக்கங்களை கொண்டிருக்கின்றது. உலகின் முதல் பெண் பிரதமரை உலகிற்கு வழங்கிய நாடு எனும் பெருமையை பலரும் மார்தட்டி கொண்டாலும் இன்றும் பெண்கள் அரசியல் எனும் அகன்ற பரப்பின் வாசலில் நுழைவதற்குள் ஆயிரம் சவால்களை எதிர்நோக்குகின்றார்கள் என்பது நாட்டின் சாபமாகவே கருதப்பட வேண்டியுள்ளது. இயன்றளவும் அதிகமான பெண்களை உள்ளூராட்சி மன்றங்களுக்கு கூட அனுப்ப முடியாமல் இருப்பது உலகின் முதல் பெண் பிரதமரை தந்த நாட்டிற்கு இழுக்கான விடயம் ஆகும். தெற்காசிய நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் கூட 25 வீதத்திற்கும் அதிகமான பெண்கள் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளார்கள். இலங்கையில் 25 சதவீத கோட்டா முறை கூட உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பயனளிக்கவில்லை என்றுதான் கூற முடியும்.
இன்று பெண்களுக்கு அரசியல் துறையில் உள்ள சவால்கள் பற்றிய ஆய்வு மிக அவசியமானதாக இருக்கிறது. காரணம் தேர்தலில் வாக்களிப்பது தொடங்கி வேட்பாளராக இருப்பது வரை பெண்கள் பல சவால்களை சந்திக்கின்றார்கள். பெரும்பாலான பெண்களுக்கு சுயமான விருப்பில் வாக்களிப்பதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை. காரணம் பெண்களுக்கு அரசியல் நடைமுறை, அரசியல் போக்கு பற்றிய கலந்துரையாடல்கள் அல்லது விளக்கங்கள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதில்லை. அதையும் தாண்டி குடும்ப அங்கத்தவர்களின் விருப்பத்திற்கு வாக்களிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. வேட்பாளராக பதிவு செய்ய போகும் பெண்களுக்கு எதிராக சமூகம் இழைக்கும் துஸ்பிரியோகங்களை பற்றியும் பேசவேண்டும். ஒரு பெண் வேட்பாளருக்கு குடும்பத்திலிருந்து வரும் அழுத்தங்கள், தடைகள் ஒருபுறமும் அதை சமாளித்துக் கொண்டு தேர்தலில் போட்டியிடும் பெண்களுக்கு எதிராக பாலியல் கருத்துக்களை பரப்புதல், அவர்களுடைய நடத்தையை பிழையாக சித்தரித்தல், துன்புறுத்தல் மற்றும் மிரட்டல்கள் மூலம் எதிர்த்தல் போன்ற செயல்பாடுகளையும் இச் சமூகம் செய்துவருகிறது. ஊடகத்துறையும் தனது பங்கிற்கு பெண் வேட்பாளர்களுக்கு பல உளவியல், சமூக அழுத்தங்களை கட்டவிழ்த்து விட தவறுவதில்லை. அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்களை பற்றி நகைச்சுவை பொழுதுபோக்கு நிகழ்சிகள் என்ற பெயரில் அவர்களை இழிவுபடுத்திய ஊடகங்களும் இலங்கை பெண்கள் அரசியலில் வர கூடாது என்று எண்ண வைக்கும் நிலையை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.
பெண்கள் அரசியலில் உள்வரவேண்டும் என்பதற்கு அத்திவாரமாக பெண்கள் சுயமாக வாக்களிக்கும் நிலை, பெண்கள் அரசியல் கலந்துரையாடல்களில் ஈடுபடுதல் போன்ற அடிப்படை செயற்பாடுகள் இடம்பெற வழிவகைகள் செய்யப்பட வேண்டும். தொடர்ச்சியான வழிகாட்டல்களும், அரசியலில் பெண்களின் தேவைப்பாடுகள் குறித்த விழிப்புணர்வும் சமூகமட்டத்தில் வழங்கப்பட வேண்டும். அதே போல படித்த முன்மாதிரிகையான பெண்கள் அரசியலை சாக்கடையாக பார்ப்பதையோ அல்லது தமக்கு அவசியமற்றது என்ற எண்ணத்தையோ கைவிட்டு விட்டு அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுதல் ஏனைய பெண்களையும் அரசியலில் ஈடுபட வழிவகுக்கும். அரசானது வெறுமனே தேர்தல் வேட்பாளர்களில் மட்டும் கோட்டா முறையை அமுல்படுத்தாமல் அரசு மன்றங்கள், சபைகளின் அங்கத்துவ நிலையில் கோட்டா முறையை அமுல்படுத்தல் செய்ய வேண்டும். இவ்வாறான நாடானது அரசியலில் பெண்களுக்கும் சமத்துவம் அளிக்கும் நாடாக புதிய சாதனை படைக்கும்.
நன்றி.
கட்டுரை : மரியதாஸ் ஆன் அமலினி பிகுறாடோ
The views expressed on this blog post are those of the author and do not reflect the official position of Hashtag Generation | இந்த வலைப்பதிவு இடுகையில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் அனைத்தும் உரிய ஆசிரியரின்/படைப்பாளியின் கருத்துக்களேயாகும். இவை ஹேஸ்டேக் தலைமுறையின் உத்தியோகபூர்வ நிலையை பிரதிபலிக்கவில்லை.