இருபத்தோராம் நூற்றாண்டில் அபிவிருத்தி, சமத்தும், சாதனைகள் என்று உலகளாவிய ரீதியில் முன்னேற்றங்களையும் மேம்பாடுகளையும் நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் நாம் இன்னும் பெண்கள் தொடர்பான பிரச்சனைகளில் முழுமையான தீர்வை எட்டவில்லை என்பதே நிதர்சனம். குறிப்பாக இலங்கையானது பெண்களைப் பொறுத்தவரையிலும் பெண்களுக்கான அபிவிருத்தி வீச்சிற்குள் இருக்கின்ற பல நாடுகளுடன் ஒப்பிட்டு நோக்குகையில் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. சமூக அளவில் பெண்கள் பொருளாதார ரீதியாக வினைத்திறன் அற்றவர்களாகவும், பலவீனமானவர்களுமாகவே சித்தரிக்கப்படும் எண்ணப்பாங்கு நிலவி வருகிறது.
தினம்தோறும் பெண்களுடைய வாழ்வு வீட்டுக்குள்ளேயும் வெளியேயும் பல வெவ்வேறுபட்ட சவால்களுக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. இன்று பரவலாக பெண்விடுதலை மற்றும் பெண்ணுரிமை குறித்து பேசப்பட்ட போதிலும் அது அறிவுபூர்வமான மற்றும் அனைத்து வகைகளிலும் தெளிவான அம்சமாக அடிமட்ட மக்கள் மத்தியில் சென்றடையவில்லை என்றே குறிப்பிடமுடியும். பெண்களுக்கான பல ஜனநாயக உரிமைகளான கல்வி, தொழில் வாய்ப்பு, வாக்குரிமை போன்றவை ஆசியாவிலேயே உயர்ந்த அளவில் இலங்கையில் காணப்படுகின்ற போதிலும் இன்னும் பலதரப்பட்ட பிரச்சினைகள் இருந்துகொண்டே தான் இருக்கின்றன. பெண்ணொருவர் குறிப்பிட்ட வயதுப் பருவத்தில் தான் வன்முறைகளை எதிர்கொள்கின்றனர் என்ற பிறழ்வான எண்ணக்கரு பரவலாக நிலவி வருகிறது. ஆயினும் ஒவ்வொரு வயதுக்குழுக்களிலுமுள்ள பெண்கள் பல்வேறு வகைப்பட்ட பிரச்சினைகளை சந்திக்க வேண்டி உள்ளது. அதனடிப்படையில் ஆராய்ந்த உலக சுகாதார அமைப்பினது அறிக்கையின் படி (WHO), பொதுவாக பெண்கள் தத்தமது வாழ்நாளில் ஐவகைப்பட்ட நிலைகளில் வெவ்வேறு இடர்களை எதிர்கொள்கின்றனர்.
01) பிறப்பிற்கு முன்னர் சந்திக்கும் பிரச்சனைகள்
02) மழலைப் பருவத்தின் துஷ்பிரயோகங்கள்
03) சிறுமியர் பருவ இடர்கள்
04) வளர்சிதை மாற்றம் மற்றும் வயது வந்தோர் பிரச்சினைகள்
05) முதியோர் பருவ வன்முறைகள்
இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் இந்தியாவில் 2016-ம் ஆண்டின் கணிப்புப்படி நாடளாவிய அளவில் 3 லட்சத்து 38 ஆயிரத்து 954 குற்றங்கள் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்டுள்ளன. இலங்கையை எடுத்துக்கொண்டால் ஏராளமான குற்றங்கள் இன்னமும் பதிவு செய்யப்படாதவையாக இருத்தலே கவலைக்குரியது. இவ்வாறு ஏற்படும் வன்முறைகளை பல விரிந்த கோணங்களில் அணுக இயலும். ‘தனிநபர் மற்றும் குழுக்களால் ஏற்படும் வன்முறைகள்”, ‘அரசுகளால் நிகழ்த்தப்படும் வன்முறைகளும்’ அடங்கும். உலகளாவிய ரீதியில் மூன்று பெண்களில் ஒருவர் தனது வாழ்நாளில் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அடிக்கப்பட்டோ, பாலியல் புணர்விற்கு வற்புறுத்தப்பட்டோ, பிறவகையிலோ வன்முறைக்கு ஆளாக்கப்பட்டோ நிர்பந்திக்கப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக பெரும்பாலான வன்முறைகள் எதிர்கொள்பவர் பெண் என்பதனால் மட்டுமே அவருடைய பால்நிலை அடையாளத்தை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது.
பெண் சிசுக் கொலை, கல்வி மறுத்தல், வரதட்சணை கொடுமை, வன்கலவி, குடும்ப வன்முறை, பாலின துன்புறுத்தல், கருத்தடுப்பு முறைகளின் கட்டாயப் பயன்பாடு, பால் தெரிவு கருக்கலைப்பு, மகப்பேறு வன்முறை மற்றும் சமூக நம்பிக்கைகளின் அடிப்படையிலான கெளரவக் கொலை, வரதட்சிணை மரணம், பெண் உறுப்பு சிதைப்பு, கடத்துதல், கட்டாயக் திருமணம் ஆகியவற்றை ஒரு பெண் தனித்தனியாக எதிர்கொள்ளும் வன்முறைகளாக குறிப்பிடலாம். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்வதற்கு பிரதான காரணமாக சமூக அமைப்பு இருக்கின்ற போதிலும், நுணுக்கமாக ஆராய்ந்தால், பெண்களே அவர்களுக்கு எதிரியாக உள்ளனர். முதலில் பெண்கள் தாங்களும் இச்சமூகத்தின் சமத்துவமான பிரிவினர் என்றும் பால்நிலை அடையாளங்கள் மற்றும் பிரிவினைகளில் இருந்து விடுபட மன உறுதியும் கொள்ளுதல் வேண்டும். பல்வேறான குடும்பங்களில் சமூக அமைப்பின் திணிப்புகளை பெண்கள் தாமாகவே முன்வந்து பொருத்திக்கொள்கின்றனர்.
பெண்ணொருவர் பொது வெளியினில் தன்னுடைய கருத்துக்களையோ படைப்புக்களையோ முன்வைக்கப்படும் போது இச் சமூகத்தினால் வீசப்படும் எதிர்மறை விமர்சனங்கள் மற்றும் முரணான பின்னூட்டங்கள் பெரும் சவாலாக இருக்கின்றது. அதிலும் குறிப்பாக பாலியல் வசை, உடல் ரீதியான விமர்சனங்கள், பகிடிகள், தவறாகச் சித்தரித்தல் போன்றவை பெண்களால் பரவலாக எதிர்கொள்ளுமாறு நிர்பந்தம் ஏற்படுத்தப்படுகின்றது. இதில் அவதானிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் பெரும்பாலும் ஒரு பெண் முதன்முறையாக இத்தகைய கருத்துக்களை ஏற்கும் சூழ்நிலையில் குறிப்பிட்ட பெண் தன்னுடைய முயற்சியை கைவிடுகின்ற நிலை ஏற்படுகிறது அல்லது முயற்சியில் பின்னிக்கும் அவலம் நிகழ்கிறது. ஒரு சில பெண்களே சமூக கணைகளை களைந்து தன்னுடைய நிலைத்திருகைக்காக பயணிக்க முயல்கின்றனர். ஏனெனில் பொதுவாழ்க்கைக்கு வரும் பெண்கள் தத்தமது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளமையேயாகும்.
பெண்கள் மீது தொடுக்கப்படும் துன்புறுத்தல், ஏற்றத்தாழ்வு மற்றும் சமுதாயத்தின் பல துறைகளில் பெண்களின் குறைவான பங்களிப்பு என தீர்வற்றவையாக தோற்றமளிக்கும் பல்வேறு பிரச்சனைகள், பெண்களிற்கு மனச்சோர்வையும் துயரத்தையும் கொடுப்பவையே. இவ்வாறான பிரச்சினைகள் குடும்ப அங்கத்தவர்களாலும், உறவினர்களாலும் அதிக அளவில் ஏற்படுத்தப்படுவதோடு பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் பிரச்சனைகளும் ஏராளம். ஐக்கிய நாடுகள் சபையானது பெண்களுக்கு எதிரான வன்முறையை, “காலங்காலமாய் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான சமனில்லா செல்வாக்கின் வெளிப்பாடே பெண்களுக்கு எதிரான வன்முறையாகும்” எனவும், “ஆண்களை விடத் தாழ்ந்தநிலைக்குப் பெண்களைத் தள்ளும் இக்கட்டான சமுதாயச் செயற்பாடுகளுள் ஒன்றே பெண்களுக்கு எதிரான வன்முறையாகும்.” எனவும் வரைவிலக்கணப்படுத்துகின்றது.
இலங்கையை பொறுத்த வரையிலும் கலாசாரம், சமூக கட்டமைப்புக்கள், பொருளாதார அணுகுதல்கள், மற்றும் அரசியல் என்ற அம்சங்கள் மூலமாக, கிராமப்புற பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாக, பரவலாக கருதுகின்றனர். ஆயினும் கிராமப்புற பெண்களைப் போலவே, நகரப் புற பெண்களும் இந்தப் பிரச்சினைகளுக்கும் அழுத்தங்களுக்கும் முகங்கொடுக்கின்றனர். பகலிலோ அல்லது இரவிலோ தனியாகவோ கூட்டமாகவோ செல்லும் பெண்கள், ஆண்களின் தேவையற்ற சீண்டல்களுக்கு முகங்கொடுக்க நேரிடுகிற நிலையில் பெண்களுடைய போக்குவரத்து நடவடிக்கைகளும் பெரிதும் நெருடலுக்குள்ளாகுமாறே கணிக்கப்படுகின்றது. பொதுப் போக்குவரத்து நடவடிக்கைகளின் போது வாய்வழி அல்லது உடலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். முறைப்பாடு செய்யப்படும் பிறழ்வான நடவடிக்கைகளுக்கு தீர்வுகள் கிடைக்கின்ற போதிலும் பெரும்பாலான பிரச்சினைகள் முறைப்பாடு செய்யப்படுவதில்லை. இதன் பொருட்டே இன்னும் இன்னும் இத்தகைய துன்புறுத்தல்கள் துணிவுடன் அரங்கேறுகின்றன.
மேலும் அரசுகளால் விளைவிக்கப்படும் வன்முறைகளாக போர்களின் போது போர் வன்புணர்வு, பாலியல் வன்முறை மற்றும் பெண்ணடிமைத் தனம், பள்ளிகளிலும் பொது இடங்களிலும் பெண்களுக்கான கழிப்பிட வசதி மறுக்கப்படுதல், கட்டாயக் கருக்கலைப்பு, காவல்துறை மற்றும் அதிகார வர்க்கத்தினால் வன்முறை, கல்லால் அடித்தல், தவிரவும் பெண்களைக் கடத்துதல், கட்டாய விபசாரம் போன்ற பல வன்முறைகளில் பாதிக்கப்பட்ட பெண்களிற்கான தீர்வுகள் வழங்க பின்னிற்றல் போன்றவற்றை குறிப்பிட முடியும் என்கின்ற போதிலும் மேற்குறிப்பிட்ட அத்தனை இடர்களும் இலங்கையில் இடம்பெறுகின்றவா என்பதன் நிச்சயத்தன்மை இன்றிய போதிலும் உலகளாவிய ரீதியில் இவ்வாறான வன்முறைகள் இடம்பெற்ற வண்ணமே தான் உள்ளன. குடும்பத்தினரால் விளைவிக்கப்படும் நேரடி மற்றும் மறைமுக வன்முறைகள் தொடர்பில் பொதுவில் பேசுவதற்கான வெளிகள்கூட பெண்களிற்கு கிடைப்பதில்லை. அதனையும் மீறி ஒரு பெண் தன்னுடைய குடும்பத்தினர் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அவளே மேலும் துன்பங்களை எதிர்கொள்ள நேரிடுகின்றது.
தொழில் தொடர்பான எண்ணக்கருக்களில் அணுகின்றபோது இன்றும் பல தொழில் தரு நிலையங்களில் பெண்கள் குறைந்தளவான ஊதியத்தை பெறுபவர்களாகவே இருக்கின்றனர். காரணம் குடும்ப வருமானம் என்று நோக்குகின்ற போது ஒவ்வொரு குடும்பத்தலைவனும், அவனது மனைவி பிள்ளைகள் உட்பட வாழ்க்கையை நடத்துவதற்குப் போதுமான அளவு வருமானத்தை கொடுப்பதற்காக தொழில் புரிபவனாக கருதப்படும் சந்தர்ப்பங்களில் பெண்கள் வருமானமீட்டலில் ஈடுபடும் போது, அது குடும்பத்தின் மேலதிக வருமானத்திற்காகவும் பிற தேவைகளுக்காகவும் அவள் உழைப்பதாகக் கருதி சமனான வேலைகளின் போதும் குறைந்தளவு ஊதியத்தையே வழங்குகின்றனர். அத்துடன் முதலாளித்துவ கலாசாரமும் தந்தை வழிச் சமூக அமைப்பின் உறுதித்தன்மையும் பெண்களது பொருளாதார அணுகுதலை முன்னிலைப்படுத்த பின்னிக்கின்றது.
சமனற்ற கூலியை பெறுவது மட்டும் அல்லாமல் தொழிற்சாலை, வயல் அல்லது பெருந்தோட்டம் மற்றும் நாட்கூலி வேலைகளில் ஈடுபடும் பெண்கள் மட்டுமன்றி தொழில் முனையும் பெரும்பாலான பெண்கள் தொழில் செய்யும் நேரங்கள் தவிர்ந்த பிற நேரங்களை விட்டு வேலைகளிலும் செலவிடவேண்டியதாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் குடும்பத்தின் பிற உறுப்பினர்களும் இவை தொடர்பிலான புரிதலை கொண்டிருத்தல் நன்று. பொருளாதாரத்தையும் தாண்டி சுகாதாரம் மற்றும் உளவியல் பிரச்சனைகளையும் பெண்கள் எதிர்கொள்ள வேண்டி உள்ளது.
பெண்களுக்கெதிரான வன்முறைகளில் இலங்கை அரசின் அணுகுதல் பற்றி நோக்குகின்ற போது இலங்கையில் 1833 ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட பெண்களைப் பலாத்காரம் செய்தல் பற்றிய சட்டம் இன்னமும் மாற்றப்படவில்லை. நூறு ஆண்டுகளை கடந்தும் மாற்றம் செய்யப்படாத சட்டம் போதுமானது என்ற எண்ணக்கரு எத்தனை ஆரோக்கியமானது என்பது கேள்விக்குறியே. அத்துடன் பெண் வன்முறைகள் தொடர்பான வழக்குகளில் உடனடி தீர்ப்பு வழங்கும் செயன்முறை அவசியம் ஆகும். வன்முறை நடந்து காலம் கடந்த பின் வழங்கப்படும் தீர்வுகள் வேறு பல சமூக பிரச்சனைகளை உருவாக்கலாம்.
பெண்களின் முன்னேற்றத்திற்கான அழுத்தங்கள் உலகளாவிய அளவில் முன்னெடுக்கப்பட வேண்டும். அண்மை ஆண்டுகளில், உலகளாவிய ரீதியில் நெறிமுறைகள், சான்றுரைகள் போன்றவற்றின் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைக்குத் தீர்வு காண முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய ஒன்றியம் பாலினத் துன்புறுத்தலுக்கான வழிகாட்டுதலையும் பெண் கடத்தல்களுக்கு எதிரான வழிகாட்டுதலையும் வெளியிட்டுள்ளது. அத்துடன் ஒவ்வொரு பிரதேச செயலக மட்டத்திலும் இலங்கையில் பெண்கள் விவகாரங்கள் தொடர்பில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருத்தலும் ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களிலும் பெண்கள் முறைப்பாட்டு பிரிவு இருத்தலும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் பெண்களது விவகாரங்கள் அரச மட்டத்தில் அணுகப்படுதல் மட்டும் அல்லாமல் சமூக கண்ணோட்டங்களிலும் மாற்றங்கள் அவசியம். கலாசார விழுமியங்கள், மற்றும் நம்பிக்கைகளை வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தாது, அவர்களின் உடல், உள நலன் ஆரோக்கியங்களுக்காகவும் அவர்களின் எதிர்காலத்திற்காகவும் கருத்திற் கொண்டு, கலாசார விழுமியங்களில் மாற்றங்களை கொண்டு வர முயற்சித்தல் வேண்டும். அத்துடன் ஒவ்வொரு பெண்களும் தத்தமது தனிப்பட்ட இயலுமைகள் தொடர்பிலான விழிப்புணர்வை பெற்றுக்கொள்வதோடு குடும்ப வரைமுறைகளையும் தாண்டிய தமது ஆளுமை விருத்தி செயற்பாடுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளவும், பிரச்சினைகளை எதிர்த்து குரல் கொடுக்கவும் முயல்தல் சிறந்தது.
டினோஜா நவரட்ணராஜா.
The views expressed on this blog post are those of the author and do not reflect the official position of Hashtag Generation | இந்த வலைப்பதிவு இடுகையில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் அனைத்தும் உரிய ஆசிரியரின்/படைப்பாளியின் கருத்துக்களேயாகும். இவை ஹேஸ்டேக் தலைமுறையின் உத்தியோகபூர்வ நிலையை பிரதிபலிக்கவில்லை.