குறிப்பாக சட்டத்தரணி சாலிய பீரிஸின் தொலைபேசி உரையாடல் என சமூக ஊடகங்களில் சிங்கள மொழியிலான தொலைபேசி உரையாடல் ஒன்றின் ஒலிப்பதிவொன்று பரவலாக பகிரப்பட்டது. எனினும் நாங்கள் அது பற்றி ஆராய்ந்து பார்த்த போது அது உண்மையிலேயே சட்டத்தரணி சாலிய பீரிஸுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் அல்ல என்பதுடன் போலியாக அவர் போல் பேசி அதனை பதிவு செய்து ஒரே நேரத்தில் பல்வேறு சமூக வலைத்தள பகுதிகளில் பதிவேற்றம் செய்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இது தன்னுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடல் ஒன்று அல்ல என்பதை மேலும் உறுதி செய்தார்.
மேலும் இந்த போலியான தொலைபேசி உரையாடலை முகப்புத்தகத்தில் பகிர்ந்து கொண்டுள்ள நபர்களை நோக்கும்போது அவற்றில் பெரும்பாலானவை போலியான முகநூல் கணக்குகளாகவே காணப்பட்டன. மேலும் குறித்த உரையாடலை பதிவேற்றம் செய்திருந்த முகநூல் பகுதிகள் பெரும்பாலானவை, தற்போது ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கத்திற்கு முற்று முழுதாக சார்பான மற்றும் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்ற மக்கள் போராட்டத்தை எதிர்த்து பதிவுகளை பகிர்கின்ற (Pages) பக்கங்களாகவே அவை காணப்பட்டன. மேலும் ஒரு சில பக்கஙகள்(pages) தொடர்ந்து மக்கள் போராட்டங்களுக்கு எதிரான போலியான கருத்துக்களை பகிர கூடிய முகநூல் பக்கங்ககளாகவும் (Facebook pages) காணப்பட்டன.
அதேபோல் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் எதிர் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறி இன்னும் சில ‘தேர்தல் பிரச்சார விளம்பரங்கள்’ போன்று வடிவமைக்கப்பட்ட பதிவுகள் சமூக வலைத்தளங்களில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன. மேலும் வாட்ஸ்அப்(WhatsApp) போன்ற தொடர்பாடல் வலைத்தளங்களிலும் அவை பரவலாக பகிரப்பட்டன. இது பற்றி சாலிய பீரிஸ் சட்டத்தரணியிடம் நாங்கள் வினவியபோது அவற்றை அவர் முற்றுமுழுதாக மறுத்ததுடன், தான் செய்து வருகின்ற சேவையினை வேண்டுமென்றே இழிவு படுத்தும் நோக்கத்தில் குறித்த பதிவுகள் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டு திட்டமிட்ட முறையில் மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றன, என்று தெரிவித்தார்.
அண்மைய ஒரு சில மாதங்களாக நாடு பூராகவும் மக்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக வீதிகளில் இறங்கி போராட்டம் செய்து வருகின்றார்கள். இந்தப் போராட்டங்களில் சட்டத்தரணிகள் நேரடியாக மக்களுடன் நின்று வீதிகளுக்கு இறங்கியும் நீதிமன்றங்களிலும் போராடி வருகின்றார்கள். குறிப்பாக மக்களுக்கு இலவசமாக சட்ட உதவிகளை வழங்குவதுடன் சட்டம் பற்றிய தெளிவுபடுத்தல்களை காலிமுகத்திடல் உட்பட சகல இடங்களிலும் செய்து வருகின்றார்கள்.
மிரிஹான பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரான சாலிய பீரிஸ் உட்பட பெரும்பாலான சட்டத்தரணிகள் கங்கொடவில நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதன் பின்னர் தொடர்ந்து காலிமுகத்திடல் உட்பட அனைத்து பிரதேசங்களிலும் அரசுக்கு எதிராகப் போராடுகின்ற மக்களுக்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குரல் கொடுத்து வந்தது. குறிப்பாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக கடந்த வருடம் தெரிவு செய்யப்பட்டதுடன் அவர் சட்டத்தரணிகள் சங்கம் சார்பாகவும் தனியாகவும் பல சந்தர்ப்பங்களில் சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் பக்கம் நின்று குரல் கொடுத்துள்ளார்கள்.
எனவே நாம் மேற்கூறியது போல் தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கத்தை ஆதரித்தும் போராட்டக்காரர்களை எதிர்த்தும் பதிவுகளை மேற்கொள்கின்ற முகநூல் பகுதிகளிலேயே இவ்வாறான போலியான தகவல்கள் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
எனவே நீங்கள் ஏதேனும் இதுபோன்ற பதிவுகளை சமூக வலைத்தளங்களில் கண்டால் உடனடியாக அவற்றை பிறருடன் பகிர்ந்து கொள்வதற்கு முன்னர் குறித்த பதிவுகளை பதிவு செய்திருக்கின்ற நபரோ அல்லது முகநூல் பகுதி பற்றியோ ஆராய்ந்து பாருங்கள். இதற்கு முன்னர் அவர்கள் பதிவு செய்திருக்கின்ற பதிவுகளின் உண்மைத்தன்மை பற்றி பலமுறை ஆராய்ந்து பாருங்கள். அதன் பின்னர் அவர்கள் கூறுகின்ற செய்தியின் உண்மைத் தன்மையை மேலும் உறுதி செய்து கொள்ள, அதிலே குறிப்பிட்டு இருக்கின்ற நபர்களின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தள பகுதிகளை ஆராயுங்கள்.
ஏனெனில் அண்மைய நாட்களாக மிகவும் திட்டமிட்ட முறையில் மக்கள் போராட்டங்களை திசை திருப்பும் முயற்சியில் பல்வேறு குழுக்களும் நபர்களும் சமூக வலைத்தளங்களில் செயற்பட்டு வருகின்றார்கள். ஏதேனும் ஒரு நபரை இழிவுபடுத்துதல் அல்லது அதற்கு துணை போதல் என்பது சட்டப்படி குற்றமாகும். எனவே இது போன்ற பதிவுகளை பகிரும் போது இரு முறை சிந்தித்து செயற்படுங்கள்.