இலங்கை வங்கியின் அறக்கட்டளை மூலம் போனஸ் வழங்கப்படுவதாக கூறி WhatsApp இல் இணைப்பொன்று(Link) கடந்த சில நாட்களாக பகிரப்பட்டதை அவதானித்தோம்.
அதிலே கீழே உள்ளது போன்ற கேள்விகள் சில கேட்கப்பட்டிருந்தன.
அவற்றுக்கு பதில் அளித்த பின்னர், நாம் 10,000$ பணத்தினை வெற்றி பெற்றுள்ளோம், என குறிப்பிட்டதோடு இந்த பதிவினை மேலும் 20 பேருக்கும் 5 குழுக்களுக்கும் பகிருமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது.
WhatsApp ஊடாக பகிரப்பட்ட செய்தியின் Screenshots.
இதனை பார்க்கும்போதே இது ஒரு போலியான தகவல் என்பதை காணக் கூடியதாக உள்ளதுடன் இது இலங்கை வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அல்ல என்பதும் தெளிவாகின்றது.
எனவே நாங்கள் மக்கள் வங்கியின் வாடிக்கையாளர் தொலைபேசி இலக்கத்தினை தொடர்புகொண்டு இதுபற்றி வினவினோம்.
இந்த விடயம் தொடர்பில் அவர்களிடம் வினவிய போது, இது முற்றிலும் போலியான ஒரு தகவல் என்பதனை உறுதி செய்தார்கள். அத்தகைய இணைப்புக்களோ அல்லது தகவல்களோ பகிரப்படும் சந்தர்ப்பங்களில் அவற்றுக்குள் பிரவேசிக்க வேண்டாம், என அந்த அதிகாரி மேலும் வலியுறுத்தினார்.
கடந்த செப்டம்பர் மாதம் முதல், Facebook மற்றும் WhatsApp போன்ற சமூக ஊடகங்களில் பல்பொருள் அங்காடிகளை (Super Markets) குறிவைத்து இது போன்ற பல போலியான செய்திகள் பரப்பப்பட்டன. அவையும் போலி செய்திகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டதுடன் அது பற்றி நாங்கள் உண்மை சரிபார்ப்புகளையும் வெளியிட்டிருந்தோம். குறிப்பாக குறித்த பல்பொருள் அங்காடிகள் வழங்குவதாக கூறப்பட்ட பரிசில்கள் தள்ளுபடிகள் மற்றும் வவுச்சர்கள் பற்றிய செய்திகள் அனைத்துமே போலியானவையாகும்.
இவ்வாறான போலியான தகவல்களை வெளியிடுபவர்களின் பிரதான நோக்கம் பொது மக்களுடைய தனிப்பட்ட தகவல்களை சேகரித்து மோசடிகளில் ஈடுபடுவதாகவும். எனவே மக்கள் இவற்றை பகிரும் போதும் இணைப்புக்குள் செல்லும் போதும் மிகவும் அவதானத்துடன் செயல்பட வேண்டும். மேலும் உங்களுடைய கையடக்கத் தொலைபேசி அல்லது கணனிகளில் (Debit மற்றும் Credit) வங்கி அட்டைகளின் தரவுகள் இருப்பின் அவையும் திருடப்படலாம்.
சமூக ஊடகங்களில் உங்களுடைய தகவல்களை கேட்டு பயப்படுத்துகின்ற இணைப்புகளுக்குள் நுழைய முன் அவை குறித்த நிறுவனங்களின் உத்தியோகபூர்வ இணையத் தளங்களை இரு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் அவர்களுடைய தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தி கொள்ளவும் முடியும். மிக இலகுவாக அந்நிறுவனங்களின் உத்தியோகபூர்வ முகநூல் மற்றும் இணைய தளங்களை இனங்காண முடியும்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் நிலைமை மற்றும் பண்டிகைகள் காரணமாக, ஏராளமான கொடுக்கல் வாங்கல்கள், பொருட்களை பெற்றுக் கொள்ளுதல், பயணங்களை மேற்கொள்ளுதல் போன்ற அத்தியாவசிய செயற்பாடுகள் யாவும் இணையதளங்கள் வாயிலாகவே நடைபெறுகின்றன. எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களையும் குறித்த சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக வழங்க வேண்டும். அப்போது தேவையான அத்தியாவசிய தகவல்களுக்கு புறம்பாக மேலதிகத் தகவல்களையும் வினவி இருப்பின் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து உங்களுடைய தகவல்களை வழங்குங்கள்.
மிக முக்கியமாக நீங்கள் யாருக்கு தகவல்களை வழங்குகிறீர்கள்? அவர்கள் யார் ? இது அவர்களுடைய உத்தியோகபூர்வ இணையத்தளமா ? என்பன பற்றி மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
இணையத்தளம் வாயிலாக நடைபெறுகின்ற இவ்வாறான போலி சம்பவங்கள் பற்றி இதற்கு முன்னரும் நாங்கள் உண்மை சரிபார்ப்புகள் சில மேற்கொண்டுள்ளோம். அவற்றின் இணைப்பு கீழே,
https://tinyurl.com/mr4ad7vc