அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், போராட்டங்களை நடத்துவதற்கு ஆறு மணித்தியாலங்களுக்கு முன்னர் பொலிஸாருக்கு அறிவித்து அனுமதி வழங்கப்பட வேண்டுமென குறிப்பிட்டார்.
பதில் பாதுகாப்பு அமைச்சரின் இந்தக் கருத்து மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் அமைந்துள்ளது.
பதில் பாதுகாப்பு அமைச்சரான, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்து கீழே வழங்கப்பட்டுள்ளது.
“போராட்டம் நடத்துவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்னதாக காவல்துறைக்கு அறிவித்து அனுமதி பெற்றால் எந்த பிரச்சனையும் இடம்பெறாது என்பதை நினைவூட்ட விரும்புகிறோம். நாட்டின் பொது அமைதிக்காக வகுக்கப்பட்ட சட்டங்களை மீறி பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளும் எந்தவொரு தரப்பினரும் எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்கப்படமாட்டாது.”
முழு செய்தியாளர் சந்திப்புக்கு இங்கே அழுத்தவும்.
இலங்கை அரசியலமைப்பின் பிரிவு 14 (1) ஒவ்வொரு குடிமகனுக்கும் (a) கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம் உள்ளடங்கலான பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம்; (b) அமைதியான முறையில் ஒன்று கூடும் சுதந்திரம்; © பங்குபற்றுதலுக்கான உரிமையும் சுதந்திரமும்
பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 77வது பிரிவு, அணிவகுப்பு/பேரணி (போராட்டங்கள் போன்றவை) பற்றிக் கூறுகிறது.
ஆகவே, பேரணி தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்தாலே போதுமானது.
அதுமட்டுமல்லாமல், அரசியலமைப்பே நாட்டின் உச்சபட்ச சட்டமாகும். அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் குடிமக்களின் உரிமையை அரசியலமைப்பானது உறுதி செய்கிறது.
இந்த உரிமையை உறுதி செய்யும் வகையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உள்ளது.
“விவியன் குணவர்தன v ஹெக்டர் பெரேரா மற்றும் பலர்” என்பதே தீர்ப்பாகும்.
இது தொடர்பான வழக்கின் தீர்ப்பு கீழேயுள்ளது.
“பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 77 (1) இன் படி, சரியான அனுமதியின்றி நகர்ப்புறத்தில் ஒரு பொது வீதியில் அணிவகுப்பு/பேரணி (போராட்டம் அல்லது வேறு) நடத்துவது குற்றமாகாது. அதற்கு உரிமமோ அல்லது அனுமதியோ தேவையில்லை. ஒரு அறிவிப்பு மட்டும் போதுமானது”.
இது போன்ற இன்னொரு தீர்ப்பின் மற்றொரு பகுதியில், பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
“அரசியலமைப்பின் 14 (1) , (b) அமைதியான முறையில் கூடும் சுதந்திரம் அனைத்து குடிமக்களுக்கும் வழங்கப்பட்ட அடிப்படை உரிமையாகும்.”
முடிவு : ஆகவே பதில் பாதுகாப்பு அமைச்சரான, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்த கருத்து தவறாக வழி நடத்தும் வகையில் அமைந்துள்ளது என்ற முடிவுக்கு வரலாம். போராட்டம் நடத்துவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்னர் பொலிசாரிடமோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமோ தெரிவித்து அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை. போராட்டம் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மட்டும் தெரிவித்தால் போதுமானது.
ஹாஷ்டாக் தலைமுறையின் முன்னைய உண்மைச் சரிபார்ப்புகளை பார்க்க இங்கே அழுத்தவும்.