Hashtag Generation

பிராந்திய தேர்தல்கள் மற்றும் டிஜிட்டல் தணிக்கை

அண்மைய நிலவரங்களின்படி  2024 ஆம் ஆண்டானது தேர்தல்களுக்கு  மிகவும் முக்கியமான ஆண்டாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. குறைந்தபட்சம் 64 நாடுகளில் (மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில்) தேசியத் தேர்தல்கள் நடைபெற உள்ள  நிலையில், உலகளாவிய ரீதியில், வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு 2024இல் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்வார்கள் என்று டைம் பத்திரிக்கை செய்தி  வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த உலகளாவிய மக்கள் தொகையில் சுமார் 49% ஆனவர்கள் இந்த ஆண்டு தேசியத் தேர்தல்களில் வாக்களிக்க உள்ளனர். 

2024 ஆம் ஆண்டின்  அரைப் பகுதியில், பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள பல நாடுகள் தங்கள் தேசியத்  தேர்தல்களை ஏற்கனவே நடத்திவிட்டன. இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ளதுடன், அதன் பின்னர் விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

வேகமான தொழில்நுட்ப வளர்ச்சியின் காலப்பகுதிக்கு மத்தியில் இந்த ஆண்டில் உலகளாவிய மட்டத்தில் தேர்தல்கள் நடைபெறுகின்றது. அத்துடன் செயற்கை நுண்ணறிவு  (AI) வளர்ச்சியின் வியக்கத்தக்க வேகம் தீவிர பரபரப்பையும்  பாரதூரமான அக்கறையையும் ஏற்படுத்துகின்றது.

பொதுமக்களின் கருத்துக்களில்  ஏமாற்றும் வகையில் செல்வாக்கு செலுத்தவும் தவறான தகவல்களைப் பரப்பவும் செயற்கை நுண்ணறி (AI) பயன்படும் என்ற கரிசனை சரியானது என   ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளன. (https://reutersinstitute.politics.ox.ac.uk/news/ai-deepfakes-bad-laws-and-big-fat-indian-election) செயற்கை நுண்ணறிவினால் (AI) உருவாக்கப்பட்ட ஆழ்ந்த போலிகள் (Deepfakes) – செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஏமாற்றும் வகையில் கையாளப்பட்ட டிஜிட்டல் உள்ளடக்கம் என்பன சமீபத்தில் இந்தியாவில் முடிவுற்ற பொதுத் தேர்தலின் போது பயன்படுத்தப்பட்டுள்ளன. 

இப்பிராந்தியத்தில்  உள்ள பல நாடுகள் ஏற்கனவே  ஆன்லைனில்  தவறான தகவல் மற்றும் பொய்யான தகவல்களின் அழிவுகரமான தாக்கத்தை அனுபவித்துள்ளன. வெறுப்புப் பேச்சு, இனக் கலவரங்கள், சிறுபான்மையினரை இலக்கு வைப்பது, துன்புறுத்தலுக்காக தனிமைப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட நபர்கள் மீதான தாக்குதல்கள் ஆகியவை இதில் உள்ளடங்கும். இத்தகைய சம்பவங்களை எதிர்கொள்வதில் பெரும்பாலான அரசாங்கங்களின் பதில் கடுமையானதாகவும் பெரும்பாலும் கருத்துச் சுதந்திரத்தை மீறுவதாகவும் உள்ளது.  எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் வெறுப்புப் பேச்சு அல்லது தவறான தகவல்களைப் பரப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை தன்னிச்சையான கைது செய்தல் மற்றும் சமூக ஊடக முடக்கங்களை  விதித்தல் ஆகியவை உள்ளடங்கும். ஆன்லைனில்  தவறான தகவல் மற்றும் பொய்யான தகவல்களின் அச்சுறுத்தல் மிகவும் உண்மையானது என்றாலும், அரசாங்கங்கள் வேறுபாடான கருத்துக்களை  அடக்குவதற்கு ஒரு சாக்குப்போக்காக இதனைப் பயன்படுத்த முனைகின்றன. இதில் தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள பல அரசாங்கங்கள் உள்ளடங்கும்.

அண்மையில் கொழும்பில் வெளியிடப்பட்ட “சமூக ஊடக ஒழுங்குவிதிகள் மற்றும் சட்ட ஆட்சி: இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் முக்கியப் போக்குகள்” என்ற தலைப்பிலான சமீபத்திய அறிக்கை, “மூன்று நாடுகளிலும் அரசின் பாதுகாப்பு தொடர்பான   கரிசனைகள் என்ற போர்வையில் தணிக்கையானது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படும் பேச்சைக் மட்டுப்படுத்தியுள்ளது. குறிப்பாக  ஆன்லைன் மற்றும் பொதுவான பேச்சு தொடர்பான குற்றங்களை குறியீடு செய்ய மிகவும் பரந்த மற்றும் தெளிவற்ற மொழியினைப் பயன்படுத்துதல்” தொடர்பான  சிக்கல்களை அவதானித்துள்ளது. 

உதாரணமாக, இந்திய அதிகாரிகள், அரசியல் எதிர்ப்புகள் மற்றும் அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களைத் தடுக்க இணையதள முடக்கத்தை அடிக்கடி பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  அண்மைய ஆண்டுகளில் டிக்டோக் ( TikTok) உட்பட குறைந்தபட்சம் 509 செயலிகள் இந்திய அதிகாரிகளால் தடை செய்யப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.  https://www.hrw.org/news/2024/04/08/indias-general-elections-technology-and-human-rights-questions-and-answers 

மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) பெப்ரவரி 2024 இல், நாட்டின் பொதுத் தேர்தலின் முதல் கட்டம் ஆரம்பிப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன், சமூக ஊடகத்  தளங்களில் அதன் விமர்சகர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின்  ஆன்லைன் உள்ளடக்கம் மற்றும் கணக்குகளைத் தடுக்கத்  தங்கள் அதிகாரங்களை தன்னிச்சையாக பயன்படுத்தியது என அவதானித்துள்ளது. 

https://www.hrw.org/news/2024/04/08/indias-general-elections-technology-and-human-rights-questions-and-answers

அண்மையில், பங்களாதேஷில், எதிர்க்கட்சியின் ஆதரவாளர்கள் பெருமளவில் கைது செய்யப்பட்ட பின்னர், ஒரு போலித்தனமான செயலாகக் கருதி பிரதான எதிர்க்கட்சியால்  பகிஷ்கரிப்பு செய்யப்பட்ட பிரதம மந்திரி ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் தொடர்ந்து நான்காவது முறையாக பாராளுமன்றத் தேர்தலில் பதவிக்கு திரும்பியது. 

https://www.hrw.org/news/2024/01/11/bangladesh-repression-security-force-abuses-discredit-elections  சமூக ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சித்ததற்காக மக்களைக் கைது செய்வது உள்ளடங்கலாக பங்களாதேஷ் அதிகாரிகள் வேறுபட்டக் கருத்துக்களை அடக்குவதாக HRW அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. 2018 டிஜிட்டல் பாதுகாப்புச் சட்டத்திற்குப் (DSA ) பதிலாக செப்டம்பர் 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பங்களாதேஷின் நிகழ்நிலை  பாதுகாப்பு சட்டம் “அதே துஷ்பிரயோகமான  கூறுகளை பராமரிக்கின்றது” என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர் என்று அறிக்கை  குறிப்பிட்டுள்ளது. கருத்துச் சுதந்திரத்தை முடக்கவும், அரசாங்கத்தை விமர்சிப்பவர்களைத் தண்டிக்கவும் பயன்படுத்தப்பட்ட DSA இன் கீழ் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானில் உள்ள அதிகாரிகளும் இணைய முடக்கத்தை ஏற்படுத்திய வரலாற்றைக் கொண்டுள்ளனர்.

சமீபத்திய தேர்தல் சுற்றின் போது இது போன்ற பல இணைய முடக்கங்களை மேற்கொண்டதாக அரசாங்கம் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் பிரதம மந்திரியுமான 

இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடந்த போராட்டங்களுக்கு மத்தியில் கையடக்க தொலைபேசி மற்றும் சமூக ஊடகத் தளங்களை குறிவைத்து மே 2023 இல் இணையம் முடக்கப்பட்டது.சமூக ஊடகங்களுக்கான அணுகல் மீண்டும் 2023 டிசம்பரிலும்  இந்த ஆண்டு ஜனவரியில் இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களிலும் தடுக்கப்பட்டது.  எதிர்க்கட்சிகள் தங்கள் ஆன்லைன் தேர்தல் பிரச்சாரங்களில் இது தலையிட்டதாகக் கூறுகின்றன. https://www.hrw.org/news/2024/02/06/keepiton-pakistans-caretaker-government-and-election-commission-must-ensure-open 

இலங்கையில் சமீப வருடங்களில் அரசாங்கத்தால் சமூக ஊடக முடக்கங்கள் பல சந்தர்ப்பங்களில் விதிக்கப்பட்டுள்ளன. ஈஸ்டர் ஞாயிறு/ பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு உடனடியாகப் பின்னரும், 2022 பொருளாதார நெருக்கடியின் போது  திடீரென்று தொடங்கிய வெகுஜன எதிர்ப்புப் போராட்டங்களும்  இதில் அடங்கும். வெறுப்புப் பேச்சு அல்லது தவறான தகவல்களை பரப்பியதாக சந்தேகிக்கப்படும் நபர்களைக் கைது செய்ய அதிகாரிகள் பல்வேறு சட்டங்களைப் பயன்படுத்தியுள்ளனர். குடியியல் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்பாட்டு ஒப்பந்தம் (ICCPR), பயங்கரவாத தடுப்புச் சட்டம் (PTA) மற்றும் கணினிக் குற்றச் சட்டம் (CCA) போன்ற சட்டங்களின் கீழ் குடிமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சட்டங்களில் சமீபத்திய இணைப்புகளானது  , இந்த ஆண்டு ஜனவரியில் சர்ச்சைக்குரிய சூழ்நிலையில் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை  பாதுகாப்புச் சட்டம் (OSA) ஆகும். அப்போது, ​​இந்தச் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்திற்கு இணங்கச் செய்ய உயர்நீதிமன்றம் பரிந்துரைத்த சில திருத்தங்கள் சேர்க்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் குற்றம் சாட்டினர்.https://www.sundaytimes.lk/240225/news/second-fr-petition-filed-in-sc-against-online-safety-act-549922.html 

பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டச் சட்டங்களை ‘எந்தவொரு அடிப்படையிலும்’ சட்டத்திற்குப் பிந்தைய ஆய்வு செய்வதை அரசியலமைப்பு தடுக்கின்றது என்ற அடிப்படையில் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆன்லைன் குற்றங்களில் இருந்து பெண்கள் மற்றும் சிறுவர்களைப் பாதுகாப்பது என்ற கருத்து அரசாங்கத்தால் OSAஇனை   விளம்பரப்படுத்த  முக்கிய உந்து சக்தியாக பயன்படுத்தப்பட்டாலும், கருத்து வேறுபாடுகளை முறியடிக்கப் பயன்படும் மற்றொரு ஆபத்தான கருவியாகும் என  விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். OSA ஒரு சக்திவாய்ந்த நிகழ்நிலைப் பாதுகாப்பு ஆணைக்குழுவினை நிறுவும், இது “தவறான கூற்று” என்றால் என்ன என்பதைத் தீர்மானிக்கச் சட்டத்தின் விதிகளைப் பயன்படுத்தலாம் என்று இச் சட்டத்தினை விமர்சனம் செய்பவர்கள் கூறுகின்றார்கள். இச்சட்டத்தின் கீழ் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டவர்களுக்கு  மில்லியன் கணக்கான ரூபாய்கள் வரை பெரும் அபராதம் மற்றும் ஐந்து ஆண்டுகள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

நிகழ்நிலைப்  பாதுகாப்பு ஆணைக்குழு இன்னும் நிறுவப்படாத நிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அவ்வாறு செய்யப்படுவது முற்றிலும் சாத்தியமாகும். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், அரசாங்கத்தின் கருத்து  ஒத்துப்போகாத, ‘தவறானது’ என்று அதிகாரிகளால் கருதப்படும் கூற்றுக்களை  ஒடுக்க OSAயைப் பயன்படுத்தப்படும் ஆபத்து எப்போதும் உள்ளது.

PTA மற்றும் ICCPR போன்ற சட்டங்கள் சர்ச்சைக்குரிய அல்லது வேறுபட்டக்  கருத்துக்களைக் கொண்டவர்களின் பின்னால் செல்வதற்கு எவ்வாறு ஆயுதமாக்கப்பட்டுள்ளன என்பதை இலங்கை ஏற்கனவே கண்டுள்ளது. 

உதாரணமாக , கவிஞர் அஹ்னாஃப் ஜசீம், மே, 2020 இல் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தனது “நவரசம்” எனும் புத்தகத்தின் மூலம் தீவிரவாதத்தைப் பரப்பியதாகவும், தனது மாணவர்களுக்கு தீவிரவாத கருத்தியல் கோட்பாட்டைப் பரப்பியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு 18 மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். இதனையடுத்து அவர் புத்தளம் மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

https://www.ft.lk/news/Poet-Ahnaf-Jazeem-arrested-under-PTA-acquitted/56-756267 அதேபோல்,சிங்கள பௌத்த பேரினவாதிகளால் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரத்தை முறியடிக்க பேனா மற்றும் விசைப்பலகையைப் பயன்படுத்தி “கருத்தியலான ஜிஹாத்” க்கு ஆதரவாகப் பேசி   முகப்புத்தகத்தில் பதிவிட்டமையினால்  சமூக ஊடக வர்ணனையாளர் ரம்சி ரசீக் ICCPR மற்றும் CCA சட்டத்தின் கீழ் ஏப்ரல், 2020 இல் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு நவம்பரில், ரசீக் ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது அவரின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உயர்நீதிமன்றம்  தீர்ப்பளித்தது. மேலும் அவருக்கு இழப்பீடு வழங்குமாறு அரசிற்கு உத்தரவிட்டது. https://ceylontoday.lk/2023/11/15/arrest-of-ramzy-razeek-ruled-as-fr-violation/ 

அதேபோன்று,  தேர்தலுக்கு முன்னதாக அரசாங்கத்தின் விவரணத்திற்கு  முரணான கருத்துக்களைக் கொண்டவர்களைப் பின்தொடர்ந்துச் செல்ல  OSA யும் பயன்படுத்தப்படலாம். உதாரணமாக , நாட்டின் பொருளாதார மீட்சி குறித்த அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களை விவாதிப்பதற்கோ அல்லது அதன் பொருளாதாரக் கொள்கையை விமர்சிப்பதற்கோ ஒருவர் சமூக ஊடகங்களுக்குச் சென்றால், நிகழ்நிலை பாதுகாப்பு ஆணையத்தால் கருதப்படும் “தவறான தகவல்களை” அவர் அல்லது அவள் பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்தச் சட்டம் உண்மையில் ஒரு பயங்கரமான விளைவை ஏற்படுத்தக்கூடும். சமூக ஊடகத்தைப் பயன்படுத்துபவர்கள் OSA சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படலாம் என்ற அச்சத்தில் 

உத்தியோகபூர்வ நிலைப்பாட்டிற்கு  முரணானதாகக் கருதப்படும் கருத்துக்களை பகிர்வதைப் பற்றி இருமுறை யோசிக்க வேண்டியிருக்கும்.  குறிப்பாக, அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் எதிர்க்கட்சி செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள், தேர்தலுக்கு முன்னதாக OSA இன் கீழ் வழக்குத் தொடர இலக்கு வைக்கப்படலாம் . மேலும் பிரச்சாரக் காலத்திலேயே, அவர்கள் ஒரு பயனுள்ள தேர்தல் பிரச்சாரத்தை நடத்தும் திறனை இது கடுமையாகத் தடுக்கலாம்.

எனவே, OSA, ICCPR மற்றும் PTA போன்ற சட்டங்களை தன்னிச்சையாகப்  பயன்படுத்துதல் மற்றும் சமூக ஊடக முடக்கம் போன்ற பிற நடவடிக்கைகளும் சேர்ந்து, நாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு இடையூறு விளைவிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *