Hashtag Generation

சுமந்திரன் தொடர்பான போலியான செய்தியை உதயன் பத்திரிகை வெளியிட்டதா?

ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்து புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்றத் தேர்தலும் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெற உள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இலக்கு வைத்து பல்வேறு வகையிலான கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தொடர்பில் raju.lathan என்கிற டிக்டாக் கணக்கில் பதிவொன்று இடப்பட்டிருந்ததை நாம் அவதானித்தோம்.

அந்த பதிவில் “போர்க்குற்ற விசாரணைகளில் மஹிந்தவை காப்பாற்றியதற்கு சுமந்திரனுக்கு 120 கோடி” என தலைப்பிடப்பட்ட செய்தியொன்று பகிரப்பட்டுள்ளது.

அந்த செய்தியில், “சர்வதேச போர்குற்ற விசாரணைகளின் சாட்சியங்களை செல்லாதுபடி ஆக்கி மஹிந்த தரப்பினரை காப்பாற்றியதற்காக 120 கோடி ரூபாய்கள் சுமந்திரனுக்கு இரகசியமாக கையளிக்கப்பட்டது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

உதயன் பத்திரிகையின் முதற் பக்கத்தில் மேற்குறித்த செய்தி வெளியிடப்பட்டிருப்பதுபோல அப்பத்திரிகையின் படமும் பகிரப்பட்டுள்ளது.

இதனை Google reverse image search செய்து பார்த்தபோது Tamilarkalin Kural என்கிற Youtube செனலிலும் இச்செய்தி பகிரப்பட்டுள்ளதை நாம் அவதானித்தோம்.

ஸ்கிரின்ஷாட்கள் (Screenshots)

இதுபோன்ற செய்திகள் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில்  தாக்கம் செலுத்தும் என்பதால் இச்செய்தியின் உண்மைதன்மையை அறிய ஹேஷ்டேக் தலைமுறை தீர்மானித்தது. 

உதயன் பத்திரிகை ஆசிரியர் தங்கராஜா பிரபாகரனிடம் இதுபற்றி நாம் வினவியபோது, “இதுவொரு போலியான செய்தி. கடந்த பாராளுமன்ற தேர்தலின்போதும் இதே போலியான செய்தி பகிரப்பட்டிருந்தது.” என தெரிவித்தார்.

இதேவேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் இதுவொரு போலியான செய்தி என்பதை எமக்கு உறுதிப்படுத்தியதோடு, “உதயன் பத்திரிகை இதுபோன்ற செய்தியை வெளியிடவில்லை. டிஜிட்டலாக இதனை யாரோ தயாரித்து இருக்கிறார்கள்.” என தெரிவித்தார்.

உதயன் பத்தரிகையின் பக்க வடிவமைப்புக்கும் பகிரப்பட்டுள்ள செய்தியின் பக்க வடிவமைப்புக்கும் அதிகளவான வித்தியாசங்கள் இருப்பதை நாம் அவதானித்தோம். 

குறிப்பாக உதயன் பத்தரிகையின் பக்க வடிவமைப்புக்கு Sellipi எழுத்துருவே (Font) பயன்படுத்தபடுகிறது. ஆனால், சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ள செய்தி unicode எழுத்துருவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் வீடு சின்னத்தில் யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறித்து தேர்தல் காலத்தில் மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கிலேயே இந்த போலியான செய்தி சமூகவலைத்தளங்களில் பகிரப்படுகிறது.

முடிவுரை:  “போர்க்குற்ற விசாரணைகளில் மஹிந்தவை காப்பாற்றியதற்கு சுமந்திரனுக்கு 120 கோடி”  என தலைப்பிடப்பட்டு உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டதுபோல சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் செய்தி போலியானது என்கிற முடிவுக்கு வரலாம்.

ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *