இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க தீர்மானித்துள்ளதாக அக்கட்சி அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பல விதமான பதிவுகள் பகிரப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.
“சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிப்பதன் மூலமே சிங்கள மக்களை தோற்கடிக்க முடியும்” என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கூறியதாக தலைப்பிடப்பட்ட பத்திரிகை செய்தி ஒன்றை பலரும் பகிர்ந்து வருவதை ஹேஷ்டேக் தலைமுறை அவதானித்தது.
சிங்கள மக்களை தோற்கடிப்பதற்காக மற்றும் சிங்கள மக்களை பிளவுப்படுத்துவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது என்கிற அர்த்தத்தில் சிங்கள மொழி சமூக வலைத்தளங்களில் சுமந்திரனின் படத்துடன் கூடிய பதிவு அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இதுபோன்ற செய்திகள் தாக்கம் செலுத்தும் என்பதால், இச்செய்தியின் உண்மைதன்மையை அறிய ஹேஷ்டேக் தலைமுறை தீர்மானித்தது.
பேஸ்புக் பதிவுகளின் ஸ்கிரின்ஷாட் (Screenshot)
2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது இச்செய்தி பகிரப்பட்டதாக சுயாதீன உண்மை சரிபார்ப்பு நிறுவனம் ஒன்றும் மேற்குறித்த செய்தியை 2023ஆம் ஆண்டு உண்மை சரிபார்ப்பு (Fact Check) செய்திருந்தது.
2019ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி மட்டக்களப்பில் எம்.ஏ.சுமந்திரன் தமிழ் மொழியில் ஆற்றிய உரையை அடிப்படையாக வைத்தே மேற்குறித்த செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதன்போது, “தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களுக்காகக் குரல் கொடுக்கக்கூடிய சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களியுங்கள்.” என சுமந்திரன் குறித்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.
“சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிப்பதன் மூலமே சிங்கள மக்களை தோற்கடிக்க முடியும் – சுமந்திரன்” என தலைப்பிடப்பட்டு வெளியிடப்பட்டிருந்த செய்திக்கு எதிராக எம்.ஏ.சுமந்திரன் சட்டநடவடிக்கைகள் எடுத்துள்ளதாகக் குறிப்பிடும் செய்தி ஒன்றையும் நாம் அவதானித்தோம்.
மேற்குறித்த செய்தி மீண்டும் பகிரப்பட்டு வருவது தொடர்பிலும், இச்செய்திக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்டநடவடிக்கைகள் தொடர்பிலும் அறிந்துக்கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் செயலாளர் பிரசில்லா பாலசந்திரனை தொடர்புகொண்டோம்.
“சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிப்பதன் மூலமே சிங்கள மக்களை தோற்கடிக்க முடியும் – சுமந்திரன்” என மீண்டும் பகிரப்படும் செய்தி போலியான செய்தி என்பதை எமக்கு உறுதிப்படுத்தினார்.
மேலும், “இச்செய்தியை வெளியிட்ட 3 பத்திரிகை நிறுவனங்களுக்கு எதிராக 3 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு வழக்குக்கான தீர்ப்பும் இம்மாதம் 10ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளது.” என்றும் பிரசில்லா பாலசந்திரன் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்களை தவறாக வழிநடத்துவதற்காக மேற்குறித்த போலியான செய்தி தற்போது மீண்டும் பகிரப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
முடிவுரை: “சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிப்பதன் மூலமே சிங்கள மக்களை தோற்கடிக்க முடியும்.” என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறவில்லை. இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் செய்தி மக்களை தவறாக வழிநடத்துவதற்காகப் பகிரப்படுகிறது என்கிற முடிவுக்கு வரலாம்.
ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.