Hashtag Generation

ஜனாதிபதியின் அறிவிப்பு என பலரும் பகிரும் தகவல் போலியானது

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வடக்கு மாகாணத்திலும் பாரிய வெற்றியை உறுதி செய்திருந்தது.  

இதனைத் தொடர்ந்து தேசிய மக்கள் சக்தி குறித்தும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொடர்பிலும் பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதை நாம் அவதானித்தோம். 

அந்தவகையில், யுத்தத்தில் உயிரிழந்தவர்களை அமைதியான முறையில் ஒன்றுகூடி நினைவுகூர முடியும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளதாகத் தெரிவித்து, அவரது கையெழுத்துடனான அறிவிப்பு ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதை நாம் அவதானித்தோம். 

ஸ்கிரின்ஷாட் (Screenshot)

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையெழுத்துடன் வெளியான அந்த அறிவிப்பில், “தமிழ் மக்களுக்கு வணக்கம். நீண்ட நெடிய காலமாக நமது சுதந்திரத்திற்காகப் போராடி, பல்லாயிரக் கணக்கான உயிர்களை இழந்து, வாழ்ந்து வரும் தமிழ் மக்களே.. போரின் போது உயிர் நீத்த உங்களின் பிள்ளைகள், பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்களை இம்மாதத்தில் பல இன்னல்களுக்கு மத்தியிலும் வணங்கி வந்திருக்கிறீர்கள். 

இவ்வாண்டு முதல் இந்த நவம்பர் மாதத்தில் உங்களுக்காக உயிர்க்கொடைத் தியாகம் செய்தவர்களை நீங்கள் எந்த விதமான தடைகளும் இன்றி. நிம்மதியாகவும் மிகவும் பாதுகாப்பாகவும் நினைவுகூர முடியும் என்பதுடன், இறந்தவர்களை இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் ஆலயங்கள், பாடசாலைகள், அலுவலங்கள் மற்றும் பொது இடங்களில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டகளின்றி மிகவும் அமைதியான முறையில் யாருடைய தொந்தரவுகளும் இன்றி, நினைவேந்தல் செய்வதற்கான ஒரு அமைதியான சூழலை இன்று அடைந்துள்ளோம். அப்படி ஒரு அமைதியான சூழலை இயற்கை தான் உருவாக்கித் தந்துள்ளது என்று நினைக்கின்றேன்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் சமூக வலைத்தள பயனாளர்கள் பலரும் இச்செய்தியை உண்மையென நம்பி பகிர்ந்து வருவதால் இதன் உண்மைதன்மையை அறிய ஹேஷ்டேக் தலைமுறை தீர்மானித்தது.

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவது தொடர்பில் ஜனாதிபதி எந்தவிதமான அறிவிப்புகளையும் வெளியிடவில்லை எனவும், சமூக வலைத்தளங்களில் இதுபற்றி வெளியாகி வரும் செய்தி போலியானது எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு எமக்கு உறுதி செய்தது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் இதுபற்றி எந்தவிதமான செய்திகளும் வெளியாகவில்லை என்பதையும் நாம் உறுதி செய்துகொண்டோம்.

முடிவுரை:  யுத்தத்தில் உயிரிழந்தவர்களை அமைதியான முறையில் ஒன்றுகூடி நினைவுகூர  முடியும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளதாக ஜனாதிபதியின் கையெழுத்துடன் வெளியாகியுள்ள அறிவிப்பு மக்களை தவறாக வழிநடத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள போலியான அறிவிப்பு என்கிற முடிவுக்கு வரலாம். 

ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே