Hashtag Generation

ஜல்லிக்கட்டு சர்வதேச விளையாட்டாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா?

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் தலைமையில், திருகோணமலை – சம்பூரில் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த ஜனவரி 06ஆம் திகதி நடைபெற்றது.

இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகப் பக்கத்தில் “ஜல்லிக்கட்டை சர்வதேச விளையாட்டாக அங்கீகாரம் பெற்றுக்கொடுத்த ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம்” என குறிப்பிட்டு வீடியோ ஒன்றை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பதிவேற்றியுள்ளார்.  இந்த பதிவு கடந்த காலங்களில் பரவலாகப் பகிரப்பட்டிருந்தது.

முகப்புத்தக பதிவின் (Facebook Posts) ஸ்கிரீன் ஷாட் (Screenshots)

இதேவேளை, ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் என்கிற பெயரில் இயங்கும் முகப்புத்தக பக்கத்திலும், ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம், ஜல்லிக்கட்டு போட்டிக்கு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்துள்ளதாக தெரிவித்து கிழக்கு மாகாண ஆளுநரின் முகப்புத்தக பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருந்த அதே வீடியோ பதிவேற்றப்பட்டிருந்தது.

முகப்புத்தக பதிவின் (Facebook Posts) ஸ்கிரீன் ஷாட் (Screenshots)

எனவே, ஜல்லிக்கட்டுக்கு சர்வதேச விளையாட்டுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளதா? என்பது தொடர்பில் ஹேஷ்டேக் தலைமுறை  ஆராய்ந்தது. 

இது தொடர்பில், முதலில் நாங்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை தொடர்புக்கொள்ள முயற்சித்தபோதிலும் அது பலனளிக்கவில்லை.

எவ்வாறாயினும், இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஜல்லிக்கட்டு பேரவை, ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் மற்றும் ஜல்லிக்கட்டு செயற்பாட்டாளர்களை தொடர்புகொண்டு இதுபற்றி நாம் வினவியிருந்தோம்.

மட்டக்களப்பு  – சம்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது கிழக்கு மாகாண ஆளுநர் கொடியை அசைத்து போட்டியை ஆரம்பித்து வைத்திருந்தார். 

இந்தியா – தமிழ் நாட்டைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்தின் தமிழ்நாடு மாநில தலைவர் டி.ஒண்டிராஜே, சம்பூர் பத்திரகாளி அம்மன் கோவில் மாட்டை அவிழ்த்து போட்டியை தொடங்கி வைத்திருந்தார். 

அதனால், ஜல்லிக்கட்டுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்ததாக கூறப்படுவது தொடர்பில் ஒண்டிராஜையும் ஹேஷ்டேக் தலைமுறை தொடர்புகொண்டது.

“சம்பூரில் நடைபெற்று முடிந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 300 – 325 காளைகள் பங்குபற்றியிருந்தன. இலங்கையில் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டி சர்வதேச அளவிலும் பேசப்பட்டிருந்தன. கிழக்கு மாகாண ஆளுநர் ஜல்லிக்கட்டு போட்டியை சர்வதேச விளையாட்டாக்குவதற்கான பணிகளை செய்து வருகிறார்.” என்றார்.

எவ்வாறாயினும், ஜல்லிக்கட்டுக்கு சர்வதேச அங்கீகாரம் தற்போது வரையில் கிடைக்கவில்லை என்பதையும் ஒண்டிராஜ் உறுதிப்படுத்தினார். 

இந்தியா – தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் மாநிலத் தலைவரான   பி.இராசசேகரனை தொடர்புகொண்டபோது, “ஜல்லிக்கட்டுக்கு சர்வதேச விளையாட்டுக்கான அங்கீகாரத்தை வழங்க பீட்டா (People for the Ethical Treatment of Animals)  ஒருபோதும் அனுமதிக்காது. 2018ஆம் ஆண்டு மலேசியாவில் ஜல்லிக்கட்டை நடத்த நாங்கள் முயற்சித்தோம். ஆனால், பீட்டா அமைப்பு நீதிமன்றத்தின் ஊடாக எமக்கு தடையை ஏற்படுத்தியிருந்தது. 

இவ்வாறான பின்னணியிலேயே கனடாவிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனினும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் தலைமையில் உள்ளூர் மாடுகளைக் கொண்டு இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன.

இந்தியாவின் பல மாநிலங்களில் வேறுவேறு பெயர்களில் ஜல்லிக்கட்டை ஒத்த பல போட்டிகள் நடைபெற்று வருகிறபோதிலும், தமிழ் நாட்டில் மாத்திரமே ஜல்லிக்கட்டு பிரபல்யமாக இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு சர்வதேச விளையாட்டுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.” எனவும் உறுதி செய்தார். 

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு செயற்பாட்டாளரான எம்.தேவராஜ் என்பவரையும் தொடர்புகொண்டு இதுபற்றி நாம் வினவியிருந்தோம். 

ஒவ்வொரு நாடுகளுக்கும் கலாசார ரீதியிலான விளையாட்டுக்கள் இருக்கும். அதன்படி தமிழர்களின் கலாசார விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்தியாவின் தமிழ்நாட்டில் விளையாடப்படுகிறது.  

இந்தியாவின் தமிழ்நாட்டை தவிர்த்து வேறெந்த நாடுகளிலும் ஜல்லிக்கட்டு பிரபல்யமானதாக இல்லை. எனவே, ஜல்லிக்கட்டுக்கு சர்வதேச விளையாட்டுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கூறுவது தவறு. ” எனக் கூறினார்.

முடிவுரை: ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு, ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் சர்வதேச விளையாட்டுக்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் முகப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது தவறான செய்தி என்பதோடு, ஜல்லிக்கட்டுக்கு சர்வதேச விளையாட்டு போட்டிக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்கிற முடிவுக்கு வரலாம்.

ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.