“தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவுகூருவதற்கு தடையில்லை. போஸ்டர், இலச்சினை, படங்களை காட்சிப்படுத்த முடியும்” என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால கூறியதாக தலைப்பிடப்பட்ட செய்தி ஒன்றை Aruna பத்திரிகை முதற்பக்க செய்தியாக வெளியிட்டுள்ளது.
ஸ்கிரின்ஷாட் (Screenshot)
வடக்குக், கிழக்கு மாகாணங்களில் மாவீரர் நாளையொட்டி நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், இதுபோன்ற செய்திகளால் மக்கள் தவறாக வழிநடத்தப்படலாம் என்பதால் இதன் உண்மைதன்மையை அறிய ஹேஷ்டேக் தலைமுறை தீர்மானித்தது.
அண்மையில் கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மாவீரர் நாள் தொடர்பில் பேசியிருந்தார் என்பதை நாம் உறுதி செய்துகொண்டோம்.
மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடர்பில் அங்கு ஊடகவியலாளரின் கேள்விக்கு இவ்வாறு அமைச்சர் பதிலளித்திருந்தார்.
“சட்டத்தின்படி உயிரிழந்த உறவினர்களை நினைவுக்கூர முடியும். ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினையின் கீழ் அல்லது அவர்களுடைய சீருடைகள் அல்லது படங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாளை அனுஷ்டிக்க முடியாது. எமது நாட்டின் சட்டங்களின்படி, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடைச் செய்யப்பட்ட அமைப்பாகும்.
வடக்கு, தெற்கு, கிழக்கு அல்லது மலையகம் என எங்குமே தங்களது பிள்ளைகள் உயிரிழந்திருந்தால் அவர்களை நினைவுக்கூருவதற்கான உரிமை உள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பு. அவர்களுடைய இலச்சினை, சீருடைகள், பேனர்களைப் பயன்படுத்தி நினைவுக்கூருவதற்கு இடமில்லை.
உயிரிழந்த உறவினர்களை நினைவுக்கூருவதற்கு நாம் எந்தவிதமான தடைகளையும் ஏற்படுத்தப்போவதில்லை. ஆனால், வடக்கு மக்கள் உயிரிழந்த உறவினர்களை நினைவுக்கூரும்போது அது தொடர்பில் வேறு அர்த்தங்கள் கற்பிக்கப்படுகின்றன.” என்று கூறியிருந்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் ஊடகவியலாளர் சந்திப்பின் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது
மாவீரர் நாள் நிகழ்வுகள் குறித்து ஊடகங்களுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால கூறிய கருத்துகள் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.
அண்மையில் கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்தை மாற்றி எடிட் செய்யப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கல்கமுவ பிரதேசத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், “உயிரிழந்த தங்களது உறவினர்களை நினைவுக்கூருவதற்கு சட்டத்தின்படி எவருக்கும் முடியும். ஆனால், மாவீரர் நாளை அனுஷ்டிக்க முடியாது என்பதோடு, தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை அல்லது சீருடை அல்லது அவர்களின் படங்களை பயன்படுத்த முடியாது.
மேலும், இலங்கையின் சட்டங்களின்படி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடைச் செய்யப்பட்ட அமைப்பாகும். அதுபோல, வடக்கு, தெற்கு, கிழக்கு அல்லது மலையகத்திலும் உயிரிழந்த தங்களது பிள்ளைகளை நினைவுக்கூருவதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது.
ஆனால், தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பை மீள நினைவுகூர்ந்து அவர்களின் ஆதிக்கத்தை ஸ்தாபிப்பதாக சமூகத்துக்குக் காண்பிக்க இடமளிக்கப்போவதில்லை.” என்றே அமைச்சர் கூறியிருந்தார் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறியதாக பகிரப்படும் திரிபுப்படுத்தப்பட்ட, போலியான மற்றும் தவறாக வழிநடத்தக்கூடிய செய்திகளை திருத்த வேண்டுமெனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
ஸ்கிரின்ஷாட் (Screenshot)
முடிவுரை: “தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவுக்கூருவதற்கு தடையில்லை. போஸ்டர், இலச்சினை, படங்களை காட்சிப்படுத்த முடியும்” என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால கூறியதாக Aruna பத்திரிகையில் வெளியாகியிருந்த செய்தி திரிபுப்படுத்தப்பட்ட செய்தி என்கிற முடிவுக்கு வரலாம்.
ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.