Hashtag Generation

நாமல் ராஜபக்ஷ தொடர்பில் இந்திய ஊடகமொன்று போலியான செய்தியை வெளியிட்டுள்ளது

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இலக்கு வைத்து ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்கள் ஊடாக போலியான அல்லது திரிபுப்படுத்தப்பட்ட செய்திகள் அதிகளவில் பகிரப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை இலக்கு வைத்து தமிழகத்தின் பிரபல செய்தி தொலைக்காட்சியான SathiyamTV  (சத்தியம் டிவி) தனது YouTube செனலில் போலியான செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருப்பதை  ஹேஷ்டேக் தலைமுறை அவதானித்துள்ளது.

ஆகஸ்ட் 8ஆம் திகதி Sathiyam News என்கிற YouTube செனலில் 100 பெண்களை வன்கொடுமை செய்த கொடூரன் அதிபர் தேர்தலில் போட்டியா..! இலங்கை தமிழர்கள் கடும் எதிர்ப்பு..!” என்கிற தலைப்பிடப்பட்ட நாமல் ராஜபக்ஷவின் படத்துடன்கூடிய 6 நிமிட செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அச்செய்தியில், “ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக கிரிஷ் நிதி நிறுவனத்திடம் 70 கோடி ரூபாய் நிதி மோசடி செய்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது. இதனைத் தவிர 108 பெண்களை பாலியல் வல்லுறவு செய்துள்ளார். இதற்காக 8 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்தார். அரச வேலை வாய்ப்புகளை வாங்கித்தருவதாகக் கூறி 108 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த வழக்கில் ஜாமினில் (பிணையில் ) விடுதலையான நாமல் ராஜபக்ஷ தன்மீதான குற்றச்சாட்டுக்களை திசைத்திருப்ப இந்திய எதிர்ப்பை கையில் எடுத்தார்…” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்தி தொடர்பில்  keyword search செய்து பார்த்தபோது இச்செய்தி பேஸ்புக்கிலும் பகிரப்பட்டிருப்பதை நாம் அவதானித்தோம்.

YouTubeஇல் வெளியிடப்பட்ட செய்தியின் ஸ்கிரின் ஷாட் (Screenshot)

பேஸ்புக் பதிவுகளின் ஸ்கிரின் ஷாட் (Screenshots)

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மீது பாரதூரமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் மேற்குறித்த செய்தி மக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்தும் என்பதால் இச்செய்தியின் உண்மைதன்மையை அறிய ஹேஷ்டேக் தலைமுறை தீர்மானித்தது.

இதன்படி இச்செய்தியின் உண்மைதன்மையை அறிய இது பற்றி பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பிரதிப் பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகரவிடம் நாம் வினவியபோது, “தனக்கு தெரிந்தவரையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு அவ்வாறானக் குற்றச்சாட்டுக்களோ அல்லது வழக்குகளோ எதுவும் இல்லை.” என்றார்.

இதுபற்றி மேலும் ஆராய்வதற்காக, கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நீதிமன்ற செய்திகளை அறிக்கையிட்டு வரும் ஊடகவியலாளர் எம்.எப்.எம்.பஸீரை தொடர்புகொண்டு, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்பட்டுள்ளனவா? என வினவினோம்.

“பாராளுமன்ற நாமல் ராஜபக்ஷவுக்கு நிதி முறைகேடுகளுடன் தொடர்புடைய வழக்குகள் உள்ளன. ஆனால், பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான பொலிஸ் நிலைய முறைப்பாடுகளோ அல்லது நீதிமன்ற வழக்குகளோ பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் இல்லை. பொலிஸ் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அறிக்கையிட்டு வரும் செய்தியாளராக என்னால் இதனை உறுதியாகக் கூற முடியும்.” என்றார். 

முடிவுரை:  “100 பெண்களை வன்கொடுமை செய்த கொடூரன் அதிபர் தேர்தலில் போட்டியா..! இலங்கை தமிழர்கள் கடும் எதிர்ப்பு..!”  என தலைப்பிடப்பட்டு இந்திய செய்தி தொலைக்காட்சியான சத்தியம் தொலைக்காட்சியின் YouTube செனலில் வெளியிடப்பட்ட செய்தி போலியான செய்தி என்கிற முடிவுக்கு வரலாம்.

ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.