Hashtag Generation

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அரியநேந்திரனை விசாரித்ததா?

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளராக போட்டியிட்டிருந்த அரியநேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் விசாரணைக்காக பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக (CTID) Tamil Guardian செய்தி வெளியிட்டுள்ளது. 

ஸ்கிரின்ஷாட் (Screenshot)

“அரியநேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்களை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் விசாரணைக்காக அழைத்துள்ளனர்” என்று மக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினரான ராஜ்குமார் ரஜீவ்காந்த் கூறியுள்ளதாக அவரது உரையை சுட்டிக்காட்டியே மேற்குறித்த செய்தியை  Tamil Guardian வெளியிட்டுள்ளது.

இச்செய்தியின் உண்மைதன்மையை ஆராய ஹேஷ்டேக் தலைமுறை தீர்மானித்தது. ராஜ்குமார் ரஜீவ்காந்தின் உரையை நாம் ஆராய்ந்தபோது,

“சிலருக்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிடமிருந்து கடிதங்கள் அனுப்பப்பட்டுகொண்டிருக்கின்றன. நண்பர் ஒருவர் இந்தமுறை தமிழ் பொதுவேட்பாளராக இருந்த அரியநேத்திரனுக்கு சமூகவலைத்தளத்தில் பணம் செலுத்தி விளம்பரங்கள் செய்துகொண்டிருந்திருக்கிறார். அவ்வாறு பணம் செலுத்தி விளம்பரம் செய்துகொண்டிருந்தது ஒரு தீவிரவாதச் குற்றமென வரையறை செய்வதுபோல பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் அவருக்கு கடிதம் அனுப்பி விசாரணைக்கு அழைத்துள்ளனர். 

இந்த விசாரணை தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் இடம்பெற்றுள்ளது. சர்வதேசத்திடமிருந்து எப்படி பணம் வந்தது? எங்கிருந்து பணம் வந்தது? என்கிற தேவையற்ற கேள்விகள் எல்லாம் கேட்கப்பட்டுள்ளது…”  என்றே ராஜ்குமார் ரஜீவ்காந்த தனது உரையில் கூறியிருக்கிறார்.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் அரியநேந்தரனை விசாரணைக்காக அழைத்ததாக ரஜீவ்காந்த தனது உரையில் குறிப்பிடவில்லை.

ரஜீவ்காந்தை நாம் தொடர்புகொண்டு இதுபற்றி வினவியபோதும், “அரியநேந்திரனை விசாரணைக்காக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் அழைத்ததாக நான் எனது உரையில் கூறவில்லை.” என எமக்கு உறுதிப்படுத்தினார்.

எவ்வாறாயினும் இதுபற்றி நாம் அரியநேந்திரனை தொடர்புகொண்டு வினவினோம், “இந்த செய்தியை நானும் படித்தேன். என்னை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைக்கவில்லை. எனக்காக பேஸ்புக்கில் பிரசாரம் செய்த இளைஞர் ஒருவரை விசாரணைக்கு அழைத்து விசாரித்திருக்கிறார்கள்.” என்று அரியநேந்திரன் எமக்கு தெரிவித்தார்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவவை தொடர்புகொண்டு இச்செய்தி பற்றி நாம் வினவியபோது, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு விசாரணைக்காக அரியநேந்திரன் அழைக்கப்பட்டிருந்தாரா? இல்லையா? என்பதை தன்னால் உறுதிப்படுத்த முடியாது என அவர் எமக்கு தெரிவித்தார். 

எவ்வாறாயினும், பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு அரியநேந்திரனை அழைத்து விசாரணைகளை மேற்கொண்டதாக எந்தவொரு செய்திகளும் கடந்த காலங்களில் வெளியாகவில்லை என்பதை நாம் உறுதி செய்துகொண்டோம்.

முடிவுரை:  கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளராக போட்டியிட்டிருந்த அரியநேந்திரன், பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதாக Tamil Guardian இல் வெளியான செய்தி திரிபுப்படுத்தப்பட்ட செய்தி என்கிற முடிவுக்கு வரலாம். 

ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.