Hashtag Generation

மஸ்கெலியாவில் இறந்தநிலையில் மீட்கப்பட்டது சிறுத்தைக் குட்டியல்ல; மீன்பிடிப் பூனை

 

மலையக குருவி என்கிற செய்தி இணையத்தளமொன்று மஸ்கெலியா சாமிமலை – ஸ்ரஸ்பி தோட்டத்தில் இறந்த நிலையில் சிறுத்தைக் குட்டியொன்று மீட்கப்பட்டுள்ளதாக 19.01.2024 அன்று  செய்தி ஒன்றை முதலில் வெளியிட்டிருந்தது. முழுமையான செய்தி 

குறித்த செய்தி தளத்தின் முகநூல் பதிவின் (Facebook Posts) ஸ்கிரீன் ஷாட் (Screenshots) கீழே வழங்கப்பட்டுள்ளது.

குறித்த செய்தியை தொடர்ந்து மஸ்கெலியா – சாமிமலையில் சிறுத்தைக் குட்டியொன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டதாகத் தெரிவித்து, விலங்கொன்றின் படமொன்று சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டது.

இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விலங்கு தொடர்பில் ஆராய்வதற்காக, வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் மஸ்கெலியா – நல்லத்தண்ணியில் உள்ள அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவரை நாங்கள்  தொடர்புகொண்டோம்.

“மீன்பிடிப் பூனைக் குட்டியொன்றே மஸ்கெலியா – சாமிமலை  பிரதேசத்தில் இறந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது. எனினும், ஊடகங்கள் சிறுத்தைக் குட்டியொன்று மீட்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தன. அது தவறு.” என குறித்த உயர் அதிகாரி எங்களுக்கு தெளிவுபடுத்தினார்.

இதேவேளை, சிவனொளிபாதமலை இயற்கை பாதுகாப்பு வலயத்தின் வனவிலங்கு தள காவலரான டி.பி.சியாசிங்கவிடமும் இது பற்றி நாங்கள் வினவினோம். “இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள விலங்கு சிறுத்தைக் குட்டியில்லை. இது மீன்பிடிப் பூனை குட்டி.” என்று அதன் படத்தைப் பார்த்து எமக்கு அவரும் உறுதிப்படுத்தினார்.

சிறுத்தையைவிட அளவில் சிறியதாக இருக்கும் மீன்பிடிப் பூனையை கொடுப்புலி  எனவும் மக்கள் அழைக்கிறார்கள்.  Prionailurus viverrinus  என்கிற விஞ்ஞானப் பெயரைக் கொண்ட இந்த விலங்கு ஆறுகள், நீரோடைகள், சதுப்பு நிலங்களை அண்டியப் பகுதிகளில் வாழக்கூடியவை. 

வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகளைவிட அளவில் பெரியதாக இருக்கும் மீன்பிடிப் பூனை, குட்டையான கால்களைக் கொண்டிருப்பதோடு, அதன் உடல் அளவுக்கு கறுப்பு நிறக் கோடுகளையும் கொண்டிருக்கும்.

மீன்பிடிப் பூனையின் படங்கள் சில கீழே தரப்பட்டுள்ளன. படங்கள் – srilankansafari

இலங்கையில் வாழும் Panthera pardus kotiya என்கிற விஞ்ஞானப் பெயரைக் கொண்ட சிறுத்தை இனமானது, இந்நாட்டுக்கே உரிய தனித்துவமான விலங்காகக் காணப்படுகிறது. இந்தத் தனித்துவமான சிறுத்தை இனம் மஞ்சள் நிறத்திலான தோல்களைக் கொண்ட இடைவெளியுடன்கூடிய கறுப்பு நிற வளையங்களை உடல்முழுவதிலும் கொண்டுள்ளது.

இலங்கை சிறுத்தைகளின் படங்கள் சில கீழே தரப்பட்டுள்ளன. படங்கள் – srilankansafari 

முடிவுரை: மஸ்கெலியா சாமிமலை – ஸ்ரஸ்பி தோட்டத்தில் இறந்த நிலையில் சிறுத்தைக் குட்டியொன்று மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தாலும், அங்கு மீட்கப்பட்டது மீன்பிடிப் பூனையே. 


ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.