மூளை பக்கவாதத்தை ஏற்படுத்தக்கூடிய 7 பழக்கங்களை உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கும் படமொன்று தமிழ் வட்ஸ்அப் (WhatsApp) குழுக்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருவது குறித்து ஹேஷ்டேக் தலைமுறை அவதானம் செலுத்தியது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் சின்னத்துடன் (Logo) இந்த படம் பகிரப்பட்டு வருகிறது.
காலை நேர உணவை தவிர்த்தல், தாமதமாக உறங்குதல், அதிகளவான இனிப்புகளை உட்கொள்ளல், காலையில் அதிக நேரம் தூங்குவது, தொலைக்காட்சி/ கணினி பார்த்துக்கொண்டே உணவு உண்ணுதல், உறங்கும் போது தொப்பி, காலுறை (சாக்ஸ்) அணிவது மற்றும் சிறுநீரை கட்டுப்படுத்தி (அடக்கி) வைத்தல் ஆகிய பழக்கங்களால் மூளை பக்கவாதம் (Brain Stroke) ஏற்படுமென உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது என குறிப்பிடும் படமொன்றே தமிழ் வட்ஸ்அப் குழுக்களில் பகிரப்படுகிறது.
பகிரப்பட்ட வட்ஸ்அப் குழுவின் ஸ்கிரின் ஷாட் (Screen shot)
தமிழ் வட்ஸ்அப் குழுவில் பகிரப்பட்டப் படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் (Reverse Image Search) செய்தபோது, நீண்ட காலமாகவே மேற்குறித்த படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதும், பல்வேறு நாடுகளை சேர்ந்த பல சுயாதீன உண்மை சரிபார்ப்பு அமைப்புகள் (fact-checking organisations) மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் உண்மை சரிபார்ப்புகளை செய்திருப்பதையும் அவதானித்தோம்.
இதற்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட படங்கள் மற்றும் ஸ்கிரீன் ஷாட்கள் (Screen shots)
உலக சுகாதார ஸ்தாபனம் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடவில்லை எனவும், படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பழக்கங்களால் நேரடியாக மூளை பக்கவாதம் ஏற்படாதெனவும் இதற்கு முன்னர் பல தடவைகள் உண்மை சரிபார்ப்பு செய்யப்பட்டுள்ளன.
மேலும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஆராய்ந்ததில் இவ்வாறான எந்தவொரு அறிவிப்புகளையும் WHO வெளியிடவில்லை என்பதையும் நாம் உறுதி செய்துகொண்டோம்.
படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பழக்கங்களால் நேரடியாக மூளை பக்கவாதம் ஏற்படாது என்றாலும், மேற்குறிப்பிடப்பட்டுள்ள 7 பழக்கங்களையும் அதிகளவில் கொண்டிருந்தால் அதனால் மோசமான உடல் நிலை பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் உண்மை சரிபார்ப்புகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முடிவுரை: மூளைக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய 7 பழக்கங்களை உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) வெளியிட்டுள்ளதாக வட்ஸ்அப் குழுக்களில் பகிரப்படும் தகவல் போலியானது என்கிற முடிவுக்கு வரலாம்.
ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.