தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க பெப்ரவரி மாதம் ஆரம்பத்தில் மேற்கொண்டிருந்த இந்திய விஜயம் பற்றி கடந்த காலங்களில் அதிகளவில் பேசப்பட்டிருந்ததோடு, அநுரவின் இந்திய விஜயத்தையொட்டிய பல போலியான மற்றும் திரிபுப்படுத்தப்பட்ட செய்திகளும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டிருந்தன.
இவ்வாறான நிலையில், “தமிழருக்கு எதிரான போருக்கு ஜே.வி.பி ஆதரவு வழங்கியது – ஒப்புக்கொள்கிறார் அனுரகுமார திஸாநாயக்க” என்கிற தலையங்கத்துடன் கூடிய தினக்குரல் பத்திரிகையின் முதற்பக்க செய்தியையும் ஜே.வி.பியின் ஊடகப் பிரிவு “திரிபுப்படுத்தப்பட்ட செய்தி” என குறிப்பிட்டு மறுத்துள்ளது.
21.02.2024 அன்று வெளியான தினக்குரல் பத்திரிகையின் முதற்பக்கத்தில் இந்த செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அந்த செய்தியின் ஸ்கிரின் ஷாட் (SCREEN SHOT)
அநுரகுமார திசாநாயக்கவின் உத்தியோகபூர்வ தமிழ் மொழியிலான பேஸ்புக் பக்கத்தில் மேற்குறித்த செய்தி திரிபுப்படுத்தப்பட்ட செய்தி என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பேஸ்புக் பக்கத்தின் ஸ்கிரின் ஷாட் (SCREEN SHOT)
தினக்குரல் பத்திரிகையும் மேற்குறித்த செய்தி தொடர்பில் மறுப்பு செய்தி ஒன்றையும் மறுநாள் அதாவது 22.02.2024 அன்று அப்பத்திரிகையின் இரண்டாவது பக்கத்தில் பிரசுரித்திருந்தது.
அதன் ஸ்கிரின் ஷாட் (SCREEN SHOT)
இது தொடர்பில் ஹேஷ்டேக் தலைமுறை ஆராய்ந்தது. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தை முடித்துகொண்டு, நாடு திரும்பிய கையோடு Newsfirstக்கு வழங்கிய நேர்காணலை அடிப்படையாக வைத்தே மேற்குறித்த செய்தி வெளியிடப்பட்டிருப்பதாக சம்பந்தப்பட்ட இணையத்தளம் மற்றும் பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் எமக்கு உறுதிப்படுத்தினார்கள்.
மேற்குறித்த நேர்காணலை அடிப்படையாக வைத்து ஒருவன், தமிழ்வின், newmannar ஆகிய செய்தி இணையத்தளங்களும் செய்திகளை வெளியிட்டிருந்தன.
எவ்வாறாயினும், இந்திய விஜயத்தை நிறைவு செய்தப் பின்னர் Newsfirst மற்றும் ஏனைய ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலின் எந்தவொரு பகுதியிலும், “தமிழ் மக்களுக்கு எதிரான போருக்கு அல்லது யுத்தத்துக்கு ஜே.வி.பி ஆதரவு வழங்கியதாக” அநுரகுமார திஸாநாயக்க கூறவில்லை என்பதை ஹேஷ்டேக் தலைமுறை உறுதி செய்தது.
முடிவுரை: “தமிழருக்கு எதிரான போருக்கு ஜே.வி.பி ஆதரவு வழங்கியதை அநுரகுமார திஸாநாயக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறி வெளியிடப்பட்டிருந்த செய்தி திரிபுப்படுத்தப்பட்ட செய்தி என ஜே.வி.பி ஊடகப் பிரிவு தெரிவித்திருப்பது சரியானதே என்கிற முடிவுக்கு வரலாம்.
ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.