சபாநாயகரின் கல்வி தகமை தொடர்பில் எழுந்த சர்ச்சைகளை தொடர்ந்து, பாராளுமன்றத்துக்கு இம்முறை தெரிவாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வி தகமைகள் தொடர்பில் அதிகளவில் தற்போது பேசப்படுகிறது.
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவை கால்நடை வைத்தியர் என தெரிவிக்கும் பேஸ்புக் பதிவுகளை நாம் அவதானித்தோம்.
பேஸ்புக் பதிவின் ஸ்கிரின்ஷாட் (Screenshot)
“நளிந்த ஜயதிஸ்ஸவை வைத்தியர் என அழைத்தாலும் அவர் ஒரு கால்நடை வைத்தியர்..” என மேற்குறித்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலின் உண்மைதன்மையை அறிய ஹேஷ்டேக் தலைமுறை தீர்மானித்தது.
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்ட வைத்தியரா என்பதை நாம் முதலில் ஆராய்ந்தோம்.
இலங்கை மருத்துவ சபையின் இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட வைத்தியர்கள் தொடர்பான தகவல்களை நாம் ஆராய்ந்தபோது, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவும் மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்டிருப்பதை நாம் உறுதி செய்துகொண்டோம்.
ஸ்கிரின்ஷாட் (Screenshot)
இலங்கை மருத்துவ சபையில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ 2016ஆம் ஆண்டு 21353 என்கிற இலக்கத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் அவர் மருத்துவ பட்டத்தை நிறைவு செய்துள்ளார்.
மேலும் இதுபற்றி நாம் தேசிய மக்கள் சக்தியின் ஊடகப்பேச்சாளர் உபுல் ரஞ்சனை தொடர்புகொண்டு வினவியோது, “அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டத்தை நிறைவு செய்துள்ள வைத்தியர் ஆவார். எனினும், அவரை கால்நடை வைத்தியர் என தெரிவித்து சமூகவலைத்தளங்களில் போலியான தகவல்கள் பகிரப்படுகிறது.” என உபுல் ரஞ்சன் எமக்கு தெரிவித்தார்.
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஒரு கால்நடை மருத்துவர் என சமூக வலைத்தள பதிவில் கூறப்பட்டாலும், இலங்கையில் கால்நடை மருத்துவ பீடத்தை பேராதனைப் பல்கலைக்கழகம் மாத்திரமே கொண்டிருக்கிறது. ஆனால், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
இதன்படி, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவை கால்நடை வைத்தியர் என தெரிவித்து பகிரப்பட்டுள்ள பேஸ்புக் பதிவு போலியானது என்பது தெளிவாகிறது.
முடிவுரை: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்ட வைத்தியர் ஆவார். இதன்படி, அவரை கால்நடை வைத்தியர் என குறிப்பிட்டு சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டிருந்த பதிவு போலியானது என்கிற முடிவுக்கு வரலாம்.
ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.