முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருமான அங்கஜன் ராமநாதன் அரச ஊழியர் ஒருவரை தாக்கியதாக குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருவதை நாம் அவதானித்தோம்.
“அரச ஊழியரை தாக்கிய அரசியல்வாதிக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்வரும் தேர்தலில் வாக்குகள் ஊடாக வெளியேற்றி யாழ்ப்பாண மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.” என குறிப்பிட்டு Sitheek A Hameed என்கிற பேஸ்புக் கணக்கிலும் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.
“Sri Lankan Tamil MP Ankajan slapping a government officer.”, “பா. உ என்றால் அரச உத்தியோகத்தரை கன்னத்தில் அறையலாமா?” என குறிப்பிட்டும் இந்த வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த வீடியோவை WhatsAppஇல் பலரும் பகிர்ந்து வருவதையும் நாம் அவதானித்தோம்.
ஸ்கிரின்ஷாட்கள் (Screenshot)
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அங்கஜன் ராமநாதன், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார்.
பாராளுமன்ற தேர்தலில் இதுபோன்ற வீடியோ தாக்கம் செலுத்தும் என்பதால் இதன் உண்மைதன்மையை அறிய ஹேஷ்டேக் தலைமுறை தீர்மானித்தது.
இந்த வீடியோ Google Reverse Image Search செய்து பார்த்தபோது இந்த சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிராவில் பதிவான சம்பவம் என்பதை எம்மால் உறுதி செய்ய முடிந்ததோடு, வீடியோவில் இருக்கும் நபர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் இல்லை என்பதையும் நாம் உறுதி செய்துகொண்டோம்.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விவசாயிகள் கட்சியான சுவாபிமானி ஷேத்காரி சங்கதானா என்கிற கட்சியின் இளைஞர் பிரிவு தலைவரான Mayur Borde என்கிற நபர் விவசாயிகளை துன்புறுத்தியதற்காக அம்மாநிலத்தில் உள்ள வங்கியின் முகாமையாளரை தாக்கும் வீடியோவே இலங்கையில் பகிரப்படுகிறது என்பதையும் நாம் உறுதி செய்துகொண்டோம்.
இச்சம்பவம் குறித்து indianexpressஇல் வெளியாகியிருந்த செய்தியை இங்கே காணலாம்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனை நாம் தொடர்புகொண்டு வினவியபோது, “பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் எனக்கு சேறு பூசும் வகையில் இந்த வீடியோவை சிலர் பரப்பி வருகிறார்கள். மகாராஷ்டிராவில் நடந்த சம்பவத்தை இலங்கையில் நடந்ததாகவும் அந்த வீடியோவில் இருக்கும் நபர் நான் என்றும் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.” என தெரிவித்தார்.
முடிவுரை: முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் அரச ஊழியரை தாக்கியதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோ போலியானது.
இந்தியாவின் மகாராஸ்டிரா மாநிலத்தில் பதிவான சம்பவத்தின் வீடியோவே மக்களை தவறாக வழிநடத்துவதற்காகப் பகிரப்படுகிறது என்கிற முடிவுக்கு வரலாம்.
ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.