Hashtag Generation

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவராக ரணில் தெரிவு செய்யப்பட்டாரா?

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டிருந்த நிலையில் அவரால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. ரணில் விக்கிரமசிங்கவின் தோல்வியை தொடர்ந்து அவர் பற்றிய பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தன.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆசிய அபிவிருத்தி வங்கியின் (Asian development bank) தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் சமூக வலைத்தள பதிவுகளை நாம் அவதானித்தோம். 

இவ்வாறான பதிவுகளில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் பதவியை ஏற்பதற்காக அடுத்த வருடம் ரணில் புறப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பதிவுகளின் ஸ்கிரின்ஷாட்கள் (Screenshots) 

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டாரா? என்பதை ஆராய ஹேஷ்டேக் தலைமுறை தீர்மானித்தது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை நாம் முதலில் ஆராய்ந்தோம். அதில் புதிய தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டமைக்கான எந்தவொரு தகவல்களும் இல்லை. 

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் சபையே வங்கியின் தலைவரை தெரிவு செய்வதோடு, அது இரண்டு கட்டங்களாக நடைபெறும் என ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2024ஆம் ஆண்டுக்கான தலைவரை தெரிவு செய்வதற்கான முன்மொழிவுகளை வழங்க கடந்த செப்டெம்பர் 24ஆம் திகதியிலிருந்து ஒக்டோபர் 23ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதோடு, பெயர் முன்மொழிவுகளை வழங்க ஆளுநர்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு முறை (Electronic voting system) மூலம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஒக்டோபர் 28ஆம் திகதி முதல் நவம்பர் 27ஆம் திகதி வரையில் வாக்களிக்கலாம். தேர்தல் முடிவுகள் நவம்பர் 28ஆம் திகதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தற்போதைய தலைவராக Fabio Panetta இருப்பதோடு, உறுப்பினர் நாடு என்றவகையில் இலங்கையின் ஆளுநராக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவே செயற்படுகிறார். மாற்று ஆளுநராக மஹிந்த சிறிவர்தன செயற்படுகிறார்.

இவ்வாறான நிலையில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பகிரப்படும் செய்தியின் உண்மைதன்மையை மேலும் அறிய, ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான சிரேஷ்ட தகவல் தொடர்பு அதிகாரியான ரோஷனி யோகராஜாவை தொடர்புகொண்டோம்.

“ஆசிய அபிவிருத்தி வங்கி பதவிகளுக்காக நபர்களை பரிந்துரைக்காது. தலைவர் பதவிக்கு உறுப்பினர்களில் இருந்து ஆளுநர்கள் பெயர்களை பரிந்துரைப்பார்கள். அதன் பின்னர் தேர்தல் நடைபெறும்.” ரோஷனி யோகராஜா எமக்கு தெரிவித்தார்.

“இதுவொரு போலியான செய்தி” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் ரவி கருணாநாயக்க எமக்கு மேலும் உறுதிபடுத்தினார். 

முடிவுரை: முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆசிய வங்கியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக  சமூக வலைத்தளங்களில்  பதிவுகள் பகிரப்பட்டிருந்தாலும், தேர்தல்  ஊடாகவே ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தெரிவு செய்யப்படுகிறார்.
எனவே, ரணில் விக்கிரமசிங்க ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்தி போலியான செய்தி என்கிற முடிவுக்கு வரலாம். 

ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.