“இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிரடியாகக் குறைப்பு” என தலைப்பிட்ட செய்தி ஒன்று sketch.click7 என்கிற TikTok கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த பதிவில் “அதிரடி விலை குறைவு 132ஆக” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கிரின்ஷாட் (Screenshot)
நாட்டில் புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுபோன்ற செய்திகளால் மக்கள் தவறாக வழிநடத்தப்படலாம் என்பதால் இச்செய்தியின் உண்மைத் தன்மையை ஆராய ஹேஷ்டேக் தலைமுறை தீர்மானித்தது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊடக அறிக்கையை Capital செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டிருப்பதுபோல குறிப்பிட்டு மேற்குறிப்பிட்ட செய்தி பகிரப்பட்டுள்ளதை நாம் அவதானித்தோம்.
எவ்வாறாயினும், எரிபொருள் விலை 132 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதாக Capital செய்தி நிறுவனம் அண்மையில் செய்திகள் எதனையும் வெளியிடவில்லை என்பதை நாம் உறுதி செய்துகொண்டோம்.
இச்செய்தி பற்றி நாம் வினவியபோது, “ஒவ்வொரு மாத இறுதியிலும் எரிபொருளின் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. எரிபொருளின் விலை 132 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகப் பகிரப்படும் செய்தி போலியானது.” என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தபானத்தின் தலைவரின் அலுவலகம் எமக்கு தெரிவித்தது.
இறுதியாக கடந்த ஆகஸ்ட் மாதம் மற்றும் செப்டெம்பர் மாத இறுதிகளில் எரிபொருள்களின் விலைகள் குறைக்கப்பட்டிருந்தாலும், sketch.click7 என்கிற TikTok கணக்கில் பகிரப்பட்டுள்ளதுபோல எரிபொருளின் விலை 132 ரூபாயால் குறைக்கப்படவில்லை என்பதையும் நாம் உறுதி செய்துகொண்டோம்.
முடிவுரை: “இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிரடியாக குறைப்பு” என தலைப்பிட்டு sketch.click7 என்கிற TikTok கணக்கில் பகிரப்பட்டுள்ள செய்தி போலியானது என்கிற முடிவுக்கு வரலாம்.
ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.