Hashtag Generation

சமூக வலைத்தளங்கள் முடக்கப்படுமென போலியான செய்தி பகிரப்படுகிறது

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் இன்று (18.09.2024) நள்ளிரவுடன் நிறைவடைகின்ற நிலையில், சமூகவலைத்தளங்களை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு முடக்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்து Tamilaa  என்கிற பேஸ்புக் பக்கத்தில் செய்தி ஒன்று பகிரப்பட்டிருந்தது. 

VPN தயார் செய்து வைத்துகொள்ள வேண்டுமென தெரிவித்தும் பேஸ்புக்கில் சில பதிவுகள் பகிரப்பட்டு வருதை நாம் அவதானித்தோம்.

பேஸ்புக் பதிவுகளின் ஸ்கிரின் ஷாட்கள் (Screenshots)

அந்தவகையில் பேஸ்புக்கில் பகிரப்படும் இத்தகவலின் உண்மைதன்மையை அறிய ஹேஷ்டேக் தலைமுறை தீர்மானித்தது.

தேர்தல் மௌன காலத்தில் (பிரச்சார நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்ததன் பின்னர்) சமூக வலைத்தளங்களை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு முடக்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதா என நாம் வினவினோம்.

“சமூக வலைத்தளங்களை முடக்குவதற்கு எங்களுக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை. சமூக வலைத்தளங்களை முடக்குவது தொடர்பில் நாம் எந்தவிதமான அறிவிப்புகளையும் விடுக்கவில்லை. சமூக வலைத்தளங்களை முடக்குவதற்கான எந்தவொரு தீர்மானங்களும் மேற்கொள்ளவில்லை.” என தேர்தல்கள் ஆணைக்குழு எமக்கு உறுதிப்படுத்தியது.

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிடம் இது பற்றி நாம் வினவியபோது, “சமூக வலைத்தளங்கள் பற்றி நாம் எந்தவிதமானச் செயற்பாடுகளையும் முன்னெடுப்பதில்லை. இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவிடம் (CERT) இது தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.’’ எனவும் தெரிவிக்கப்பட்டது. 

“சமூக வலைத்தளங்களை முடக்குவதுத் தொடர்பில் எந்தவிதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. சமூக வலைத்தளங்களை முடக்கும் நிலை ஏற்பட்டால் அது பற்றி ஊடகங்களுக்கு அறிவிப்போம். ” என்று இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு எமக்கு அறிவித்தது.

சமூக வலைத்தளங்கள் முடக்கப்படுமென பொய்யான தகவல்களை கூறி மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும், போலியாகப் பகிரப்படும் இதுபோன்ற தகவல்கள் குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் நாம் கேட்டுக்கொள்கிறோம். 

முடிவுரை: அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு அதாவது தேர்தல் மௌன காலத்தில் சமூக வலைத்தளங்கள் முடக்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக பேஸ்புக்கில் பகிரப்படும் செய்தி போலியானது என்கிற முடிவுக்கு வரலாம்.

ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.