Hashtag Generation

தம்புள்ளையை சேர்ந்த யுவதி தற்கொலை செய்துகொண்டாரா?

தம்புள்ளையில் கையடக்கத் தொலைபேசி வர்த்தக நிலையமொன்றிலிருந்து கையடக்க தொலைபேசி ஒன்றை திருடியதாகக் கூறப்படும் யுவதி தற்கொலை செய்துகொண்டதாக tiktok இல் போலியான வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருவதை ஹேஷ்டேக் தலைமுறை அவதானித்துள்ளது.

யுவதி ஒருவர் தனது அம்மாவுடன் தம்புள்ளையில் உள்ள கையடக்க தொலைபேசி வர்த்தக நிலையத்துக்கு சென்று  தொலைபேசி ஒன்றை திருடும் சிசிடிவி வீடியோக்களும் அதனுடன் தொடர்புடைய செய்திகளும் கடந்த காலத்தில் வைரலாகியிருந்தன.

சம்மந்தப்பட்ட வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய யுவதியை தம்புள்ளை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியிருந்தனர். 

இதனைத் தொடர்ந்து, ஒரு இலட்ச ரூபாய் சரீர பிணையில் யுவதியை விடுதலை செய்ய தம்புள்ளை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்த பின்னணியிலேயே சம்மந்தப்பட்ட யுவதி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கும் வீடியோ ஒன்று tiktok இல் அதிகளவான பயனர்களால் பகிரப்படுவதை ஹேஷ்டேக் தலைமுறை அவதானித்தது. 

பகிரப்படும் வீடியோவின் ஸ்கிரின் ஷாட்கள் (Screen shots)

யுவதியின் படத்துடன் கூடிய அந்த வீடியோவில் “Suicide பன்னிட்டாங்க இந்த உயிர்  எடுக்க தான் எல்லோரும் hard work பன்னாங்க. ஆனா அந்த உயிர் போன news மட்டும் பெருசா reach ஆகல்ல.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை உண்மையென நம்பி tiktok இல் பலரும் இதனை பகிர்ந்து வருகிறார்கள். 

எவ்வாறாயினும் மேற்குறித்த வீடியோ தொடர்பான உண்மை தன்மையை தெரிந்துகொள்ள தம்புள்ளை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியை நாம் தொடர்புகொண்டபோது, கலேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்டப் பகுதியிலேயே மேற்குறித்த யுவதி வசித்து வருவதாகவும் இது தொடர்பான மேலதிக தகவல்களை கலேவெல பொலிஸாரிடம் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.

இதன்படி கலேவெல பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியை நாம் தொடர்புகொண்டபோது, மேற்குறித்த யுவதி தொடர்பில் வெளியாகி வரும் தகவல் போலியானது என எமக்கு உறுதிப்படுத்தினார். 

இதேவேளை, மேற்குறித்த வீடியோவில் வெளியாகும் தகவலின் உண்மைதன்மையை ஆராய்வதற்காக, தம்புள்ளையைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் காஞ்சன குமார ஆரியதாஸவிடம் இது பற்றி நாம் வினவினோம், 

“தொலைபேசியை திருடியதாகக் கூறப்படும் யுவதி தற்கொலை செய்துகொண்டாரா என பலரும் என்னிடம் தொடர்புகொண்டு வினவுகிறார்கள். அவ்வாறான எந்தவொரு சம்பவமும் பதிவாகவில்லை. யுவதி தொடர்பில் போலியான தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள்.” என அவர் தெரிவித்தார். 

தம்புள்ளை வர்த்தக நிலையத்தில் தொலைபேசி திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான செய்தி தனக்கே முதலில் கிடைத்ததாகக் கூறும் சுயாதீன ஊடகவியலாளர் காஞ்சன குமார ஆரியதாஸ, ஊடக ஒழுக்க நெறிக்குட்பட்டு யுவதியின் படங்களை பிளர் (Blur) செய்து அதனை ஊடகங்களுக்கு அறிக்கையிட்டிருந்ததாகவும் தெரிவித்தார். 

எவ்வாறாயினும்,  யுவதியின் படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பொறுப்பற்றவகையில் சிலர் பதிவேற்றியதால் யுவதியை இலக்கு வைத்து பல மோசமான தகவல்கள் பகிரப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார். 

முடிவுரை:  தம்புள்ளையைச் சேர்ந்த யுவதி தற்கொலை செய்துகொண்டதாக tiktok இல் வெளியாகி வரும் வீடியோக்கள் போலியானவை என்கிற முடிவுக்கு வரலாம். 

ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.