பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பல்வேறு கட்சிகள் தங்களது வேட்பாளர்களுக்கான பிரச்சார நடவடிக்கைகளுக்காக நாடுமுழுவதிலும் கூட்டங்களை ஏற்பாடு செய்து வருகின்றன.
இவ்வாறானநிலையில், “தனிக்கட்சி ஆட்சிமுறையே அவசியம். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அவசியமில்லை.” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறியதாக கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி The Island பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
பத்திரிகை செய்தியின் ஸ்கிரின்ஷாட் (Screenshot)
“தனிக்கட்சி ஆட்சிமுறையே AKDக்கு தேவை“ என தலைப்பிடப்பட்ட செய்தியை ஷமிந்திர பெர்ணான்டோ அறிக்கையிட்டிருந்தார். இச்செய்தியில், கம்பஹா – கட்டுநாயக்கவில் கடந்த ஒக்டோபர் 20ஆம் திகதி நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் உரையாற்றியிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, “பாராளுமன்றத்துக்கு எதிர்க்கட்சி அவசியமில்லை” என கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உரையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டதா என்பதை ஆராய ஹேஷ்டேக் தலைமுறை தீர்மானித்தது.
இதன்படி, கடந்த ஒக்டோபர் 20ஆம் திகதி கட்டுநாயக்கவில் அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையை நாம் ஆராய்ந்தோம்.
அநுரகுமார திஸாநாயக்க கட்டுநாயக்கவில் ஆற்றிய முழுமையான உரை JPV Sri Lanka என்கிற Youtube மற்றும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஜனாதிபதியின் உரையின் எந்தவொரு பகுதியிலும் பாராளுமன்றத்துக்கு எதிர்க்கட்சி அவசியமில்லை என குறிப்பிடப்படவில்லை என்பதை நாம் உறுதி செய்தோம்.
“பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையானோரின் தவறுகளை மக்கள் பார்க்கிறார்கள். பாராளுமன்றத்தில் இதுவரையில் இருந்த மக்கள் பிரதிநிதிகள் மக்கள் பக்கம் கையை உயர்த்துவதற்குப் பதிலாக மக்களுக்கு எதிரானப் பக்கமே கையை உயர்த்தினார்கள்.” என்றே ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்திருந்தார்.
மேலும், பாராளுமன்றத்துக்கு பலமான அரசாங்கம் தேவை எனவும் அதனால், பாராளுமன்றத்தை தேசிய மக்கள் சக்தியால் நிரப்ப வேண்டும் எனவும் அநுரகுமார திஸாநாயக்க கூறியிருந்தார்.
இதன்படி, தனிக்கட்சி ஆட்சிமுறை அவசியமெனவும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அவசியமில்லை எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறியதாக கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி The Island பத்திரிகையில் வெளியான செய்தி மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் பிரசுரிக்கப்பட்டிருந்ததை நாம் உறுதி செய்தோம்.
முடிவுரை: ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் தனிக்கட்சி ஆட்சிமுறை அவசியமென தனது உரையில் குறிப்பிடவில்லை. பாராளுமன்றத்துக்கு எதிர்க்கட்சி அவசியமில்லை என தலைப்பிடப்பட்டு வெளியிடப்பட்ட செய்தி மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் அறிக்கையிடப்பட்டுள்ளது என்கிற முடிவுக்கு வரலாம்.
ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.