பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (21) ஆரம்பமாகியிருந்தது. மையநீரோட்ட ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டவற்றில் பாராளுமன்ற அமர்வு பற்றிய செய்திகளே அதிகளவில் பகிரப்பட்டு வருவதை நாம் அவதானித்தோம்.
“எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்த தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்” என தலைப்பிடப்பட்டு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இரமநாதனின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதை நாம் அவதானித்தோம்.
Hiru News பேஸ்புக் பக்கத்திலும் “எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்த தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்” என தலைப்பிடப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் வீடியோ பகிரப்பட்டு பின்னர் நீக்கப்பட்டிருந்தது.
ஸ்கிரின்ஷாட்கள் (Screenshot)
இதுபோன்ற செய்திகளால் மக்கள் தவறாக வழிநடத்தப்படலாம் என்பதால் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் செய்தியின் உண்மைதன்மையை அறிய ஹேஷ்டேக் தலைமுறை தீர்மானித்தது.
பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசனங்கள் தனித்தனியாக ஒதுக்கப்பட்டிருக்கவில்லை என்பதால், பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா எதிர்க்கட்சி தலைவருக்கான ஆசனத்தில் அமர்ந்த சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.
இது தொடர்பில் அர்ச்சுனாவின் சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டிருந்த பேஸ்புக் லைவ் வீடியோவை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஊசி சின்னத்தில் சுயேட்சைக் குழு 17 இல் போட்டியிட்டிருந்தார். இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் 20,487 வாக்குகளைப் பெற்று அவர் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்தார்.
முடிவுரை: பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்த சம்பம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வரும் வீடியோவின் தலைப்பு மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளது என்கிற முடிவுக்கு வரலாம்.
யாழ் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருக்கும் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் ஊசி சின்னத்தில் சுயேட்சைக் குழு 17இல் போட்டியிருந்தார்.
ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே