Hashtag Generation

மட்டக்களப்பில் பாடசாலை மாணவிக்கு மர்ம நபரால் ஊசி ஏற்றப்பட்டதா?

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் மாணவிக்கு மர்ம நபர் ஊசி செலுத்தியதாக சமூக ஊடகங்களில் வெளியான குரல் பதிவு பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. 

குறிப்பாக இந்த குரல் பதிவை மேற்கோள்காட்டி பேஸ்புக்கில் Vinotharan Karan என்கிற நபர் லைவ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.  எவ்வாறாயினும் பின்னர் இந்த வீடியோ அவரது பேஸ்புக் கணக்கில் இருந்து நீக்கப்பட்டிருந்தாலும் யூடியூபில் அவரது வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது.

பேஸ்புக் பதிவுகளின் (Facebook Posts) ஸ்கிரீன் ஷாட் (Screenshots)

அந்த வீடியோவில், “ஹாய் பிரண்ட்ஸ், இன்று உங்களுக்கு முக்கியமான செய்தி ஒன்றை சொல்கிறேன். நமது பிள்ளைகளை பாதுகாக்க வேண்டியது நாமதான். அதனால இந்த வீடியோவ கூடுதலா செயார் பண்ணுங்க..” என்று ஆரம்பித்து,  இன்று காலையில் தான் இருக்கும் வாட்ஸ்அப் குழுவுக்கு ஒரு மெசெஜ் வந்ததாகக் கூறி பெண் ஒருவர் பேசும் குரல் பதிவை ப்ளே செய்கிறார். 

அந்த குரல் பதிவில், தரம் ஐந்தில் கல்வி கற்கும் மாணவி பாடசாலை முடிந்து வெளியில் நிற்கும்போது, உங்களுக்கு ஊசி செலுத்தப்பட்டுள்ளதா? என மோட்டார் சைக்களில் வந்திருந்த மர்ம நபர் மாணவியிடம் வினவியதாகவும் மாணவி இல்லை என பதிலளிக்க, உங்களுக்கு மட்டும்தான் ஊசி செலுத்தவில்லை என கூறி மாணவிக்கு ஊசி ஒன்றை அந்த நபர் செலுத்திவிட்டு அங்கிருந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஊசி செலுத்தப்பட்ட மாணவி உடல் நிலை பாதிப்புக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் எனவே, பாடசாலை முடிந்தவுடன் மாணவர்கள் பாடசாலைக்கு வெளியில் நிற்காமல் பெற்றோர்கள் வந்து கூப்பிட்டால் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும் எனவும் அந்த குரல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, லைவ் வீடியோவில் பேசிய Vinotharan Karan என்பவர் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளதா? என்பதை சம்பந்தப்பட்ட சிறுமியின் தாயாரிடம் பேசி உறுதிப்படுத்திக்கொண்டதாகவும் எனவே, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பில் IBC தமிழ், தமிழ்வின் ஆகிய இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

மட்டக்களப்பில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவிக்கு மர்ம நபர் ஊசி செலுத்தியதாகவும் அதனால் மாணவிக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டதாகக் கூறும் குரல் பதிவு தொடர்பில் ஹேஷ்டேக் தலைமுறை ஆராய்ந்தது.

“இதுவொரு போலியான சம்பவம். அப்படி ஒன்றும் நடக்கவில்லை.” என மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் காரியாலயத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத உயர் அதிகாரி ஒருவர் எமக்கு தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவையும் ஹேஷ்டேக் தலைமுறை தொடர்புகொண்டு இதுபற்றி வினவியபோது, “தனக்கு மர்ம நபர் ஒருவர் ஊசி செலுத்தியதாக பாடசாலை மாணவி கூறுகிறார். இது தொடர்பில் பாடசாலைக்கு அருகில் உள்ள சிசிடிவிகளை (CCTV) நாம் ஆராய்ந்துப் பார்த்தோம். 

எனினும், குறித்த மாணவிக்கு மர்ம நபர் ஒருவர் ஊசி செலுத்துவதுபோல எந்தவொரு சம்பவங்களும் பதிவாகவில்லை. எனவே, மாணவி உண்மையைதான் கூறுகிறார் என்பதை பொலிஸ் விசாரணைகளில் உறுதி செய்யவில்லை. ” என தெரிவித்தார்.

இதேவேளை, மாணவிக்கு மர்ம நபர் ஊசி செலுத்தியதாக குரல் பதிவை வெளியிட்ட ஆசிரியை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக வீரகேசரி இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது. 

முடிவுரை:  மட்டக்களப்பில் மாணவி ஒருவருக்கு மர்ம நபர் ஊசி செலுத்தியதால் உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டதாக வெளியாகும் குரல் பதிவு மற்றும் அதனுடன் தொடர்புடைய செய்திகள் போலியானது என்கிற முடிவுக்கு வரலாம்.

ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.