Hashtag Generation

முஸ்லிம்கள் தொடர்பில் ரவூப் ஹக்கீம் குறிப்பிடுவதுபோல அநுரகுமார கூறினாரா?

“எல்லா முஸ்லிம் தாயின் வயிற்றிலும் அவர்களின் கருப்பையிலும் பயங்கரவாதம் வளர்கிறது என்று பாராளுமன்றத்தில் அநுரகுமார திஸாநாயக்க பேசியிருக்கிறார்.” என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கூறும் வீடியோ ஒன்றை UTV HD வெளியிட்டிருந்தது.

பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் மேற்குறித்த சர்ச்சைக்குரிய உரையை பலரும் பகிர்ந்திருந்து வருகிறார்கள்.

ஜனாதிபதித் தேர்தல் இம்மாதம் 21ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தேர்தலில் பெரும் தாக்கத்தை செலுத்தும் என்பதால், ரவூப் ஹக்கீம் எம்.பியின் மேற்குறித்த உரையை உண்மை சரிபார்ப்புச் செய்ய ஹேஷ்டேக் ஜெனரேஷன் தீர்மானித்தது.

ரவூப் ஹக்கீம் எம்.பியின் மேற்குறித்த உரை தொடர்பில் Keyword search செய்து பார்த்தபோது பேஸ்புக் மட்டுமல்லாது TikTok பயனர்களும் ஹக்கீமின் உரையை பகிர்ந்து வருவதையும், அநுரகுமார திஸாநாயக்க எம்.பி பாராளுமன்றத்தில் பேசும் வீடியோ ஒன்றும் அதிகளவில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிந்தது.

பேஸ்புக் மற்றும் TikTokஇல் பதிவுகளின் ஸ்கிரின் ஷாட்கள் (Screenshots)

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் அநுரகுமார எம்.பியின் பாராளுமன்ற உரை தொடர்பான வீடியோவை நாம் முதலில் ஆராய்ந்தோம்.

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் அநுரகுமார எம்.பியின் வீடியோவானது, 2019.05.07 அன்று பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையொன்றின் சிறிய பகுதி என்பதை நாம் உறுதி செய்துகொண்டோம்.

2019.05.07 அன்று பாராளுமன்றம் கூடியபோது அப்போதைய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.சந்திரசேனவால் கொண்டுவரப்பட்ட, “2019.04.21 அன்று இடம்பெற்ற மிலேச்சத்தனமான பயங்கரவாதத் தாக்குதல்“ தொடர்பான சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தின்போது அநுரகுமார எம்.பி ஆற்றிய உரையின் சிறிய பகுதியொன்றே இவ்வாறு பகிரப்பட்டு வருகிறது. முழுமையான உரை

ஹன்சார்டின் ஸ்கிரின் ஷாட் (Screenshot)

2019.05.07 அன்று பாராளுமன்றத்தில் அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையை முழுமையாக அவதானித்தோம். 

அநுரவின் உரையின் 14.51 நிமிடத்திலிருந்து 17.38 நிமிடம் வரையிலான நேரத்தில் முஸ்லிம்கள் மற்றும் அடிப்படைவாதம் பற்றி பேசப்படுகிறது. 

உரையின் தமிழ் மொழிப்பெயர்ப்பு 

“முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இனவாதம் மற்றும் அவர்களால் முஸ்லிம் சமூகத்துக்குள் விதைக்கப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக குரல்கொடுக்க வேண்டுமென நான் அழைப்பு விடுக்கிறேன். முஸ்லிம் தலைவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கக்கூடாது அல்லது குரல்கொடுப்பதை கைவிட வேண்டுமென நாம் பலவந்தப்படுத்தினால், முஸ்லிம் மக்கள் அடிப்படைவாதிகளுக்குப் பலியாவதை தடுக்க முடியாது. 

எனவே, இதில் முஸ்லிம் தலைவர்களுக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் பாரிய பொறுப்பு இருக்கிறது. இந்த அழிவுகரமான கரு முஸ்லீம் கருப்பையிலேயே வளர்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதை நாம் நிராகரிக்க முடியாது. 

இது முஸ்லீம் கலாசாரத்துக்குள் வளர்ந்து  வருகிறது. இஸ்லாமிய மதத்தில் இவ்வாறு இல்லை என சிலர் என்னோடு விவாதிக்க முடியும். ஆம், முஸ்லிம் மதத்தில் இல்லாமல் இருக்கலாம். அதனால்தான் இது முஸ்லிம் அடிப்படைவாதமாக இருக்கிறது. இஸ்லாமிய மதத்தில் வளர்ந்து, அச்சமூகத்திற்குள் மறைந்து உள்ளது. அதனால், இது முஸ்லிம் சமூகம் எனும் கருவுக்குள் வளர்ந்துள்ளது. 

சிதைந்துள்ள இந்த கருவை வளரவிடுவதா அல்லது அழிப்பதா என்பதை முஸ்லிம் சமூகமே தீர்மானிக்க வேண்டும். இதை வெறும் பாதுகாப்பு செயல்முறை அல்லது பிற சமூகங்களின் தலையீடுகளால் கட்டுப்படுத்த முடியாது. அது உருவாக்கப்பட்ட கருப்பையின் சொந்தக்காரர்களால் மட்டுமே அதை அழிக்க முடியும். கருப்பை அழிக்கப்படுவதை நான் முன்மொழியவில்லை. ஆனால் கருப்பையில் உள்ள சிதைந்த கருவை அழிக்க வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன். இதை முஸ்லிம் சமூகமும் தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்….”  என்று அநுரவின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவிடுவதுபோல “எல்லா முஸ்லிம் தாயின் வயிற்றிலும் அவர்களின் கருப்பையிலும் பயங்கரவாதம் வளர்கிறது” என அநுரவின் உரையின் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பதை நாம் உறுதி செய்தோம்.

அநுரகுமார திஸாநாயக்க எம்.பியின் 2019.05.07 அன்றைய பாராளுமன்ற உரையின் ஹன்சார்ட் அறிக்கையையும் நாம் ஆராய்ந்து இதனை மேலும் நாம் உறுதிப்படுத்திக்கொண்டோம்.

முடிவுரை: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குறிப்பிடுவதுபோல, எல்லா முஸ்லிம் தாயின் வயிற்றிலும் அவர்களின் கருப்பையிலும் பயங்கரவாதம் வளர்கிறது”  என்று ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிடவில்லை என்கிற முடிவுக்கு வரலாம்.

ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.