Hashtag Generation

ஹட்டனில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு புதிய பஸ் ஒன்றை சேவையில் ஈடுபடுத்தினாரா ஜீவன் தொண்டமான்?

நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் கேள்விக்கு என்ன பதில் என்கிற நேரலை  நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நேரலை நிகழ்வில் கலந்துகொண்டு கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், “ஹட்டனில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கடந்த மாதம் பஸ் ஒன்றை நாங்கள் சேவையில் ஈடுபடுத்தியிருக்கிறோம்.” என நேரலையின் 17.20 நிமிடத்தில் கூறியிருந்தார். 

பேஸ்புக் நேரலையின் ஸ்கிரின்ஷாட் (Screenshot)


அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறுவதுபோல, ஹட்டனில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கடந்த மாதம் பஸ் ஒன்றை அவர் சேவையில் ஈடுபடுத்தினாரா என்பதன் உண்மைதன்மையை ஆராய ஹேஷ்டேக் தலைமுறை தீர்மானித்தது.

இதன்படி, ஹட்டன் டிப்போவின் முகாமையாளரை தொடர்புகொண்டு இதுபற்றி நாம் வினவியமைக்கு, ஹட்டனில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு சேவையில் ஈடுபடுவதற்காக இரண்டு பஸ்களை வழங்குவதாக அண்மையில் ஹட்டன் டிப்போவுக்கு வருகைதந்திருந்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன கூறியிருந்தார். 

ஆனால், இதுவரையில் பஸ்கள் வழங்கப்படவில்லை. ஹட்டனில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு புதிதாக எந்தவொரு பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை.” என்றார்.

“சுமார் கடந்த 15 வருடங்களாக இரு தனியார் பஸ்களே ஹட்டனில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு சேவையில் ஈடுபடுகின்றன. புதிதாக எந்தவொரு பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை.” என ஹட்டன் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் எம்.ராமச்சந்திரனும் எமக்கு உறுதிப்படுத்தினார். 

இதன் மேலதிக உண்மைதன்மையை அறிய ஹட்டனைச் சேர்ந்த ஊடகவியலாளரும் வீரகேசரி வார வெளியிட்டின் பிரதி ஆசிரியரும் சிவலிங்கம் சிவகுமாரனை நாம் தொடர்புகொண்டோம்.

“ஹட்டன் டிப்போவில் இருந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் தொலைதூர சேவைகளில் ஈடுபடுகின்றன. ஆனால், ஹட்டனில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான எந்தவொரு பஸ்களும் தற்போது வரையில் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை

தனியாருக்கு சொந்தமான இரண்டு அரை சொகுசு (Semi luxury) பஸ்களே நீண்டகாலமாக சேவையில் ஈடுபடுகின்றன. இதற்கு மாறாக புதிய பஸ்கள் எதுவும் கடந்த மாதம் முதல் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை.” என்றார்.

முடிவுரை: அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்க நேரலையில் ஹட்டனில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு பஸ் ஒன்றை கடந்த மாதம் முதல் சேவையில் தான் ஈடுபடுத்தியிருப்பதாகக் கூறினாலும், அவ்வாறு எந்தவொரு பஸ்ஸூம் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை என்கிற முடிவுக்கு வரலாம். 

ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.