வவுனியா பிரதேசத்தில் இரு குழந்தைகள் கடத்தப்பட்டு அவர்கள் கொலை செய்யப்படுகின்ற காட்சி என சித்தரிக்கின்ற காணொளி ஒன்று வாட்ஸ்அப்(WhatsApp) சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களிலும் சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் மன்னார் பிரதேசத்தில் இரண்டு குழந்தை கடத்தப்பட்டு பின்னர் மீட்கப்பட்டுள்ளதாகவும் குரல் பதிவொன்றும் பகிரப்படுவதை அவதானிக்க முடிந்தது.
எனவே இது பற்றி ஹேஷ்டாக் தலைமுறை மன்னார் மாவட்ட தலைமை காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரியிடம் வினவியது. அப்போது அவர், சிறுவர்கள் கடத்தப்பட்டமை தொடர்பான மூன்று முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும், அது பற்றிய விசாரணைகள் நடந்து வருவதாகவும் கூறினார். மேலும் குறித்த குரல் பதிவில் கூறியது போல் எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை என்பதுடன் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளும் சந்தேகத்தின் பெயரில் அளிக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் என மன்னார் காவல் நிலைய தலைமை பொறுப்பதிகாரி கூறினார்.
மேலும் இது பற்றி நாங்கள் வவுனியா காவல் நிலைய பொறுப்பதிகாரியிடம் வினவியபோது, குழந்தைகள் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட எந்த ஒரு சம்பவமும் வவுனியா மாவட்டத்தில் இதுவரை பதிவு செய்யப்படவில்லை என குறிப்பிட்டார்.
மேலும் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களிலும் குழந்தைகள் கடத்தப்பட்டமை தொடர்பில் எந்த ஒரு சம்பவமும் பதிவு செய்யப்படவில்லை என புதுக்குடியிருப்பு மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் எமக்கு தெரிவித்தனர்.
மேலும் இலங்கை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதயகுமாரவிடம் குறித்த காணொளியில் உள்ளவாறு ஏதேனும் சம்பவங்கள் பற்றிய முறைப்பாடுகள் கிடைத்ததா என வினவிய போது அவர் அதனை மறுத்தார்.
அத்துடன் பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்தூவவிடம் இது பற்றி நாங்கள் வினவினோம். அப்போது அவர் “ அந்தக் காணொளியை நானும் கண்டேன். அது இலங்கையில் எடுக்கப்பட்ட ஒன்று அல்ல மேலும் அதிலே பேசப்படுகின்ற மொழி இலங்கை மக்களிடையே பேசப்படுகின்ற எந்த ஒரு மொழியும் அல்ல. குழந்தைகளை கடத்த முயன்றதாக ஒரு சில முறைப்பாடுகள் வடக்கிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளன. அது பற்றி குறித்த பொலிஸ் நிலையங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. எனினும் இந்த வீடியோ முற்றிலும் போலியானது” என தெரிவித்தார்.
இந்த சகல விடயங்களையும் கருத்தில் கொண்டு குறித்த வீடியோ மற்றும் குரல் பதிவு மக்களிடையே தேவையற்ற பதற்ற நிலையை ஏற்படுத்துவதுடன் அந்த வீடியோவானது இலங்கையில் நிகழ்ந்த சம்பவமே அல்ல என்ற முடிவுக்கு வரலாம்.
ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.