உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் இலங்கையை வந்தடைந்ததாகத் தெரிவித்து தமிழ் பத்திரிகைகள், இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
செய்திகளின் ஸ்கிரின் ஷாட்கள் (Screen Shots)
செய்திகளின் தலைப்புகளில் “உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் இலங்கை வந்தது” என குறிப்பிடப்பட்டிருந்தாலும், செய்திகளின் உள்ளே “உலகின் மிகப்பெரிய விமானங்களில் ஒன்றான என்டனோவ் – 124 கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இலங்கைக்கு வந்தது உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமா? அல்லது உலகின் மிகப்பெரிய சரக்கு விமானங்களில் ஒன்றா? என்பது தொடர்பில் ஹேஷ்டேக் தலைமுறை ஆராய்ந்தது.
இலங்கை விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் எரந்த கீகனகேவை தொடர்புகொண்டு நாம் இது தொடர்பில் வினவியபோது, “உக்ரைனைச் சேர்ந்த Antonov An-225 Mriya என்கிற சரக்கு விமானமே உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமாக இருந்தது. எனினும், உக்ரைன் – ரஷ்ய யுத்தத்தின்போது ரஷ்யாவின் தாக்குதல்களால் Antonov An-225 Mriya அழிக்கப்பட்டது.
அதனால், தற்போது சேவையில் உள்ள விமானங்களில் An-124 விமானமே மிகப்பெரிய சரக்கு விமானமாக இருக்கிறது.” என்றார்.
Antonov An-225 Mriya என்கிற விமானமே உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமாக காணப்பட்டதோடு, ரஷ்யா – உக்ரைன் யுத்தத்தின்போது 2022ஆம் ஆண்டு பெப்ரவரி 27ஆம் திகதி ரஷ்யாவில் இந்த விமானம் தாக்கியழிக்கப்பட்டிருந்ததையும் நாம் உறுதி செய்துகொண்டோம்.
உக்ரைனின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் எக்ஸ் தளத்தின் ஸ்கிரின் ஷாட் (Screen Shots)
உக்ரைனிய விமான தயாரிப்பு நிறுவனமான அன்டோனோவ், அழிக்கப்பட்ட விமானத்துக்குப் பதிலாக இரண்டாவது An-225 Mriya விமானத்தை உருவாக்கத் தொடங்கியுள்ளதாக Interfax செய்தி வெளியிட்டிருந்தது.
உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான An-225 Mriya ரஷ்யா – உக்ரைன் யுத்தத்தில் அழிக்கப்பட்டதால், An–124 Ruslan (இலங்கைக்கு அண்மையில் வந்திருந்த சரக்கு விமானம்) விமானமே தற்போது உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமாக உள்ளது.
முடிவுரை: உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் இலங்கையை வந்தடைந்ததாக தலைப்பிட்டு தமிழ் பத்திரிகைகள், இணையத்தளங்கள் வெளியிட்டிருந்த செய்தி சரியானதே என்கிற முடிவுக்கு வரலாம்.
ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.