தென்னிந்திய திரை நட்சத்திரங்கள் பங்குபற்றிய பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியும் நட்சத்திர கலைவிழா நிகழ்வும் கடந்த 09ஆம் திகதி யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் நடைபெற்றிருந்தது.
நடிகை ரம்பாவின் கணவரும், பிரபல தொழிலதிபருமான இந்திரகுமார் பத்மநாதன் இந்த இசை நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் நடிகை தம்மன்னா, நடிகர்களான யோகி பாபு, புகழ் மற்றும் திவ்யதர்ஷினி (டிடி) உள்ளிட்ட பல தென்னிந்திய நட்சத்திரங்கள் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த இசை நிகழ்வுக்கு தென்னிந்திய திரை நட்சத்திரங்களை இலங்கைக்கு அழைத்து வரும் பணிகளை நிகழ்வின் தயாரிப்பாளரான கலா மாஸ்டர் முன்னெடுத்திருந்ததோடு, இசை நிகழ்வின் பணிப்பாளராக ஷியா உல் ஹசன் செயற்பட்டிருந்தார்.
ஹரிஹரனின் இந்த இசை நிகழ்வு ஆரம்பத்திலிருந்தே பெரும் சர்ச்சைகளை சந்தித்திருந்தது.
இசை நிகழ்வுக்கான கட்டண தொகைக்கு அமைய பார்வையாளர்களுக்கான வரிசைகள் ஒதுக்கப்பட்டிருந்ததோடு, இலவசப் பார்வையாளர்களுக்கான பகுதியொன்றும் வழங்கப்பட்டிருந்தது.
இலவச பார்வையாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் திரண்டிருந்த அதிகளவான ரசிகர்கள், கட்டணம் செலுத்திய பார்வையாளர்களுக்கான பகுதிக்கு அத்துமீறி நுழைய முயற்சித்ததோடு, உயரமான இடங்களில் ஏறி நிகழ்வை பார்க்கவும் முற்பட்டுள்ளனர்.
இதனால், ஏற்பட்ட பதற்ற நிலைமைகளை தடுப்பதற்கு அங்கிருந்த பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுக்க முயற்சித்ததைத் தொடர்ந்து நிலைமை மோசமாகியுள்ளது.
இந்த பின்னணியிலேயே, இசை நிகழ்வு இடைநடுவில் நிறுத்தப்பட்டதாக இலங்கை மற்றும் இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. பிபிசி தமிழில் வெளியான செய்தியைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
இசை நிகழ்வுக்கு மறுநாள் அதாவது பெப்ரவரி 10ஆம் திகதி, கலா மாஸ்டர் உயிரிழந்துவிட்டதாகக் குறிப்பிடும் வகையில் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி படங்கள் முகப்புத்தகம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டமை தொடர்பில் ஹேஷ்டாக் தலைமுறை ஆராய்ந்தது.
கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் தொடர்பான முகப்புத்தக பதிவுகளின் ஸ்கிரின் ஷாட்கள்.
கலா மாஸ்டருக்கு உயிரிழந்துவிட்டார் என தெரிவிக்கும் வகையில் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள், யாழ்ப்பாணம் வடமராட்சி – பருத்தித்துறை நகரில் ஒட்டப்பட்டிருந்ததாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் எமக்கு உறுதிப்படுத்தினார்கள்.
இதேவேளை, யாழில் நடைபெற்ற ஹரிஹரன் இசை நிகழ்ச்சியின் பணிப்பாளரான ஷியா உல் ஹசனை தொடர்புகொண்டு இதுபற்றி நாம் வினவினோம்.
“கலா மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை வேதனையான விடயம். கலா மாஸ்டர் இது பற்றி அறிந்தவுடன் மனவருத்தமடைந்தார். கலா மாஸ்டரின் வயது மற்றும் அனுபவத்தை மதிக்க வேண்டும். தவறான வழிநடத்தலின் கீழ் சிலர் இந்த வேலைகளை செய்திருக்கலாம்.
ஒரு சிலரின் செயற்பாட்டால் ஒட்டுமொத்த யாழ் மக்களையும் குறைகூற முடியாது. எவ்வாறாயினும் இதுபோன்ற விடயங்கள் யாழில் நடக்கும்போது வெளியுலகுக்கு யாழ்ப்பாணம் வேறு விதமாகக் காட்டப்படுவது வேதனையானது.“ என்றார்.
மேலும் கலா மாஸ்டர் தேக ஆரோக்கியத்துடன் இருப்பதையும் ஷியா உல் ஹசன் உறுதி செய்தார்.
இதேவேளை, கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் தொடர்பில் பிரபல தென்னிந்திய நடன இயக்குநர் கலா மாஸ்டரை ஹேஷ்டேக் தலைமுறை தொடர்புகொண்டு வினவியது.
“இசை கச்சேரிக்கு எதிர்பார்த்ததைவிட அதிகளவான மக்கள் வந்திருந்தார்கள். அதுதான் அங்கு நடந்த பிரச்சினைக்குக் காரணம். நான் ஒன்று சொல்லவா, எல்லோருக்கும் எல்லோரையும் பிடிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. பலருக்கு என்னை பிடிக்கும் சிலருக்கு என்னைப் பிடிக்காமல் இருக்கலாம்.
ஆனால், என்னை பிடிக்காது என்று சொல்பவர்களையோ அல்லது எனக்குக் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை ஒட்டியவர்களையோ நான் வெறுப்பது கிடையாது. எனது அப்பா என்னை அப்படித்தான் வளர்த்திருக்கிறார்.
யாழ்ப்பாண மக்கள் மீது எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. நிச்சியமாக அவர்கள் இதனை செய்திருக்க மாட்டார்கள். தமிழ் மக்கள் அதிகமாக வாழும் வடக்கு மாகாணத்தை குழப்ப வேண்டும் என நினைக்கும் யாரோதான் இதனை செய்திருப்பார்கள்.
கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகளால் எனது வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இலங்கை தமிழர்கள் எப்போதும் என்னோடு நெருங்கி பழகுவார்கள். கனடா, சுவிஸ், லண்டன் இப்படி எந்த நாட்டுக்கு சென்றாலும் இலங்கை தமிழர்களின் வீடுகளிலேயே நான் பெரும்பாலும் தங்குவேன். அந்த அளவுக்கு என்னோடு நெருங்கிப் பழகுவார்கள்.
பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்தே பெண்கள் தங்களது வாழ்க்கையில் முன்னேறி வருகிறார்கள். அவர்களுக்கு பிள்ளைகள், கணவர் என ஒரு குடும்பம் இருக்கும். பெண்களுக்கு எதிராக அவதூறு பரப்புவதால் என்ன நன்மை கிடைக்கப்போகிறது? யாழ்ப்பாணத்து மக்கள் எனக்கு எதிராக ஒருபோதும் இதுபோன்ற அவதூறுகளை பரப்ப மாட்டார்கள்.” எனவும் தெரிவித்தார்.
முடிவுரை: பிரபல தென்னிந்திய நடன இயக்குநர் கலா மாஸ்டர் உயிரிழந்துவிட்டாரென யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள், கலா மாஸ்டர் மீது அவதூறுகளை பரப்புவதற்காகவும் அல்லது வேறு நோக்கங்களுக்காகவும் ஒட்டப்பட்டிருக்கலாம் என்கிற முடிவுக்கு வரலாம்.
ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.