Hashtag Generation

செல்வராசா கஜேந்திரன் எம்.பி கைதானதாக வெளியான செய்தி போலியானது

ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டுமென கிளிநொச்சியில் துண்டுபிரசுரங்களை விநியோகித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கடந்த வெள்ளிக்கிழமை (16.09.2024) கைது செய்யப்பட்டிருந்ததாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டிருந்ததை நாம் அவதானித்தோம். 

Tamilguardian  மற்றும் தமிழ் செய்தி இணையத்தளங்களும் இச்செய்தியை வெளியிட்டிருந்தன..  

செய்திகளின் ஸ்கிரின்ஷாட்கள் (Screenshots)

ஜனாதிபதித் தேர்தலில் இதுபோன்ற செய்திகள் தாக்கம் செலுத்தும் என்பதால் இச்செய்திகளின் உண்மைதன்மை பற்றி ஆராய ஹேஷ்டேக் தலைமுறை தீர்மானித்தது. 

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை தொடர்புகொண்டு வினவியபோது, “ஒன்றரை மணிநேரம் பொலிஸார் என்னை தடுத்து வலுக்கட்டாயமாக நிறுத்தி விசாரணை செய்தார்கள். இதனை நான் கைதாகவே பார்க்கிறேன்.” என்றார். 

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கவில்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர்  பிரதிப்பொலிஸ் அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ எமக்கு உறுதிப்படுத்தினார்.

இது தொடர்பான மேலதிக விளக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியை நாம் தொடர்புகொண்டு வினவினோம்.

“ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டுமென கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகில்  துண்டுபிரசுரங்களை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் விநியோகித்து வந்தார். 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சனாதிபதித் தேர்தல் சட்டத்தின்படி வாக்களிப்பதை நிறுத்துவது ஒரு குற்றமாகும். இது பற்றி பாராளுமன்ற உறுப்பினருக்கு விளக்களித்தோம்.

பாராளுமன்ற உறுப்பினரை பொலிஸார் கைது செய்ததாக பொய்யான செய்திகள் வெளியாகியுள்ளன. நாம் அவரை கைது செய்யவில்லை.  எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர் வசமிருந்த துண்டுபிரசுரங்களை நாம் கைப்பற்றி நீதிமன்றத்துக்கு அறிக்கையிட்டிருக்கிறோம்.” என கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

இச்செய்தியின் உண்மைதன்மையை மேலும் ஆராய்வதற்காக சம்பவம் நடந்தபோது அங்கிருந்த சுயாதீன ஊடகவியலாளர் ஒருவரிடம் இது பற்றி நாம் வினவியபோது, “கிளிநொச்சியில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை பொலிஸார் கைது செய்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தாலும், அவ்வாறு அவர் கைது செய்யப்படவில்லை. ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதை தடுக்கும் வகையில் செயற்படுவதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை என்றே சம்பவ இடத்துக்கு வந்திருந்த பொலிஸார் கூறினார்கள்.” என்றார்.

மேற்குறிப்பிட்ட சுயாதீன ஊடகவியலாளரின் தனிப்பட்டப் பாதுகாப்புக் காரணங்களுக்காக அவரது பெயரை வெளியிடாதிருக்க ஹேஷ்டேக் தலைமுறை தீர்மானித்தது. 

கிளிநெச்சியில் தேர்தல் பகிஷ்கரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கடந்த வெள்ளிக்கிழமை (13.09.2024) கைது செய்யப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தாலும், அன்றைய தினம் செல்வராசா கஜேந்திரன் கைது செய்யப்படவில்லை.  

முடிவுரை: “கிளிநெச்சியில் தேர்தல் பகிஷ்கரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் பொலிசாரினால் தற்போது கைது செய்யப்பட்டார்.” என சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தி இணையத்தளங்களில் வெளியான செய்திகள் போலியான செய்திகள் என்கிற முடிவுக்கு வரலாம்.

ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.