Hashtag Generation

தமிழ் அரசியல் தலைவர்கள் தொடர்பில் லண்டனில் அநுரகுமார திஸாநாயக்க பேசியது என்ன?

“அரசமைப்பில் பௌத்தத்துக்கு முதன்மை; தமிழ் தலைவர்கள் கைவைக்க முடியாது!” என தலைப்பிட்டு தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க லண்டனில் ஆற்றிய உரை தொடர்பான, திரிபுப்படுத்தப்பட்ட பத்திரிகை செய்தி ஒன்றை தமிழ் பேஸ்புக் பயனர்கள் சிலர் பகிர்ந்திருந்ததை ஹேஷ்டேக் தலைமுறை அவதானித்தது.

பேஸ்புக் பதிவுகளின் ஸ்கிரின் ஷாட்கள் (Screen shots)  

19.06.2024 அன்று வெளியான ஈழநாடு பத்திரிகையின் 7ஆவது பக்கத்திலேயே மேற்குறித்த செய்தி வெளியிடப்பட்டிருந்ததை நாம் உறுதி செய்துகொண்டோம். 

பத்திரிகையின் ஸ்கிரின் ஷாட் (Screen shot)

அரசியலமைப்பின் 9ஆவது சரத்து, பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும், பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தலும் பேணி வளர்த்தலும் அரசின் கடமை என்று குறிப்பிடுகிறது. 

அரசியலமைப்பின் ஸ்கிரின் ஷாட் (Screen shot)

மேற்குறித்த செய்தியை வாசிக்கும்போது முன்னுக்குப் பின் முரணான தவறான அர்த்தங்களை வழங்கும் வகையில் இந்த செய்தி திரிபுப்படுத்தப்பட்டு எழுதப்பட்டிருப்பதை நாம் அவதானித்தோம். 

செய்தியின் ஆரம்பத்தில் முதலாவது பந்தியில், “பௌத்த மத அடிப்படையில் வாழ்வது தேசிய மக்கள் சக்தி மாத்திரமே. அரசமைப்பின் 9ஆவது சரத்தில் கைவைக்கும் உரிமை தமிழ் அரசியல் தலைவர்களுக்கு இல்லை என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.” என குறிப்பிடப்படுகிறது. 

ஆனால், செய்தியின் இறுதியில், “….9ஆவது சரத்தில் கைவைக்க மாட்டோம். அதில் கைவைக்க வேண்டிய தேவை தமிழ் அரசியல் தலைவர்களுக்கு இல்லை.” என அநுரகுமார திஸாநாயக்க கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவற்றின் ஸ்கிரின் ஷாட் (Screen shot)

தேசிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவும் மேற்குறித்த செய்தியின் தலைப்பு மற்றும் உள்ளடக்கங்கள் திரிபுப்படுத்தப்பட்ட வகையில் எழுதப்பட்டிருப்பதை ஹேஷ்டேக் தலைமுறைக்கு உறுதி செய்திருந்தது.

பிரித்தானியாவுக்கு சென்றிருந்த அநுரகுமார திஸாநாயக்க லண்டனில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியப் பின்னர் அங்கிருந்தவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே மேற்குறித்த விடயம் தொடர்பில் அநுரகுமார கருத்து வெளியிட்டிருந்திருந்தார்.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் பௌத்தத்துக்கான முன்னுரிமை குறைக்கப்படும் என கூறப்படுவது தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன? என இதன்போது அநுரகுமாரவிடம் வினவப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அநுரகுமார திஸாநாயக்க, “பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டு வந்த அந்தஸ்த்து எங்களது ஆட்சியின்போது இரத்துச் செய்யப்படுமா என எம்மிடம் வினவுகிறார்கள். அது முற்றிலும் பொய். அரசியலமைப்பின் 9ஆவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பௌத்தத்துக்கான முன்னுரிமை ஒருபோதும் இரத்துச் செய்யப்படாது. 

இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டுவரையில் கலந்துரையாடப்பட்டிருந்தது. 

அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில்  அதன் உறுப்பினராக நானும் பிமல் ரத்நாயக்கவும் கலந்துகொண்டிருந்தோம். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் கலந்துகொண்டிருந்தார்கள். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ரவூப் ஹக்கீம் மற்றும் தினேஸ் குணவர்தனவும் கலந்துகொண்டிருந்தார்கள். 

அரசியலமைப்பின் 9ஆவது சரத்தை நீக்குவது தொடர்பில் இதன்போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கலந்துரையாடப்படவில்லை.  கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த அனைவரும் அரசியலமைப்பின் 9ஆவது சரத்தை ஏற்றுக்கொண்டிருந்தார்கள். அதில் எவரும் கைவைக்க மாட்டார்கள். 

தமிழ் அரசியல் தலைவர்களுக்குக் கூட அரசியலமைப்பின் 9ஆவது சரத்தில் கைவைக்கும் தேவை இல்லை என்பது எமக்கு தெரியும்.” என அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.

மேற்குறித்த பத்திரிகை செய்தியில், “பௌத்த மத அடிப்படையில் வாழ்வது தேசிய மக்கள் சக்தி மாத்திரமே. அரசமைப்பின் 9ஆவது சரத்தில் கைவைக்கும் உரிமை தமிழ் அரசியல் தலைவர்களுக்கு இல்லை.” என குறிப்பிடப்பட்டிருந்தாலும், அநுரகுமாரவின் உரையில் அவ்வாறு கூறப்படவில்லை என்பதை நாம் உறுதி செய்துகொண்டோம். 

மாறாக தனது உரையில், “அரசமைப்பின் 9ஆவது சரத்தில் கைவைக்கும் தேவை தமிழ் அரசியல் தலைவர்களுக்கு இல்லை என்றே” அநுர குறிப்பிடுகிறார்.

முடிவுரை:  “அரசமைப்பில் பௌத்தத்துக்கு முதன்மை; தமிழ் தலைவர்கள் கைவைக்க முடியாது!” என தலைப்பிட்டு ஈழநாடு பத்திரிகை  அநுரகுமார திஸாநாயக்க தொடர்பில் வெளியிட்டிருந்த செய்தியின் தலைப்பு மற்றும் உள்ளடக்கங்கள் திரிபுப்படுத்தப்பட்டிருக்கின்றன என்கிற முடிவுக்கு வரலாம்.

ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.