Hashtag Generation

“சந்தேக நபர்களின் பெயர்ப்பட்டியல்கள் எதுவும் பகிரங்கப்படுத்தப்படவில்லை”

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் 15 வயது சிறுமியொருவரை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனிடையே குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக்கூறி குறிப்பிட்ட சிலரின் பெயர் பட்டியலொன்று ஃபேஸ்புக்(Facebook) வாட்ஸ்அப்(WhatsApp) உட்பட சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

“லங்காலைவ்ஸ்” (LankaLives) என்ற ஒரு இணையத்தளம் இந்த பெயர்களை முதலிலே குறிப்பிட்டிருந்ததுடன் இந்த செய்தியினை மையமாக வைத்தே அவர்களுடைய பெயர்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன.

அந்த செய்தியின் ஸ்க்ரீன்ஷாட் (screenshot) :

இதுகுறித்து நாம் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட உதவிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹனவிடம் வினவியபோது “சந்தேகநபர்கள் எவருடைய விபரங்களும் ஊடகங்களுக்கு வழங்கப்படவில்லை. மேலும், சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ள ஒரு சிலரின் பெயர் விபரங்கள் குறித்த பட்டியலில் காணப்பட்ட போதிலும் அவ்வாறான எந்தவொரு பெயர் பட்டியலையும் போலீசார் ஊடகங்களுக்கு வழங்கவில்லை ” என உறுதியாக தெரிவித்தார்.

அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 41 பேர் (ஜூலை13) இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியினை வெளியிட்டிருந்த லங்காலைவ்ஸ் இணையத்தளம் பற்றி நாங்கள் ஆய்வு செய்தோம்.

“லங்காலைவ்ஸ்” இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி இலக்கமானது போலியானதாகும். மேலும் விளம்பர சேவைக்காக அங்கே குறிப்பிட்டிருந்த “icon” இனை ‘click’ செய்தால்திரும்பவும் அதே இணையத்தளத்திற்கே எம்மை அது கொண்டு செல்கின்றது. அத்துடன் இந்த தளத்தில் சமூக ஊடக இணைப்புகள் பல குறிப்பிடப்பட்டு இருந்தபோதிலும் அவற்றை ‘click’ செய்தாலும் திரும்ப அது “லங்காலைவ்ஸ்” இணையதளத்திற்கே செல்கின்றது.

அதன்படி, இந்த வலைத்தளத்தின் ஆசிரியர் அல்லது சம்பந்தப்பட்ட நபர்கள் எவரையும் தொடர்பு கொள்ள முடியாது என்று தெரிகிறது.

அத்துடன்,https://centralops.net/co/ ‘கருவி / வலைத்தளத்தினை’ கொண்டு ஆய்வு செய்தபோது “லங்காலைவ்ஸ் வலைத்தளமானது” அக்டோபர் 7, 2020 அன்று உருவாக்கப்பட்டுள்ளது, என்பதை கண்டுபிடிக்க முடிந்தது.

மேலே குறிப்பிட்ட பலாத்காரம் தொடர்பிலான விசாரணையை நடாத்தி வருகின்ற இலங்கை காவல்துறையின் குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகத்தின் மூத்த அதிகாரியொருவர் பின்வருமாறு தெரிவித்தார்.

“இது ஒரு போலியான பட்டியலாகும். அத்தகைய எந்தவொரு பெயர் விபரங்களையும் நாங்கள் ஊடகங்களுக்கு வழங்கவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் கைது செய்யப்பட்ட சில சந்தேக நபர்களின் பெயர்களும் இந்த பட்டியலில் உள்ளதை நாங்கள் அவதானித்தோம்”

மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடவடிக்கைகள் பற்றி வினவியபோது “காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பிலான விடயங்களை நீதிமன்றத்திற்கு கூறிய பின்னர் நீதிமன்றம் சட்டமா அதிபருடன் கலந்தாலோசித்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்”  என தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்த விசாரணை நடவடிக்கைகள், கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் 6ம் இலக்க நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த அதிகாரியின் கருத்துப்படி, தண்டனைச் சட்டத்தின் 360, 360(c) மற்றும் 365 பிரிவுகளின்படி சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம் உடல் ரீதியாக மட்டுமன்றி உளரீதியாக நடந்தாலும் அது கடுமையான குற்றமாகவே கொள்ளப்படுகின்றது.

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் 2020 ஜனவரி 1 முதல் 2020 டிசம்பர் 31 வரை 8,165 புகார்களை தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு ஆணையத்திற்கு கிடைத்துள்ளது. (தற்காலிகம்)

அதற்கான இணைப்பு: https://tinyurl.com/jpf3ypfb

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை :

http://www.childprotection.gov.lk/?page_id=134

சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறித்து முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கான அவசர அழைப்பு இலக்கம் 1929 என்பதுடன் இந்த இலக்கத்தினை தொடர்பு கொள்வதன் மூலம் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் இந்த சேவையானது 24 மணி நேரமும் மூன்று மொழிகளிலும் உள்ளது.

மேலதிக விபரங்கள்: http://www.childprotection.gov.lk/?page_id=249