சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களை அச்சுறுத்தும் வகையிலான செய்தி ஒன்று சமூக வலைத்தள பயனர்களால் இரு வாரங்களுக்கு முன்பு அதிகளவில் பகிரப்பட்டிருந்தது.
அரச இலட்சணையுடன் பகிரப்பட்டு வரும் அந்த செய்தியில், “இணையதளம் மூலமாக சிறுவர்கள் சீர்கேட்டு செல்வதனால் 18 வயதுக்குக் குறைந்த சிறுவர்கள் காதல் பாடல்கள் மற்றும் கல்வி சம்பந்தப்படாத நிகழ்ச்சிகள் செய்ய வைக்கும் பெற்றோர்களுக்கு மூன்று மாத சிறை தண்டனையும் ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் வழங்கப்படுவதுடன் அவ் வீடியோ செய்த சிறுவர்களுக்கு இரண்டு வருட சீர்திருத்தப் பள்ளியும் வழங்கப்படும்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
செய்திகளை வெளியிடும் பேஸ்புக் பக்கங்களும் இந்த செய்தியை தங்களது பக்கங்களில் பதிவேற்றியிருந்தன.
முகப்புத்தக பதிவுகளின் (Facebook Posts) ஸ்கிரீன் ஷாட் (Screenshots)
இந்த செய்தி பற்றி ஹேஷ்டேக் தலைமுறை ஆராய்ந்தபோது, ஜனாதிபதி ஊடகப்பிரிவு முன்பு பயன்படுத்திய கடிதத்தலைப்பை (letterhead) ஒத்த கடிதத்தலைப்பில் தமிழ் மொழியில் மாத்திரமே மேற்குறித்த செய்தி வெளியிடப்பட்டிருப்பதையும் நாங்கள் அவதானித்தோம்.
இதனால், ஜனாதிபதி ஊடகப்பிரிவின் தமிழ் பிரிவுக்கான பிரதிப் பணிப்பாளர் கிருஷ்ணசாமி ஹரேந்திரனை தொடர்புகொண்டு இந்த செய்தி பற்றி வினவியபோது, “ஜனாதிபதி ஊடகப்பிரிவு தமிழ் மொழியில் இதுபோன்ற எந்தவொரு செய்தியையும் வெளியிடவில்லை. இந்த செய்தியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கடிதத்தலைப்பானது ஜனாதிபதி ஊடகப்பிரிவின் உத்தியோகபூர்வ கடிதத்தலைப்பு அல்ல.” என்பதையும் உறுதிப்படுத்தினார்.
இவ்வாறான நிலையில், 18 வயதுக்குக் குறைந்த சிறுவர்கள் காதல் பாடல்கள் மற்றும் கல்வி சம்பந்தப்படாத நிகழ்ச்சிகளில் பங்குபற்றினால், பங்குபற்றிய சிறுவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் தண்டிக்கும் சட்டங்கள் இலங்கையில் இருக்கின்றனவா? என்பது தொடர்பிலும் ஹேஷ்டேக் தலைமுறை ஆராய்ந்தது.
இதற்காக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபரும் சட்டத்தரணியுமான நிஹால் தல்துவவை நாம் தொடர்புகொண்டோம்.
“கல்விசாரா நிகழ்ச்சிகளில் சிறுவர்களை ஈடுபடுத்தும் பெற்றோர்களை தண்டிப்பது மற்றும் அந்த நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய சிறுவர்களை சீர்திருத்தப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என்கிற சட்டம் இலங்கையில் இல்லை.” என்றார்.
மேலும், இது பற்றி சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள் போலியானது என்பதையும் எமக்கு உறுதிப்படுத்தினார்.
கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாரிடமும் இதுபற்றி நாம் வினவியபோது, “கல்வி சாரா நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான எந்தவொரு சட்டமும் இலங்கையில் இல்லை.
அவ்வாறு சட்டநடவடிக்கை எடுக்கப்படுமாக இருந்தால் நாட்டில் உள்ள இரண்டு கோடி பேரும் சிறையிலேயே இருக்க வேண்டும்.
இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி போலியானது.
ஊடக வெளியீடு என தலைப்பிட்டு தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையில் யாரால், எப்போது அனுப்பப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் இல்லை. இந்த செய்தியை எவரோ போலியாக வடிவமைத்துள்ளனர்.
மேற்குறித்த போலியான செய்தியில் குறிப்பிடப்படுவதுபோல கல்வி அமைச்சு எந்தவிதமான தீர்மானங்களையும் எடுக்கவில்லை.” என்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் எமக்கு உறுதிப்படுத்தினார்.
கல்வி அமைச்சின் பெயர் குறிப்பிட விரும்பாத மேலதிக செயலாளர் ஒருவரும் மேற்குறித்த செய்தி போலியானது என்பதை எமக்கு உறுதிப்படுத்தியதோடு, “மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் பற்றி நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மட்டுமே கல்வி அமைச்சுக்கு உள்ளது. காதல் பாடல்களுக்கு நடனமாடுவது மற்றும் கல்வி சாரா நிகழ்வுகளில் சிறுவர்கள் ஈடுபடுவதைத் கட்டுப்படுத்துவதற்கான எந்தவிதமான சுற்றுநிரூபத்தையும் கல்வி அமைச்சு வெளியிடவில்லை. கல்வி அமைச்சால் வெளியிடப்படும் சுற்றுநிரூபங்களை அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்கு சென்று பார்வையிடலாம்.” எனவும் உறுதிப்படுத்தினார்.
முடிவுரை: காதல் பாடல்கள் மற்றும் கல்வி சம்பந்தப்படாத நிகழ்ச்சிகளில் சிறுவர்களை பங்குபற்ற வைக்கும் பெற்றோருக்கு தண்டனை வழங்கப்படும் எனவும், அந்த நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளிகளுக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி போலியான செய்தி என்கிற முடிவுக்கு வரலாம்.
ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.