வளர்ப்பு நாயை சிறுத்தையொன்று மெல்ல பதுங்கி வந்து, கவ்வி தூக்கிச் செல்ல முயற்சிக்கும் சீசீடீவி வீடியோ ஒன்று இலங்கையைச் சேர்ந்த சமூகவலைத்தள பயனர்கள் மற்றும் ஒருசில பிரதான ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
இலங்கையில் நுவரெலியா – டயகமவில் இந்த சம்பவம் பதிவாகியிருந்ததாக ஒரு தரப்பினரும் மஸ்கெலியாவிலேயே இந்த சம்பவம் பதிவாகியதாக மற்றொரு தரப்பினரும் சமூகவலைத்தளங்களில் பதிவுகளை இட்டிருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கையைச் சேர்ந்த ஊடகங்கள் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் வெளியிடப்பட்டிருந்த பதிவுகளின் ஸ்கிரின் ஷாட் இங்கே:
இதேவேளை, இந்தியாவின் பிரபல ஊடகங்களான விகடன் மற்றும் மாலைமலர் உள்ளிட்ட ஊடகங்கள், வளர்ப்பு நாயை சிறுத்தை தாக்கும் வீடியோ இந்தியாவின் நீலகிரி மாவட்டத்தில் பதிவாகியிருந்ததாக குறிப்பிட்டு செய்தி வெளியிட்டு இருந்ததை நாங்கள் அவதானித்தோம்.
இந்திய ஊடகங்களில் குறித்த சம்பவம் தொடர்பில் வெளியிடப்பட்டிருந்த செய்திகளின் ஸ்கிரின் ஷாட்கள்
குறித்த வீடியோ, இலங்கை, மஸ்கெலியாவில் நிகழ்ந்த சம்பவம் என இந்த வீடியோவை பதிவேற்றியிருந்த Unknown Hiker SL என்கிற முகப்புத்தக பக்கத்தின் உரிமையாளருடன் நாங்கள் தொடர்புகொண்டு இது பற்றி வினவியிருந்தோம்.
”நாயை சிறுத்தைத் தாக்கும் வீடியோவை சமூகவலைத்தளங்களில் பார்த்தே நான் எனது முகப்புத்தகப் பக்கத்தில் பதிவேற்றியிருந்தேன். மஸ்கெலியாவிலேயே குறித்த சம்பவம் பதிவாகியிருந்ததாகவே நாங்களும் குறிப்பிட்டிருந்தோம். ஆனால், குறித்த வீடியோ இந்தியாவில் பதிவானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. உண்மையில் இந்த வீடியோ எங்கு பதிவாகியிருக்கிறது என்பதுத் தொடர்பான தகவல்கள் எங்களுக்கு தெரியாது.” என கூறினார்.
இதேவேளை, குறித்த வீடியோ (வளர்ப்பு நாயை சிறுத்தைத் தாக்கும் சிசிடிவி வீடியோ) பற்றி வனசீவராசிகள் திணைக்களத்தின் மஸ்கெலியா – நல்லத்தண்ணி அலுவலகத்தைத் தொடர்புகொண்டு நாங்கள் வினவியிருந்தோம், ”நாயொன்றை சிறுத்தை தாக்கும் வீடியோ ஒன்று வைரலாகியிருந்ததை நாம் அவதானித்து அது தொடர்பில் ஆராய்ந்தபோது, இந்தியாவிலேயே இந்த சம்பவம் பதிவாகியிருப்பதை நாம் உறுதி செய்துகொண்டோம். மஸ்கெலியாவிலோ அல்லது டயகமவிலோ இந்த சம்பவம் பதிவாகவில்லை.” என்பதை எமக்கு அவர்கள் உறுதி செய்தார்கள்.
மேலும், இந்தியா – தமிழ்நாடு நீலகிரி மாவட்ட வனத்துறை அதிகாரி கௌதம் என்பவரையும் தொடர்புகொண்டு இதுபற்றி நாங்கள் வினவியிருந்தோம், “வளர்ப்பு நாயை சிறுத்தை தாக்கிய சம்பவம் இந்தியாவில் பதிவான ஒன்று. அது இலங்கையில் பதிவானதல்ல. நீலகிரி மாவட்டத்திலேயே இந்த சம்பவம் பதிவாகியிருந்தது. சம்பவம் பதிவான இடத்துக்கு நேரடியாக நாங்கள் (வனத்துறை அதிகாரிகள்) சென்று ஆராய்ந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தோம்.” என உறுதி செய்தார்.
முடிவுரை: சிறுத்தையொன்று வளர்ப்பு நாயை தாக்கும் சீசீடிவி வீடியோ இந்தியாவின் – நீலகிரி மாவட்டத்தில் பதிவாகியிருந்தபோதிலும், இலங்கை ஊடகங்களும், பேஸ்புக் பயனர்களும் இலங்கையிலேயே குறித்த சம்பவம் பதிவாகியிருந்ததாக தவறான செய்தியை வெளியிட்டிருந்ததால் மக்களும் அதனை நம்பியிருந்தார்கள். எனினும், இந்த சம்பவம் இலங்கையில் பதிவாகவில்லை; இந்தியாவிலேயே பதிவாகியிருக்கிறது.
ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.