Hashtag Generation

இலங்கை மத்திய வங்கி புதிய 10,000 ரூபாய் தாள்கள் எதனையும் வெளியிடவில்லை.

நாட்டின் பொருளாதாரம் குறித்து பல்வேறு தரப்பினரும் பல்வேறு விதமான கருத்துக்களை அரசியல் மேடைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் தெரிவித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் கடந்த வருடம் நவம்பர் மாதம், 13ம் திகதி நிதியமைச்சரும், ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்கு 2024 ஆம் ஆண்டுக்கான புதிய வரவு செலவு திட்டத்தை முன்வைத்திருந்தார். 

வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்ததைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பொருளாதாரம் குறித்த பல கருத்துக்கள் மக்கள் மத்தியில் பேசப்பட்டன. அதில் இலங்கை மத்திய வங்கி புதிதாக 10,000 ரூபாய் பெறுமதி வாய்ந்த பணத்தாள்  ஒன்றை வெளியிட்டுள்ளதாகக் கூறி பல பதிவுகள் சிங்கள மற்றும் தமிழ் சமூக வலைதள பயனாளர்களிடையே பகிரப்பட்டதை நாங்கள் அவதானித்தோம்.

இவ்வாறு பகிரப்பட்ட ஒரு சில முகநூல் பதிவுகளின் (Facebook Posts) ஸ்கிரீன் ஷாட்கள் (Screenshots) கீழே உள்ளன.

இந்த புதிய பணத்தாள் பற்றி முதலில் கடந்த நவம்பர் மாதம் சிங்கள சமூக வலைத்தள பகுதிகளிலும் புகைப்படங்கள் பகிரப்பட்டு பேசப்பட்டதை தொடர்ந்து ஹேஷ்டேக்  தலைமுறை இதன் உண்மை தன்மை பற்றி ஆராய்ந்தோம்.

இந்த முகநூல் பதிவுகளில் காட்டப்பட்டுள்ள பணத்தாள்கள் எடிட் செய்து திருத்தப்பட்டவை என்பதை உற்று நோக்கினால் அவதானிக்க முடியும்.

முதலில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட பணத்தாள்கள் பற்றி ஆராய்ந்தோம். அதிலே 15.11.2023 என்ற திகதி குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி பார்த்தால் தற்போதைய நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ கையொப்பம் அதிலே இருக்க வேண்டும். ஆனால் அதிலே ஜனாதிபதியுடைய கையொப்பத்திற்கு பதிலாக வேறு ஒரு கையொப்பமே உள்ளது.

மேலும், இலங்கை மத்திய வங்கியினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட பணத்தாள்களில் பாதுகாப்பு குறியீடுகள் காணப்படும். ஆனால் இந்த புதிய பணத்தாளில் அவை காணப்படவில்லை.  

குறிப்பாக இலங்கையில் புழக்கத்தில் உள்ள ஒவ்வொரு நாணயத்தாளிலும் அவற்றை அடையாளம் காண்பதற்கு, அதன் “வாட்டர்மார்க்” ( Watermark) மிகவும் முக்கியமானது. 

இலங்கையில் பாவனையில் உள்ள ஒவ்வொரு பணத்தாளிலும் வலது பக்க கீழ் மூலையில் வெவ்வேறு பறவைகளின் உருவங்களின் “வாட்டர்மார்க்” ( Watermark) உள்ளது.

அவற்றின் படங்களைக் கீழே காணலாம்.

எனினும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட நாணயத் தாள்களில், குறித்த ‘வாட்டர்மார்க்’ ( Watermark) தெளிவாக இல்லை.

மேலும், பணத்தாளின் இடது பக்கத்தில் செங்குத்தாக சில புள்ளிகள் காணப்படும். பார்வைக் குறைபாடு உள்ளவர்களால் எளிதில் பணத்தாள்களின் மதிப்பை அடையாளம் காணும் வகையில் அவை பணத்தாள்களில் பயன்படுத்தப்படுகின்றன.

கீழே உள்ள படங்கள் இலங்கையில் தற்போது பயன்பாட்டில் உள்ள நாணயத் தாள்களில் அச்சிடப்பட்ட புள்ளிகளின் எண்ணிக்கையைக் காட்டுகிறது.

அதன்படி, இருபது ரூபாய் நோட்டில் ஒரு புள்ளி, ஐம்பது ரூபாய்த் தாளில் 2 புள்ளிகள், நூறு ரூபாய்த் தாளில்  3 புள்ளிகள், ஐநூறு ரூபாய்த் தாளில்  4 புள்ளிகள், ஆயிரம் ரூபாய்த் தாளில்  5 புள்ளிகள், ஐயாயிரம் ரூபாய்த் தாளில்  6 புள்ளிகளும் உள்ளன.

முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவி வரும் பத்தாயிரம் ரூபாய் பணத்தாளில் 7 புள்ளிகள் இருப்பது இது குறித்து மேலும் ஆராய வழிவகுத்தது.

போலி நாணயத் தாள்களை எவ்வாறு கண்டறிவது என்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு, இங்கே பார்வையிடவும். மேலும் நாணயத் தாள்களில் உள்ள பாதுகாப்புக் குறிகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, இங்கே செல்க.

நாம் இந்த புதிய பணத்தாள் குறித்து மேலும் ஆராய்வதற்காக இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ இணையதளத்தை ஆராய்ந்தோம். அதிலே புதிதாக வெளியிடப்பட்ட 10,000 ரூபாய் நாணய தாள் பற்றிய எந்த ஒரு தகவலும் காணப்படவில்லை. 

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை இங்கே பார்வையிடலாம்.

இது பற்றிய மேலதிக விசாரணைகளுக்காக நாம் இலங்கை மத்திய வங்கியின் விசாரணை பிரிவை தொடர்பு கொண்டோம். அப்போது அவர்கள், “10,000 ரூபா பெறுமதியான நாணயத்தாள்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை” என்பதை உறுதிப்படுத்தினர். அத்துடன் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்ற புகைப்படங்கள் போலியானவை எனவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்தது. 

இலங்கையில் சுற்றோட்டத்திலுள்ள நாணயத் தாள்கள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு, இங்கே பார்க்கவும்.

மேலும், மேற்கண்ட முகநூல் பதிவுகளில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படம் “ரொய்டர்” செய்தி சேவையால் வெளியிடப்பட்ட ஒரு புகைப்படத்தை எடிட் செய்து உருவாக்கப்பட்ட ஒரு புகைப்படம் என்பதை உற்று நோக்கினால் கண்டுபிடிக்க முடியும். 

உண்மையான புகைப்படம் கீழே காட்டப்பட்டுள்ளது.

முடிவுரை : இலங்கை மத்திய வங்கி 10,000 ரூபாய் நாணயத் தாள்கள் எதையும் புதிதாக வெளியிடவில்லை. தற்போது முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்ற 10,000 ரூபாய் புதிய நாணயத் தாள்களின் புகைப்படம் போலியானது.

ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.