மலையகக் கவிஞர் ஒருவரின் கவிதைகள் அடங்கிய கவிதைத் தொகுப்பு நூல் ஒன்றுக்கு, இந்தியாவைச் சேர்ந்த NOBEL WORLD RECORD PVT LTD என்கிற தனியார் நிறுவனம் வழங்கிய NOBEL WORLD RECORD என்கிற விருது கடந்த காலங்களில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
குறிப்பாக, மலையக கவிஞருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளதாகக் கூறி பேஸ்புக்கில் திரிபுப்படுத்தப்பட்ட பல செய்திகள் கடந்த காலங்களில் அதிகமாகப் பகிரப்பட்டிருந்த நிலையில், அது பற்றி அவதானித்த ஹேஷ்டேக் தலைமுறை அவ்வாறு பகிரப்பட்ட செய்தி தவறானது என உறுதி செய்திருந்தது.
இவ்வாறான நிலையில், “NOBEL WORLD RECORD PVT LTD பணத்தைப் பெற்றுக்கொண்டு உலக சாதனை விருதுகளை வழங்குகிறது” என்கிற அர்த்தத்தில் Riyas Mohamed என்கிற பேஸ்புக் கணக்கில் பதிவொன்று இடப்பட்டிருந்தது.
இந்த பதிவைத் தொடர்ந்து, NOBEL WORLD RECORD PVT LTD நிறுவனம் பற்றி பேஸ்புக்கின் தமிழ் பயனாளர்கள் பலர் மீண்டும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
பேஸ்புக் பதிவின் (Facebook Posts) ஸ்கிரீன் ஷாட் (Screenshots)
குறித்த பேஸ்புக் பதிவில் உள்ள வாட்ஸ்அப் (WhatsApp) ஸ்கிரீன் ஷாட்கள்.
இந்தியாவைச் சேர்ந்த NOBEL WORLD RECORD PVT LTD என்கிற தனியார் நிறுவனத்துக்கும் இலங்கையைச் சேர்ந்த Riyas Mohamed என்கிற நபருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலே இவை.
இந்த கலந்துரையாடலை சுருக்கமாக சொல்வதாக இருந்தால், “என்னுடைய மகளுக்கு ஓவியம் வரையும் திறமை இருக்கிறது. எனவே, அவருக்கு ஓவியம் வரைதலில் ஏதாவதொரு சாதனையை புரிய முடியுமா? அது பற்றி எனக்கு ஆலோசனை வழங்க முடியுமா?” என ரியாஸ் மொஹமட் NOBEL WORLD RECORD PVT LTDயிடம் வினவுகிறார்.
ஓவியம் வரைதலை சாதனையாகப் பதிவு செய்ய முடியும் என ஆலோசனை வழங்கும் NOBEL WORLD RECORD PVT LTD, ஓவியம் வரையும் வீடியோ ஒன்றை தங்களுக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்கிறது.
ரியாஸ் வீடியோவை அனுப்பி வைத்தப் பின்னர், வீடியோ அடிப்படையாக வைத்து அதனை சாதனையாக பதிவு செய்ய முடியும் என NOBEL WORLD RECORD PVT LTD கூறுவதோடு, இந்த சாதனைக்கான தலைப்பு (TITLE) எவ்வாறு அமைய வேண்டும் என ரியாஸ் மொஹமட்டிடமே வினவுகிறது.
அது மட்டுமல்லாது, மேற்குறித்த சாதனைக்கான விருதை பெறுவதற்கும் அதனை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கும் கட்டணமாக 10,500 (இந்திய ரூபாய்) அறவிடப்படும் எனவும் NOBEL WORLD RECORD PVT LTD ரியாஸிடம் கூறுகிறது.
10,500 ரூபாய் என்பது அதிகளவான கட்டணம் எனவும், இந்தியாவில் உள்ள சாதனைகளை பதிவு செய்யும் வேறு நிறுவனங்களில் 3000 – 5000 ரூபாய்க்கு இந்த சாதனையை பதிவு செய்துகொள்ள முடியும் என ரியாஸ் பதிலளிக்கிறார்.
இது பற்றி மேலும் அறிய ரியாஸ் மொஹமட்டை ஹேஷ்டேக் தலைமுறை தொடர்புகொண்டது.
“NOBEL WORLD RECORD PVT LTD இன் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள +91-8877887768 என்கிற வாட்ஸ்அப் (WhatsApp) தொடர்பு இலக்கத்தின் ஊடாக இவர்களை நான் தொடர்புக்கொண்டேன்.
இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள பல நிறுவனங்கள் போலியான பல சாதனை விருதுகளை வழங்கி வருகிறது. இந்தியாவின் ஒவ்வொரு தெருமுனையிலும் இந்த கம்பனிகள் இருக்கின்றன. எந்தவிதமான வரையறைகளும் இல்லாமல் இந்த நிறுவனங்கள் விருதுகளை வழங்கி வருகிறார்கள். பணம் செலுத்தினால் விருது கிடைக்கும் என்கிற நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. NOBEL WORLD RECORD PVT LTD வழங்கும் விருதின் பெயர் மட்டுமே உலக சாதனை, உள்ளுக்குள் சென்று பார்த்தால் அங்கீகரிக்கப்பட்ட விருதுகளை இந்நிறுவனம் வழங்குவதில்லை என்பது தெளிவாகிறது.
இந்தியாவில் இயங்கும் இதுபோல பல நிறுவனங்களுக்கு இலங்கையில் முகவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் ஊடாக இந்த போலியான சாதனை விருதுகள் இலங்கையில் விளம்பரப்படுத்தப்படுகின்றன. சிறுவர்களை உலக சாதனைக்கு பழக்கப்படுத்துவது ஆரோக்கியமானதல்ல. சிறுவர்களுக்கு மன அழுத்தங்களை வழங்கி பிரயோசனமற்ற விடயங்களில் ஈடுபடுத்தி அதனை சாதனை என்கிறார்கள்.” என ரியாஸ் மொஹமட் கூறினார்.
NOBEL WORLD RECORD PVT LTD இன் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள +91-8877887768 என்கிற வாட்ஸ்அப் (Whatsapp) தொடர்பு இலக்கத்தின் ஊடாக நாமும் குறித்த நிறுவனத்தை தொடர்புகொண்டிருந்தபோது அவர்கள் எம்மிடமும் வீடியோக்கள் இருக்கின்றனவா என்றே வினவினார்கள்.
வாட்ஸ்அப் (WhatsApp) ஸ்கிரீன் ஷாட்.
ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.