Hashtag Generation

கஸா குழந்தைகளுக்காக ஜனாதிபதி தனி நிதியம் அமைத்தாரா?

2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி  இஸ்ரேல், பலஸ்தீன் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து காஸா பகுதி மிகவும் பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் அங்கு வாழும் சிறுவர்கள் பசியால் மரணமடைக்கின்ற நிலைமைகள் அதிகரித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளன. சர்வதேச ஊடகங்களான அல்ஜசீரா, ஏ.எப்.பி, சி.என்.என் ஆகியன முறையே இந்த விடயத்தினை விரிவாக அறிக்கையிட்டுள்ளன. அவற்றின் இணைப்புக்கள் இங்கே, இங்கே, இங்கே

இவ்வாறான நிலையில், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காஸா சிறுவர்களுக்கு உதவுவதற்கான நிதியத்தினை ஆரம்பித்தமைக்கு நன்றிகளைத் தெரிவிப்பதோடு, உதவித்தொகையை வழங்குவதற்கான வங்கி கணக்கு இலக்கம் மற்றும் வைப்புச்செய்த பணத்தை அனுப்புவதற்கான தொலைபேசி இலக்கம் ஆகியன குறிப்பிடப்பட்டு பதிவொன்று முஸ்லிம் மக்கள் மத்தியில் சமூக ஊடகங்கள் ஊடாக பிரசாரப்படுத்தப்பட்டு வருகின்றது.

குறிப்பாக ரமழான் மாதத்தில் பிறருக்கு உதவுகின்றமைக்கு பலரும் முன்வருவார்கள் என்ற அடிப்படையில் தான் பல்வேறு சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.  

அதற்கான ஸ்கிரீன் ஷாட் இங்கே இணைக்கப்படுகின்றது. 

“காஸா எல்லை பகுதிகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்காக நிதியமொன்றை காஸாவில் நிறுவுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் 2024-02-26 அன்று முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்தது” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கலாநிதி. பந்துல குணவர்த்தனவைத் தொடர்பு கொண்டு வினவியபோத தெரிவித்தார்.

இதேநேரம், 2024-02-27ஆம் திகதி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வமான ஊடகப்பிரிவினால் அமைச்சரவை அனுமதி மற்றும் வங்கி கணக்கு இலக்க விபரம் உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்பட்டன. அதன் இணைப்பு இங்கே

இதனடிப்படையில், சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பப்பட்டு வருகின்ற பதிவில் உள்ள வங்கி கணக்கு இலக்கம், வங்கிக் கிளை,  தொலைபேசி இலக்கம் ஆகியன தொடர்பில் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது. 

இதன்போது, சமூக ஊடகங்களில் பிரசாரமாகும் தரவுகளுக்கும்  ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் அறிவிக்கப்பட்ட தரவுகளுக்கும் இடையில் எவ்விதமான முரண்பாடுகளும் காணப்படவில்லை.

ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.

Conclusion : காஸா எல்லை பகுதிகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்காக (Children of Gaza Fund) இனை காஸாவில் நிறுவுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதை அடுத்து 11.04.2024 க்கு முன்னர், இலங்கை வங்கியின் (7010) தப்ரோபன் (747) கிளைகளில் 7040016 எனும் கணக்கு இலக்கத்திற்கு ‘ஜனாதிபதியின் செயலாளர்’ என்ற பெயரில் வைப்பிலிடுமாறும் அதற்கான பற்றுச்சீட்டை 077- 9730396 எனும் இலக்கத்தின்     ஊடாக அனுப்பி வைக்குமாறும் ஜனாதிபதி செயலகம் கேட்டுக்கொண்டுள்ளமை உண்மையாகும்.

ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.